62. எப்படி அன்பு செய்யக்கூடாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஞாயிறு வகுப்பில் போதகர் சொன்னார், "அன்பு செய்யுங்கள். வாயில்லாப் பிராணிக்குக் கூட ஊறு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்த சம்பவங்களைச் சொல்லுங்கள்..."
ஜான் முறை வந்தபோது வேகமான குரலில் "ஒரு முறை, ஒருவன் நாயை எட்டி உதைத்தான்... நான் அவனை எட்டி உதைத்தேன்" எனத் தன் அன்பை நினைவுகூர்ந்தானாம்.
• கிளர்ச்சியாளனின் அன்பில் கூட அடாவடித்தனம் எட்டிப்பார்க்கும். இவன் சாந்தமாக வேண்டும்.

63. சொல் பேச்சை கேட்க எதுவும் சொல்லாதீர்கள் ....
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பெண்மணி வெகு கலக்கத்தோடு பேசினார், "சாமி, என் பையனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அடிவயிற்றில் கிலி பற்றிக் கொள்கிறது".
"கவலைப்படாதீங்கம்மா... தைரியமா என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்" என்றேன்.
"சாமி அவன் என் சொல்பேச்சு கேட்பதேயில்லை. அடிக்கடி பக்கத்து வீட்டு பெண்களிடம் வம்பு செய்கிறான். பக்கத்து தெருவில் இருக்கும் பையன்களோடு போன வாரம் சண்டை. சின்னப் பிரச்சனைக்குக் கூட சீறுகிறான். அடிதடி வரை சென்றுவிடுகிறான்.
வீட்டில் தங்கமாட்டேன்கிறான்... தெருமுனையில் இருப்பதையே விரும்புகிறான். இப்படியே போனால் அவன் நான் பார்த்து வைக்க போகும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டான். ஏதாவது ஒரு பெண்ணை எதிர்காலத்தில் இழுத்துகிட்டு என்னை விட்டு ஓடிப்போய் விடுவானோ எனப் பயமாக இருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் வயிறே கலங்குகிறது சாமி" என்றார்.
மகனை விட, மகனின் திருமணம் மூலம் தனக்கு கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசிய அந்த பெண்மணியிடம், "பயப்படாதீங்கம்மா... உங்கள் பையனை ஒரு நாள் ஆஸ்ரமத்திற்கு அழைத்து வாருங்கள். உங்கள் பையனோடு தனியா உட்கார்ந்து பேசுகிறேன். உங்கள் பையனின் மனம் சரியானால் எல்லாம் சரியாகிவிடும்" எனச் சொன்னவுடன்,
சாமி, இன்னொரு நாள் எதற்கு! என் பையனை கையோடு அழைத்து வந்திருக்கிறேன். இப்போதே அவனோடு நீங்கள் பேசலாம்" எனச் சொல்லி, தன் இடுப்பில் இருந்த நான்கு வயது சிறுவனை இறக்கி விட்டார் அப்பெண்மணி. அங்கு நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
• ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு வகையில் இது போன்ற ஒரு பயத்திற்குள் சிக்கி அந்த பயத்தில்தான் வாழ்கிறான். இது மிகைப்படுத்தல் அல்ல. அந்த பெண்ணுக்கு அதுதான் பயம்.
64. பயம் பெட்டிப் பாம்பாக .....
"பயத்தை தைரியமாய் எதிர்கொள்வதெப்படி விளக்குங்கள்" என பக்தர் ஒருவர் கேட்டார்.
"இரவில் தனியே வரும்போது நாயொன்று துரத்தினால், எவ்வளவு வேகமாய் ஓடுவீர்கள். அந்தச் சூழ்நிலை பயம்! ஆனாலும் தைரியத்தோடு எதிர்கொள்ளவில்லையா? எங்கிருந்தோ உங்களுக்குள் சக்தி பொங்கியது நிஜம்தானே! ஏன் நாயும், பேயும் மட்டும்தான் நம்முள்ளிருக்கும் சக்தியை பொங்கச் செய்ய வேண்டுமா? அதை நாமே செய்யலாமே. பயத்தை தைரியத்தோடு அணுகுங்கள். பயம் மறையும்" என்றேன்.
• பயத்தை கண்டு பயந்து விடாமல் பயமே பயப்படுமளவுக்கு பயத்தை விழிப்புணர்வோடு அணுக ஆரம்பியுங்கள். பிரச்சனை தீர்ந்தது.
