71. உரையாடல் ஒரு உன்னதக் கலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிரகம்பெல்லின் தொலைபேசி முறை அப்போதுதான் புழக்கத்திற்கு வந்து சூடுபிடித்துக் கொண்டிருந்தது. புதியது என்பதால் தொலைபேசிக் கட்டணம் வெகு அதிகமாக இருந்தது.
எப்போதும் படபடப்பாக இருக்கும் அந்த ஜெர்மானிய தூதுவர் ஜப்பான் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் பேசி முடிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது. நான் பேசும்போது நீங்கள் குறுக்கே எதுவும் கேட்கக் கூடாது. கவனமாகக் கேட்க வேண்டும். எனக்கு ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் அதை இப்போது சொல்லக் கூடாது. தந்தி மூலமாக பதில் சொல்லலாம். புரிந்ததா” என முன்னுரை அளித்துத் தான் சொல்ல வேண்டிய அலுவலகச் செய்திகளை வேகவேகமாகச் சொல்லி முடித்தார்.
மேலும் தொடர்ந்த ஜெர்மானிய தூதுவர், “சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன். 3 நிமிடம் முடிய இன்னும் 30 வினாடிகள் இருக்கிறது. நீங்கள் ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு,
ஜப்பான் தூதரகத்திலிருந்தவர் சொன்ன பதில், “ஆமாம்... எல்லாம் சொன்னீர்கள். மிக வேகத்தோடு படபடப்பாக நீங்கள் சொல்லி முடித்த செய்தியின் ஒரு வார்த்தை கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”.
ஜெர்மானிய தூதுவர், “இதை ஏன் முன்பே சொல்ல வில்லை?” எனக் கேட்க, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர், “குறுக்கே பேசக் கூடாதென்று சொன்னது நீங்கள்தானே!” என்று சொன்னவுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
படபடப்பும், தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும். அவ்வளவே, அகநடுக்கம் தான் உங்களின் சாதா பிரச்சனைகளை உடல் மன வேதனைகளாக மாற்றுகின்றன.