41. தேடிச் செல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மரத்தடியிலிருந்த ஞானியிடம் வரம் கேட்டு வந்த குடும்பஸ்தரிடம், "காட்டுக்குள் வடக்கு நோக்கிப் போ, ஒரு பெரிய குகை காண்பாய். நீ விரும்புவது அங்கேயிருக்கிறது" என்றார்.
அவர் சொன்னதை நம்பிச் சென்றவர்...
அங்கே கொட்டிக் கிடந்த வெள்ளிச் சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து நன்றி சொன்னார். ஞானியோ "நாளை இன்னும் கொஞ்சம் தூரம் செல்" என்றார்.
நம்பிச் சென்றவர் பொற்காசுகள் நிறைந்த இன்னொரு குகையைக் கண்டுபிடித்து, அதை அள்ளிக் கொண்டு வந்து மீண்டும் நன்றி சொன்னார்.
"இன்னும் முன்னேறிச் செல்" என்றார் மீண்டும்.
இம்முறை வைரங்கள் நிறைந்த குகையைக் கண்டு வேண்டிய மட்டும் அள்ளிக் கொண்டு வீடு திரும்பும் போது குடும்பஸ்தருக்கு புது யோசனை பிறந்தது...
"இவ்வளவு பொக்கிஷங்கள் இருக்குமிடம் தெரிந்தும், ஞானி இவற்றைச் சீந்தாமல் மரத்தடியில் நிம்மதியாக இருக்க காரணமானது எது?" என்ற கேள்வி பிறந்தது.
இம்முறை ஞானியிடம் நன்றி சொல்லாமல் அவரின் காலடியில் விழுந்தார். "உங்களிடமிருக்கும், பொக்கிஷங்களை தாண்டிய அந்த ஏதோ ஒன்று எது? அது எனக்கு வேண்டும்" எனச் சொல்லி ஞானியிடம் சரணடைந்தார்.
● துக்கத்தைத் தாண்டி, கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு துரிதமாக அழைத்துச் செல்லும் ராக்கெட்தான் சரணாகதி