53. தவறை ஏன் தவறாக புரிந்துகொள்கிறீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஊர் வெளியே தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கடுமையான ஒழுக்கவாதி. நீதிநெறிப்படி தவறாமல் வாழ முயற்சிப்பவர்.
ஒரு நாள் இரவு அவரின் குடிசைக்கு வெளியாள் ஒருவன் வந்தான். அவன், "ஐயா இன்று இரவு மட்டும் நான் இங்கு தங்க அனுமதிப்பீர்களா?" எனக் கேட்டான். தபஸ்வி அதற்கு அனுமதி கொடுத்ததோடு, இரவு உணவும் சேர்த்துக் கொடுத்தார்.
அவர் எழும் முன்பே அவன் எழுந்து சொல்லிக் கொள்ளாமல் நழுவி விட்டான். விடிந்ததும் அங்கு காவலர்கள் வந்தார்கள். நேற்றிரவு இங்கு யாராவது வந்தார்களா என்பது பற்றி விலாவாரியாக விசாரித்தார்கள். விசாரணையின் முடிவில், தபஸ்வி, "அவன் யார்? எதற்காக இவ்வளவு விசாரிக்கிறீர்கள்" எனக் கேட்டதற்கு, "திருடன்" என்றனர்.
"ஐயோ! திருடனுக்கு உதவியது பாவமாயிற்றே..." என அந்த நீதிநெறியாளர் புலம்பிக் கொண்டிருக்கும்போது, அவரை விட சப்தமாக இன்னொருவர் புலம்பும் சப்தம் கேட்கவே, தான் புலம்புவதை நிறுத்திவிட்டு "யார் அது?" எனக் கேட்டார்.
"கடவுள்" எனப் பதில் வந்தது.
"கடவுளே! நீங்கள் ஏன் புலம்ப வேண்டும்?" எனக் கேட்டதற்கு, "ஒரு நாள் இரவு நீ அவனைப் பாதுகாத்து உதவியதே தவறென்றால், முப்பது வருடங்களாக அவனை காக்கும் நான்தானே பெரும் தவறு செய்தவன். நான்தானே பெரும்பாவி!?" எனக் கேட்டார்.
● தவறு பற்றிய தவறான அபிப்பிராயம், அந்த தபஸ்வி மனதிலிருந்து அன்றே உடைந்து போனது. உங்கள் மனதிலிருக்கும் தவறு பற்றிய தவறான அபிப்பிராயங்களை கண்டுபிடித்து உடைத்தெறியுங்கள்.