KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/90. இன்ப சாதனை செய்யுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

90. இன்ப சாதனை செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ப்ரசன்ஜித் புத்தருடைய தந்தையின் நண்பர். அவர் புத்தரை சந்தித்த போது... புத்தரிடம் "நாடோடி பிச்சைக்காரன்போல் வாழும் வாழ்வை விட்டு அரண்மனைக்குச் செல்" என்று வற்புறுத்தினார்.

புத்தர், "உண்மையைச் சொல்லுங்கள். அந்த அரச வாழ்க்கை ஒரேயொரு நாளாவது உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்ததா?" எனக் கேட்டவுடனே... ப்ரசன்ஜீத் தலைகுனிந்தார். சில நிமிடங்களுக்குப் பேசவேயில்லை.

• 'துன்பப்படுகிறோம்' எனத் தெரிந்தும் துன்பப்படுவது, அதைப் பூசிமெழுகுவது... என்ற இரண்டும்தான், மீண்டும் மீண்டும் உங்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. துன்பத்தை துடைத்தெறிந்து இன்ப சாதனை செய்யுங்கள்.

Cartoon of a man wearing striped shorts

91. எது அவமானம்?

பிரான்ஸில் குழந்தைகளின் படிப்புச் செலவைக் கூட அரசாங்கமே செய்கிறது. அங்கே சோம்பேறியாய் வாழும் குல்ஜித்திடம் அவர் மனைவி சொன்னார், "எனக்கு அவமானமாக இருக்கிறது".

உடனே "எனக்கும்தான்" என்றார். "நான் எதைப் பற்றி சொல்கிறேனென்பதே தெரியாமல், எனக்கும்தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்" என மனைவி கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்த குல்ஜித், "சரி சரி... சொல்ல வந்ததை முதலில் சொல்" என்றார் அழுத்தமான குரலில்.

"குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது. வேலைக்கு போகாத உங்களுக்கு கருணை பென்ஷனை உங்களின் கம்பெனி தருகிறது. வீட்டுச் செலவை என் தந்தை பார்த்துக் கொள்கிறார். உடைகளை உங்களின் அண்ணன் வருடா வருடம் வாங்கித் தருகிறார். கார் செலவை என் அண்ணன் பார்த்துக் கொள்கிறான்.... உங்களுக்கு இதில் ஏதும் அவமானமாகத் தோன்றவில்லையா?" என மனைவி கேட்டதற்கு,

குல்ஜித், "ஆமாம்! எனக்கு கூட அவமானமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பேர் இவ்வளவு செய்தும் உன் தம்பி மட்டும் நமக்கு ஒத்த காசுகூட செலவு செய்வதேயில்லை. இது பெருத்த அவமானம்தான்!" என்றாராம்.

மற்றவர்கள் எனக்குச் செய்வது அவர்களின் கடமை! அதை ஏற்றுக்கொள்வது என்னுடைய கருணை! எனும் நோக்கில்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் இயங்குகிறது. கடமை, கருணை வலைகளில் சிக்கிக் கொள்வது போன்ற மடமை வேறெதுவுமில்லை. கடமை செய்ய, மடமை தண்டிக்கப்பட வேண்டும்.

92. யார் ஆன்மீகவாதி?

வங்காளத்தில் மதபோதகர் ஒருவருக்கு முப்பது வருடங்களாக சேவையைத் தன் கடமையெனக் கருதிச் செய்த அப்பெண்மணிக்கு "இவர் உண்மையான ஆன்மீகவாதிதானா?" என்ற சந்தேகம் திடீரெனத் தோன்றியது.

உடனே அவரைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி அன்றிரவு அந்த மதப் போதகரை விலைமாது தொந்தரவு செய்ய வேண்டும். மனம் தடுமாறச் செய்ய வேண்டும்.

முடிவு செய்ததுபோல் இரவு அந்த இளம்பெண் வந்து சேர்ந்தாள். "யாரை சோதிக்கிறாய். மூடப்பெண்ணே... போ வெளியே. நான் நெருப்பு! உடனே இந்த இடத்தைக் காலி செய்" எனக் கொதித்தெழுந்து, உடல் நடுங்க அப்பெண்ணை திட்டி இரவென்றும் பாராமல் வெளியே அனுப்பிவிட்டார்.

விலைமாதுவிடமிருந்து நடந்ததை அறிந்த பெண்மணி மிகக் கோபத்தோடு, "ஐம்பது வயதானவர் பக்குவமடைந்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் கருணையைப் பற்றி அவர் செய்த போதனைகளை அவர் கொஞ்சமாவது கடைப்பிடித்திருக்க வேண்டாமா?

உன் தவறைத் தடுப்பதாக நினைத்து, அவர் சுயக்கட்டுப்பாடில்லாமல் கோபப்படும் சராசரி மனிதனைப் போல் நடந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு.

கருணை என்ற அடிப்படை ஆன்மீகக் குணம் கூட இல்லாதவருக்காகவா இவ்வளவு நாள் கடமை செய்தேன். இப்படிப்பட்டவர் இருந்தாலென்ன, இறந்தாலென்ன" என சொல்லி சலித்துக் கொண்டு அன்றிரவோடு அந்த இடத்தைக் காலி செய்து சென்று விட்டார் அப்பெண்மணி.

வெறும் கடமை போலி. கருணையில்லாத கடமை ஏதாவதொரு ஆழ்மனக் குறிக்கோளை மையமாக வைத்தே செயல்படும். அது இன்றோ நாளையோ சலிப்பைத் தரும்.