KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/98. அந்தரத்தில் தொங்கினாலும் ஆனந்தமாய் இருக்கலாம்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

98. அந்தரத்தில் தொங்கினாலும் ஆனந்தமாய் இருக்கலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அந்த மனிதன் புலியிடமிருந்து தப்பிக்க மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி மலையின் விளிம்புக்கே வந்து விட்டவன்... பதட்டத்தில் தடுமாறி விழுந்தான்!

மலையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தவன் கையில் சிவப்புப் பழங்கள் நிறைந்த பெரிய புதர் அகப்பட்டது. அதைப் பற்றிய அந்த மனிதன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

மேலே புலி, கீழே பள்ளத்தாக்கு! இதையெல்லாம் தாண்டி, பிடித்திருக்கும் புதரோ வலுவிழந்து கொண்டிருந்தது.

அந்த ஊசலாடும் கணத்தில், அந்த மனிதனின் கண்களில் புதரில் பழுத்துத் தொங்கிய சிவப்புப் பழங்கள் தென்பட்டது. ஒரு கையால் சிவப்புப் பழத்தை பறித்து வாயில் போட்டுக் கொண்டார். சுவைக்க ஆரம்பித்தார். 'என்ன ருசி! என்ன இனிமை!' அதுவரை அவரின் வாழ்வில் ஒரு சிவப்புப் பழம் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை.

"ஐயோ கீழே விழுந்தால் என்னாவோம்". என்ற கற்பனைகள் அந்த மனிதனிடம் அந்த நிமிடத்தில் இல்லை. அதனால்தான் பயத்திலேயே சாக வேண்டிய சூழலில் கூட ஒரு பழத்தின் இனிமையை இனிமையாக ருசிக்க முடிந்தது.

• உங்களின் பயம், எரிச்சல், துக்கம் எல்லாமே யாரோ அல்லது ஏதோ ஒன்றைச் சுற்றி உருவான கற்பனைகளால் உருவாகுபவைதான்.

நடந்த அல்லது நடக்கப் போகிற ஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொருத்து நிம்மதியும், நிம்மதியின்மையும் நிர்ணயமாகிறது.

99. கலையாத கனவுகள்

டி.வி. நிகழ்ச்சியொன்றில் முகுந்த் மனைவியிடம், “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்” எனக் கேட்டதற்கு,

“என் இரண்டு மகன்களும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்” எனச் சொன்னார். நிருபர், “மகன்களின் வயது என்ன?”

“டாக்டருக்கு வயது ஆறும், இன்ஜினியருக்கு வயது மூன்றும் ஆகிறது” எனச் சொன்னார் கலையாத கற்பனைகளோடு!

கற்பனை வலைக்குள் சிக்கிக்கொண்ட மின்மினிப் பூச்சிதான் மனம். தப்புவிக்கப்பட வேண்டும்.

பூச்சி விளக்கம்

100. மோசத்தை - மோட்சமாக்க

தியான சிகிச்சையின்போது, “நானொரு பாவி. முரடன். ஒரு காலத்தில் திருடன்! நானெல்லாம் புனிதமான தியானத்தை செய்யலாமா?” என ஒரு நபர் என்னிடம் கேட்டார்.

அவரிடம், “நீங்கள் கேட்பது.... ‘ஒரு மருத்துவரிடம் சென்ற நோயாளி, என் உடல் மோசமாயிருக்கிறது. உங்களின் புனிதமான மருந்துகளை நானெல்லாம் எடுத்துக் கொள்ளலாமா?' எனக் கேட்பது போலுள்ளது” என்றேன். அந்த நபரின் கண்களில் சந்தோஷம் பொங்கியது!

101. பகிர்தலும் பாடமாகும்

இளம் எழுத்தாளராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை அந்த எழுத்தாளர் பகிர்ந்து கொண்டார்.

"சாமி, அது நான் எழுதிய முதல் புத்தகம். அந்தப் புத்தகம் பற்றி மற்றவரின் விமர்சனங்களைக் கேட்பேன். என் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏதோ பேச்சுவாக்கில் இப்படிச் சொன்னேன்...

'கதை எழுதுவதற்குப் பெரிய புத்திசாலித்தனமெல்லாம் தேவை இல்லை', எனப் பேசியதற்கு அவர் தந்த பதில் -

'ஆமாம் சார்! உங்களுடைய கதைப் புத்தகத்தை படித்தவுடன் நானும் அதே முடிவுக்குத்தான் வந்தேன்' என்றார்.

இந்தப் பதிலால் நான் ஆடிப்போனாலும், அதைப் பாடமாக்கிக் கொண்டேன்" என்றார்.

⬤ பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிக் காட்டவும் வல்லது! பகிர்தல் ஒருவித வளர்ச்சி.

102. பண்படப் பகிர்ந்து கொள்ளுங்கள்

90 வயது மூதாட்டியிடம் முதியோர் தினத்தன்று, டி.வி. நிகழ்ச்சியில் பின்வருமாறு கேட்கப்பட்டது.

"இந்த வயதிலும் உங்களை சந்தோஷப்படுத்துவது எது?" என்ற கேள்விக்கு, "என் தொழில்!" எனச் சொன்னார். ஆச்சரியமடைந்த நிருபர், "என்ன தொழில் அது?" என்று கேட்க, "என்னை விட வயதில் மூத்த இரு மூதாட்டிகளைக் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவும்போது நான் பகிர்ந்துகொள்ளும் நிமிடங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை" என்றார் மூதாட்டி.

⬤ பகிர்தல் தியானம். பகிர்தல் பண்பு. பகிர்தல் ஆனந்தம். பகிர்தல் அன்பு.

முதியவர் தம்பதியினர்

104. இந்த வார்த்தைகளுடன் வாழுங்கள்

சூஃபி ஞானியிடம் நாத்தீகர், "கடவுள் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார்?" எனக் கேட்டதற்கு,

"கடவுள்... மலைக்குள் தூங்குகிறார், மலர் மற்றும் தாவரங்களுக்குள் மயங்கிக் கனவு காணுகின்றார், மிருகங்களுக்குள் அசைகிறார், மனிதனுக்குள் விழித்திருக்கிறார்" எனச் சொன்னார் ஞானி.

● மேலுள்ள வாக்கியங்களை ஆழமாகத் தியானியுங்கள். அது நிஜமாகட்டும்!

portrait sketch of a man