61. எப்படி நிறுத்துவது?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புதிய சேண்ட்ரோ கார் ஒன்றை வாங்கியிருந்தார் நிட்டி. அக்கம்பக்கத்தாரைப் பார்த்து ஏதோவொரு மோகத்தில் கார் வாங்கி விட்டார். ஆனால் கார் ஓட்டுவதைப் பற்றி நிட்டிக்கு முழுமையாகத் தெரியாது.
ஏற்றத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்து ஏதேதோ நிட்டி முயற்சி செய்து கொண்டிருந்தபோது, காரின் பிரேக் ரிலீசாகி, இறக்கம் நோக்கி கார் ஓட... ஏதேச்சையாக கியரிலும் கிளட்சிலும் கால், கை பட, கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
கார் ஓடுவதை குஷியாகக் பார்த்த நிட்டி ஸ்டியரிங்கை பிடித்து ஆட்ட, அவர் திருப்பும் திசையில் கார் திரும்பியது.
காலியாக இருந்த ஹைவேயில் அதே குஷியோடு கார் ஓட்டிக்கொண்டு சென்ற நிட்டிக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது, அது... ‘எப்படிக் காரை நிறுத்துவது!!!’
எவ்வளவு யோசித்தும் நிட்டிக்குத் தெரியவில்லை. நிட்டியைப் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டன.
அதிகபட்சம் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது ஸ்டியரிங் மட்டுமே!
அவருக்கு எதிரே தெரிந்த ஒரு புளிய மரம் நோக்கி வண்டியைத் திருப்பினார். பெரிய குலுக்கலோடு வண்டி மோதி நின்றது.
• இக்கதையில் நிட்டி காரை ஓட்டினாரா? இல்லை கார் நிட்டியை ஓட்டியதா? கிளர்ந்தெழுவதும், பொங்கியெழுவதும் முழுக்க முழுக்க உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வளர, உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.