56: உள்ளுலக விசா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ 'சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்டேன்,
பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை'
என்று சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சில தடவைகள் தியானத்தில்
ஈடுபட்ட உடன் பலன் கிடைக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
❖ முதலில் மனதின் சப்தம் கேட்கப்பட வேண்டும். இரண்டாவதாக மனதின் இயக்கம் புலப்பட வேண்டும். மூன்றாவதாக மனதைப் புரிந்து அதைக் கடக்க வேண்டும். இவை அனைத்தும் நிகழ உணர்வுத் தெளிவு தேவை. உணர்வுத் தெளிவை அதிகப்படுத்துங்கள்.
அதற்கு சில டிப்ஸ்..
❖ மனதின் சப்தம் கேட்கப்பட,
உங்களோடு நீங்கள் செலவிடும்நேரம்
அதிகப்படுத்தப்பட வேண்டும்...
உணவு உட்கொள்ளுதல் போன்ற
சில மணி நேரங்கள்தான் நீங்கள்
உங்களுக்காகச் செலவு செய்யும் நேரம்.
அதுகூட உங்கள் உடலுக்காக மட்டுமே!
❖ உங்கள் மனதின் இயக்கம் புலப்பட,
மனதை வெளிச்சமிட்டுப் பார்ப்பதற்கு
உதவும் தியானத்திற்காகத் தினமும்
ஒரு அரைமணி நேரமாவது
கட்டாயம் செலவிட வேண்டும்.
உடலளவில் உங்களுக்காக நீங்கள் செலவிடும்
நேரங்களில்கூட உங்களின் உடல் அங்கு
இருக்கும்.

ஆனால் மனமோ
எதையாவது நினைத்துக் கொண்டு ஊர் சுற்றப்
போயிருக்கும்.
❖ மனதைப் புரிந்து கொண்டு
அதைக் கடப்பதற்கு
ஞானக்கருத்துக்கள் பெரிதும் உதவும்.
❖ உங்களுக்காகச் செலவிடும்
நேரங்களிலெல்லாம்
முழுக்க முழுக்க உடல், மனம், உயிர்
என்ற எல்லாக் கோணத்திலும்
உங்களோடு இருங்கள்.
❖ இவையனைத்தையும்
கடைப்பிடிப்பவருக்கு
உள்ளே ஒரு சுற்றுலா
செல்வதற்கான விசா ரெடி!
கர்வத்தைவிட காரமானது...
❖ நான் அழகு
நான் அசிங்கம்
நான் உணர்ந்தவன்
நான் தாழ்ந்தவன்
நான் அதிர்ஷ்டக்காரி
நான் துரதிஷ்டக்காரன்
❖ என ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்வது
அல்லது தன்னைத் தாழ்த்திக் கொள்வது
இரண்டுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள்.
என்ன! அதிர்ச்சியாக இருக்கிறதா?
உயர்வு மனப்பான்மையை (கர்வம்) அகங்காரம்
எனச் சொன்னால் எல்லோரும் எளிதாக ஏற்றுக்
கொள்வோம். தாழ்த்திக் கொள்வது (தாழ்வு
மனப்பான்மை) அகங்காரம் எனச் சொன்னால்
ஏற்றுக் கொள்வது கடினம்.

❖ கர்வம், தாழ்வுமனப்பான்மையைவிட பல மடங்கு மேல்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... கர்வத்தால் பேசிய வார்த்தைகளுக்கு இன்றோ நாளையோ சமுதாயத்திடம் கொட்டு வாங்கியே தீர வேண்டும். சமுதாயம் அடக்கிவிடும்.
❖ தாழ்வு மனப்பான்மையால் ஒருவர் தன்னை தாழ்த்திக் கொண்டால் சமுதாயம் கொட்டாது. மாறாக சமுதாயம் மதிக்க ஆரம்பித்து விடும். இவற்றால் அகங்காரம் மிக, மிக ஆழமாக வளர ஆரம்பித்து விடும். அகங்காரத்தின் பாதிப்பு வெளியில் தெரியாது. ஆனால் சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும்.
❖ நீங்கள் யோசித்தபடி அடக்கமாக, ஒடுக்கமாக இருந்தால் நிச்சயம் தவறில்லை.
ஆனால்... அடக்கிக் கொண்டும், ஒடுக்கிக் கொண்டும், இருந்தால் அது நிச்சயம் தவறு. நீர் தேங்கினால் விஷமாகும். சக்தி தேங்கினால் துர்சக்தியாகும். இது பெரும் பாதகத்தையே விளைவிக்கும். அகங்காரம் என்னும் புண், புரையோட ஆரம்பித்துவிடும். மனம் கெட்டு உள்ளுலக வாழ்க்கையில் தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் துர்மணம் வீச ஆரம்பிக்கும்.
❖ தாழ்த்திக் கொள்கிறேன்,
பவ்யமாக நடந்து கொள்கிறேன்
என்ற பெயரில் தம்மையும் அறியாமல்
உணர்வுகளை தேவைக்கு மீறி கட்டுப்படுத்தும்
போதுதான் சிக்கலாகி விடுகிறது.


மனச்சோர்வின் மாபாதகங்கள்...
❖ சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா?
- சிரி
❖ நரகத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா?
- துக்கப்படு.
❖ மனம் உற்சாகமாக இருந்தால் - புல்கூட
ஆயுதமாகத் தோன்றும்!
தோல்விகூட குருவாகத் தோன்றும்.
❖ சாத்தியம் இல்லாததில்கூட சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத் தெரியும்.
❖ மனம் சோர்வுற்றிருந்தால் - படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்! பெரிய வெற்றி கூட ‘இப்போதைக்கு இது O.K.’ அடுத்த தோல்வி எப்ப வருமோ? என்று யோசிக்கத் தோன்றும்! சாத்தியமாகக் கூடியதில் இருக்கும் சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்!
❖ கவலை முற்றினால் துக்கம்.
துக்கம் முற்றினால் மனச்சோர்வு.
மனச்சோர்வு முற்றினால் மனக்கோளாறு.
❖ சந்தோஷமும், துக்கமும் வாழ்க்கையை நாம்
எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான்
அமைகிறது.
❖ சரியான மனத்தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும்.

❖ இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும், பயமும்தான் துக்கமாக வெளிப்படுகிறது.
❖ பலர் துக்கப்படுவதற்கு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.
❖ வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால் எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை!
❖ பலருக்கு துக்கம் என்பது ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. துக்கமோ மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க எளிய வழிகள் சில... எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள். வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.
- பல புத்தகங்களைப் படித்து, 'நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்' என்று பலமுறை மனதில் சொல்லிக் கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.
- நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.
- எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது.
பாதகத்தை சாதகமாக்கும் துணிச்சல்
❖ பாதகத்தைப் பார்த்து தயங்கினால் வாழ்வின் பாதையே மங்கலாகி வாழ்வே இருண்டு விடும்.
❖ ‘துணிச்சல்’ மனித இனத்துக்கு கிடைத்த மாபெரும் பரிசுகளில் ஒன்று.
❖ தயக்கம்! மயக்கம்! என்ற இரண்டுமே துணிச்சலற்ற தன்மையின் வெளிப்பாடுகள்.
❖ இந்த நிமிடத்தில் உங்களிடம் இருக்கும் நிகழ்காலத்தில்தான், எதிர்காலத்தில் தலைவிதி எழுதப்பட்டிருக்கிறது.
❖ ஒரு சிறிய ஆலம் விதைக்குள் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆலமரத்திற்கு இணையானது, உனக்குள் இருக்கும் துணிச்சல்.
❖ ஒவ்வொரு பிரச்சினை என்கிற கர்ப்பத்திற்குள்ளும் - தீர்வு என்கிற குழந்தை இருக்கிறது.
❖ எனவே...
துணிச்சலை துயில் எழுப்பு!
துளிர்விடட்டும் சாதனை!
பாதகம் கூட சாதகமாகட்டும்!
