தியானமயமான வாழ்வை நோக்கி...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"தவம் என்றால் என்ன? தியானத்திற்குத் தவம் தேவையா?" என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள்.
நான் சொல்லி வருவதெல்லாம் தவம் தவிர வேறில்லை!
உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் மீதான செயல்பாடுகள் தவம் அல்லாமல் வேறென்ன?
உணவு, உடை இல்லாமல், இருண்ட குகைகளில் வாழ்வதோ, ஏதாவதொரு வகையில் உடலை வருத்திக் கொள்வதோ தவம் ஆகாது.
உங்கள் உடலை இந்த வழிகளில் வருத்திக் குழப்பமடையச் செய்தால், தியானத்தின் மீது கவனம் செல்வதைவிட, வாழ்வில் இழந்த பகுதிகளின் மீது கவனம் பாயும் ஆபத்து இதில் இருக்கிறது.
ஒரு இருபத்து நான்கு மணி நேரம் உணவு அருந்தாமல் இருந்தால்கூட, உங்கள் தியானம் தியானமாக இல்லாமல் உணவைப் பற்றியதாகவே அமைந்துவிடும்! உணவைத் தவிர வேறு கவனமே வராது.
உண்மையான தியானம், உண்ணப்படாத உணவின் மீது கவனம் குவிவதன்று; உணவைப் பற்றிய கவனத்தைத் தாண்டிப் போவது.
இந்த வேறுபாட்டைப் பலர் கவனிப்பதே இல்லை. அதனால்தான், சொல்கிறேன், இழுத்தல் பற்றிய பாதை எல்லாருக்கும் ஏற்றதல்ல. வாழ்வின் பல அம்சங்களை மறுத்து அடக்கி வாழ்வது எல்லோருக்கும் ஏற்றதல்ல.
ஆனால் இவையெல்லாம் வெவ்வேறு வழிகள்தாம். உடலைக் கையாள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
உடலை வருத்தும் கண்டிப்பான ஒழுக்க முறைகள் மூலம் சிலர் உடலைப் பண்படுத்தும் வழியை மேற்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லாருமே அந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.
ஒரு சின்ன கதை :
கடுமையான தவமுறைகளை மேற்கொண்டு யோகி ஒருவர் பல்லாண்டுகள் மலையில் வாழ்ந்து வந்தார்.
மந்திரம், வழிபாட்டு முறைகளில் நன்கு தேர்ந்தார். புனித கிரந்தங்கள் கற்று, மனத்தை ஒருமுகப்படுத்துவதில் பல காலம் செலவழித்தார்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது தவம் நிறைவடைந்ததாக அவர் கருதினார்.
மக்களின் வாழ்வில் ஆன்மிகம் மலரச் செய்ய வேண்டுமென்ற ஆவலில், அவர் மலையிலிருந்து இறங்கி நாட்டுக்குள் வந்தார்.
நகரத்திற்கு அவர் வந்திருக்கும் செய்தி, எங்கும் பரவவே, ஆன்மிக மக்கள் அவரை வரவேற்கத் திரண்டார்கள். அந்தக் கூட்டத்தில், பாரம்பரியத் தவ முறைகளில் நம்பிக்கை இல்லாத ஓர் இளைஞரும் இருந்தார்.
யோகி மண்டபத்திற்குள் பிரவேசித்தவுடனே, அந்த இளைஞர் யோகியிடம் சில கடினமான சொற்களைச் சொன்னார்.
அப்போது, தனக்குள் சினம் பொங்கி எழுவதை யோகி உணர்ந்தார்.
“இளைஞரின் சில வார்த்தைகளுக்கு இவ்வளவு கோபமா? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும்.... எத்தனையோ தவத்துக்குப் பிறகும்.... இப்படியா? யாரோ ஒருவர் சில சொற்கள் சொன்னதும், சினம் தன் அசிங்கமான தலையை மேலே தூக்கிவிட்டதே!” என்றுணர்ந்தார்.!
உடனே அவர் எதுவுமே பேசாமல், மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
சிலர் அவர் பின்னால் ஓடிச் சென்று, மன்னிப்புக் கேட்டு, திரும்பி வரும்படி வேண்டினார்கள்.
அப்போது யோகி பதில் சொன்னார்: “எனது தவம் பூரணத்துவம் அடையவில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.
நான் திரும்பிச் சென்று, என் பணியை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.உண்மையாகவே நான் பக்குவம் அடையும்போது திரும்பி வருவேன்” என்றார்.
கடுமையான தவம், என்பது ஒருவருக்குள் புரிதலை ஏற்படுத்தி, அவரை மலரச் செய்வதே.
உங்கள் உடல், எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துவதை விடப் பெரிய தவம் வேறில்லை.
இந்தத் தவத்தை இப்போதே நீங்கள் செய்ய முடியும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே!
இவையெல்லாம் தியானத்திற்கான சரியான களத்தை உருவாக்குவதற்கே!
விழிப்புணர்வு ஒரு மந்திரச்சாவி :
உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகளைக் கவனியுங்கள் என்று சொன்னேன்.
வேறுவிதமாகச் சொன்னால், விழித்திருங்கள்!
விழிப்புணர்வே அடிப்படை. விழிப்புணர்வே தியானத்தின் குறிக்கோள். விழிப்புணர்வே உங்கள் உடலையும் எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனிப்பதற்கான மந்திரச்சாவி.
எந்த முறை, எந்த மதம், எந்த ஆன்மிகக் கொள்கை கள் என்றாலும் சரி - உங்களை மேலும் அதிக விழிப்புணர்வு உள்ளவராக ஆக்கிக்கொள்வதற்கே நீங்கள் முயல வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் எல்லாத் தியான முறைகளிலும் உள்சரடாக ஓடிச் கொண்டிருப்பது இந்த விழிப்புணர்வுதான்.
நீங்கள் ஒன்றைக் கவனிக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் ஒரு பார்வையாளராக, வெளி ஆளாக மாறி விடுகிறீர்கள்.
நீங்கள் பார்க்கும் பொருளோடு, உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. ஏதோ நமக்கு வெளியே நடக்கும் ஒன்று என்ற அளவில் மட்டுமே அதைப் பார்க்கிறீர்கள்.
உங்கள் உடலும் மனமும் உணர்வுகளும் விழிப்புணர்வு பெறும்போது, பார்க்கப்படும் பொருளிலிருந்து நீங்கள் விலகி விடுதலை பெற்று விடுகிறீர்கள்.
உள் சுதந்திரம் பெற உங்கள் புத்தி கூர்மையையும் விழிப்புணர்வையும் விழிப்படையச் செய்யுங்கள்.
உங்களைச் சுற்றி நடக்கும் காரியங்களை. நீங்கள் ஒரு வெளி ஆள்போல கவனிக்க ஆரம்பிக்கும்போது, உங்கள் உடல் உங்களிடமிருந்து கழன்று கொள்ளும்.
உங்களது சலன புத்தியையும் மாறும் உணர்வுகளையும் கவனியுங்கள் - அப்போது, நீங்கள் உணர்வுகள் அல்ல, அதையும் தாண்டியவர் என்பதை உணரலாம்.
ஆழந்த விழிப்புணர்வால், நீங்கள் சுதந்திரம் பெற்று விடலாம்.
'வாழ்வில் தியானம்' என்பதிலிருந்து 'வாழ்வே தியானம்' என்பதை நோக்கி...
இப்போது நீங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள், தியானத்தை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
"என் வாழ்வியல் முறையில் எவ்வாறு தியானத்தைச் சேமிப்பது?
எவ்வளவு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும்? எந்த வகைத் தியான முறை எனக்குப் பொருத்தமானது?" என்றெல்லாம் கேட்பதற்கு அதுதான் காரணம்.
இந்தக் கட்டத்தில். இந்த வினாக்கள் மிகச் சரியானவைதாம்.
ஆரம்பத்தில், நீங்கள் வாழ்வில் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கை முறைக்குள் தியானத்தை தொடர்ந்து விழிப்புணர்வுடன் அறிமுகப்படுத்த வேண்டும். ஏதாவதுஒரு தியான முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஓர் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளுங்கள். எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.
நீங்கள் அந்தத் தியான முறையில் மகிழ்ச்சியடைந்தால், எந்தப் பலன்களையும் எதிர்பாராமல், குறைந்தது பத்து நாள்களாவது பயிற்சி செய்யுங்கள். ஒரு தியானமுறை உங்களுக்குப் பொருந்திவிட்டால். ஏதாவது ஒரு வகையில் அது உங்களை மாற்றும்.
சில சமயம் அந்த நிலை மாற்றம் மிக நுட்பமாக இருக்கும். உங்களைவிட மற்றவர்களுக்கு, அது சிறந்ததாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த தியானத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.
“சுவாஜி, இந்தத் தியான முறையை நான் கடைப்படித்த சில நாட்களில், என் முகம் பிரகாசமாக இருக்கிறது. நான் கூடுதலான சக்தியையும் சுகமான நேர்மறை உணர்வுகளையும் பெற்றிருக்கிறேன்” என்றும் பலர் சொல்கிறார்கள்.
அதனால் ஒரு தளத்தில், நிச்சயமாக ஒருவருக்குள் நிலைமாற்றம் ஏற்படுகிறது.
நேரடி பலன் கிடைக்காவிட்டாலும் கூடப் பொறுமை இழந்துவிடாதீர்கள்.
பொறுமை பல அற்புதங்களைச் சாதித்துவிடும்!
அத்தோடு பொறுமையாயிருந்தால் நீங்கள் புதிய புதிய தியான முறைகளைத் தேடிப் போக மாட்டீர்கள்.
ஏதாவது ஒன்றையோ, சிலவற்றையோ கடைப்பிடித்து நிம்மதியடைந்தால், அதன் வழியிலேயே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்திலிருக்கும் தியான முறைகள் புதியனவாகவும், உற்சாகம் தருவனவாகவும் இருக்கும். உங்கள் மனம்- "இதைச் செய். அதைச் செய்," என்று தூண்டும். ரொட்டிக் கடைக்குப் போவதுபோலத்தான் அது. நிறைய வகை வகையான தின் பண்டங்கள் இருக்க, எதைத் தேர்ந்தெடுப்பது, எதை உண்பது என்ற சிக்கல் ஏற்படுவதுபோலத்தான்.
அதனால் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
மனம் எதை விரும்புகிறதோ, அந்த முறையில் செய்யுங்கள். எதைச் செய்தாலும் மெய்யான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
இந்தச் சோதனைக்கு, உங்கள் சக்தி முழுவதையும் முனைப்போடு பிரயோகித்து, உங்களை ஆட்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தியான முறையையும், கிடைத்திருக்கும் தியானமுறை அது ஒன்றுதான் என்பதுபோலச் செயல்படுங்கள். பேராசை கூடாது; பொறுமை இழக்கக் கூடாது.
பேராசையும், பொறுமையின்மையும் தியானத்துடன் ஒருவகை உரசலை ஏற்படுத்திவிடும். பிறகு தியானத்தின் ஆத்ம அனுபவத்தை நீங்கள் அனுபவிக்க முடியாமலேயே போய்விடும்.
தியானத்தின் ஒரே ஒரு அனுபவம் போதுமானது!
நீங்கள் தியானத்தை நேசிக்க, தியானத்தின் ஒரே ஒரு ஆனந்த ஒளிக்கீற்று போதும். அதன் பிறகு எத்தனை மணி நேரம் தியானம் செய்வது என்று என்னை கேட்க மாட்டீர்கள்! காலையில் கண் விழித்ததும் உங்கள் முதல் சிந்தனையே தியானமாகத்தான் இருக்கும்.
குளிக்கும்போதும், உடை உடுத்தும்போதும், உண்ணும்போதும், - என எதைச் செய்தாலும், மனம் முழுவதும் இதில் பதியச் செய்தால், ஒவ்வொரு கணமும் தியானமாக மாறிவிடும்.
தியானம் என்பது வாழ்வின் இயல்பு நிலையாக அமைந்து விடும்.
நீங்கள், தியானத்தில் வாழும் வாழ்வைப் பெற்று விடுவீர்கள்.
இறுதியாகச் சாதிக்க வேண்டிய நிலை இதுதான்.
‘வாழ்வில் தியானம்’ என்பதிலிருந்து ‘வாழ்வே தியான’மாவதுதான் நான் விரும்பும் ஓர் உன்னத நிலை.
ஆனால் இது எளிதன்று.
முதலில் தியானத்திற்கு நீங்கள் பழக்கப்பட வேண்டும். கொஞ்ச காலம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும், அதன் பிறகு. அந்த உணர்வை, நாள் முழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தில், இரண்டு வகையான தியான முறைகளின் தொகுப்பை நீங்கள் காணலாம்.
அமர்வுத் தியான முறைகள் :
தினசரி இத்தனை முறைகள் என்ற அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பயிற்சி செய்யவும்.
எங்கும்-எப்போதுக்குமான தியான முறைகள் :
இதை, எங்கும், எப்போதும் செய்யவும்! வேலைக்கு வாகனம் ஓட்டிச் செல்லும்தோதோ, உங்கள் துணிகளுக்குப் பெட்டி போடும்போதோ, படுக்கை அறையிலிருந்து சமையலறை நோக்கி நடக்கும்போதோ நீங்கள் இந்தத் தியான முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்யலாம்.
நீங்கள் விரும்பினால், இரண்டு அமர்வு தியான முறைகளையும், எங்கும் - எப்போதுக்குமான தியான முறை ஒன்றையும், ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பயிற்சி மேற்கொண்டு பார்க்கலாம்.
ஒரே சமயத்தில் பல தியான முறைகளை முயற்சி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால், எந்த ஒன்றையுமே நீங்கள் முழுமையாகச் செய்ய முடியாது. வாழ்வு முழுவதையும் தியானத்திற்கு இட்டுச் செல்ல எங்கும் - எப்போதும் உத்திதான் முதற்படி.
ஓர் எச்சரிக்கை!
தியான பயிற்சி ஆரம்பித்தவுடனே, உடலிலும், மனத்திலும் அசாதாரண மாற்றங்கள் பல ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
எதிர்பாராததற்குத் தயாராக இருங்கள்.
மறந்துவிட வேண்டாம். தியானம் என்பது தூய்மைப் படுத்தும் ஒரு செயல்பாடு. வாழ்நாள் முழுவதிலும் சேர்ந்திருந்த அழுத்தங்களையும், அடைப்புகளையும் நீங்கள் வெளியே தூக்கி எறிந்துவிடுவீர்கள்.
இதுவரை கண்டிராத சக்தி, உங்கள் உடலுக்குள் வெள்ளமாய்ப் பாய்வதை உணர்வீர்கள்.
எவ்வளவோ காலமாய் நீங்கள் செய்திராத ஆட்டம் பாட்டம், குதிப்பு, சுழற்சி, அலறல் எல்லாம் ஏற்படும்! உங்களது உடல் அவற்றிற்கெல்லாம் இணைந்து செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் உடலில் நிறைய வெப்பம் கூடிவருவதை உணர்வீர்கள். சிலருக்குத் தலைவலி, கை கால் விரல்களில் குடைச்சல் எல்லாம் கூட ஏற்படும். திடீரென சக்தி உள்ளே பாய்வதால் ஏற்படுபவை இவை.
சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு வலி, உறக்கமின்மை சோர்வு கூடத் தோன்றலாம். இவை எல்லாம் தற்காலிகமானவை. தியானத்தைத் தொடர்ந்தால் அவை நிச்சயமாக மறைந்து விடும்.
உள்ளுக்குள் அடைப்பட்டுக்கிடக்கும் நச்சுகள் உடலை விட்டு வெளியேறுவதன் வெளிப்பாடுகள் தான் இவை. தொடர்ந்து தியானம் செய்ய, நச்சுகள் அனைத்தும் முழுமையாக வெளி வந்து விடும். உடல் சுகம் பெறும்.
நீங்கள் ஏதாவதொரு கடுமையான உடல் நலக் கேட்டில் இருக்கும்போது அல்லது ஒரு தியான முறையைப் பயன்படுத்தும்போது தொல்லை ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். அல்லது, செய்து வரும் தியான முறையைக் கைவிட்டு விடுங்கள்.
இதுபோன்ற சிறிய பிரச்சினைகளால், எந்தவொரு தியான முறையையும் கடைப்பிடிக்க முடியாதபடி, உங்கள் கவலைகள் அதை நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள்.
காரணம், தியானம் உடலுக்கும் மனத்திற்கும் நல்லதை மட்டும் செய்யும். சுகத்தை மட்டும் தரும்.
சும்மா அப்படியே போய், தியானத்தில் மூழ்கி விடுங்கள். உங்கள் கண்முன்பாகவே, உங்கள் வாழ்வுநிலை மாற்றம் பெறவதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் காணப் போகும் நிலை மாற்றங்கள் :
தியானத்தின்போது வேறு எதை நீங்கள் காண்பீர்கள்?
உடலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு, நீங்கள் ஆழமான, நிலைத்து நிற்கக்கூடிய நிலைமாற்றங்களைப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அவை இரசாயன மாற்றங்கள்; பழைய நிலைக்குத் திரும்ப முடியாதவை. தியான அனுபவத்தை ஒருமுறை சுவைத்த உடனே, உங்கள் வாழ்க்கை முன்புபோல எப்போதும் இருக்கப் போவதில்லை.
தியான அனுபவத்தைப் பெற்று விட்டதை எவ்வாறு அறிவது?
உங்களுக்குள் ஏற்படும் இந்த மாற்றங்களைக் கண்டுதான்.
வெறும் சுதந்திரம் :
நீங்கள் அனுபவிக்கப்போகும் முக்கியமான மாற்றம் ஒருவகையான சுதந்திர உணர்வு.
ஏன் சுதந்திரம்?
அதற்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு?
நாம் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருப்பது சுதந்திரத்தைத்தான்.
நாம் உணர்கிறோமோ இல்லையோ, நம்மில் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டிருப்பது சுதந்திரத்தைத்தான். தியானம் என்பதுகூட தீவிரமானதொரு சுதந்திரத் தேடல்தான். தியானம் சுதந்திரம் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால்தான் விடுதலைப் பெற நாம் தியானத்தை நாடுகிறோம்.
‘சுதந்திரம்’ என்ற சொல்லை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். நம் சாதாரண வாழ்வில் நாம் தேடுவது, ‘இன்னதற்காகச் சுதந்திரம்’ அல்லது ‘இன்னதிலிருந்து சுதந்திரம்.’
நாம் விரும்புவதையெல்லாம் செய்வதற்கான சுதந்திரம், நமக்குச் சரியென்று படுகிற விதத்திலெல்லாம் வாழ்வதற்கான சுதந்திரம் - இதுதான் ‘இன்னதற்கான சுதந்திரம்’.
நாம் அஞ்சும், வெறுக்கும் எல்லாவற்றிலிருந்தும் - அதாவது நோய், கவலை, சினம், மனஅழுத்தம், உணர்வு, மனப்பான்மை, வேதனை முதலியவற்றிலிருந்து விடுதலை பெறும் சுதந்திரம்- இதுதான் 'இன்னதிலிருந்து சுதந்திரம்'.
நமது எல்லாச் செயல்களும், இவை இரண்டில் ஒன்றில்தான் அடங்கி இருக்கிறது.
நல்லதற்கான பேராசை. தீயதைக் கண்டு பயம்.
நமது வாழ்வு முழுவதையும், இந்தப் பேராசை, அச்சம் என்ற இரண்டு சூத்திரக் கயிறுகளே ஆட்டிப் படைக்கின்றன. இந்த இரு சூத்திரக் கயிறுகள் நம் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் வரை, நாம் தேடித் தவிக்கும் சுதந்திரம் எங்கே கிடைக்கும்?
சில வாரங்களுக்கு முன்னால், வழக்கமாக வரும் சீடர் ஒருவர், என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியக் கலைஞர். அவர், தியானத்தைத் தாம் வெறுப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.
“சுவாமி! நான் இந்த விதிமுறைகள், சட்டங்களை எல்லாம் வெறுக்கிறேன். நான் விரும்பும் வகையில் சுதந்திரமாக என் வாழ்வை நடத்த விரும்புகிறேன்.
பாருங்கள், காலை 10 மணிக்குக் கண் விழிக்கிறேன்.
முதலில் காப்பி, பிறகு நீந்தப் போய்விடுகிறேன், விரும்பும் போதெல்லாம்...” இப்படி ஒரு நாள் முழுவதையும் எனக்கு அவர் விளக்கினார். நான் அவரைக் கேட்டேன், "யாராவது உங்களை 6 மணிக்கே எழுப்பி விட்டால் என்ன செய்வீர்கள்? உங்களது படுக்கைக்குக் காப்பி வரவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? என்றேன்.
"ஓ, எனக்குக் கடும் கோபம் வந்துவிடும்," என்றார் சிரித்தபடியே.
"மழை பெய்து, உங்களது நீச்சலைக் கெடுத்து விட்டால்...?"
"ஆமாம், அது படுமோசம்தான். நான் ஒரு நாள் நீந்தாமற்போனால், அந்த நாள் முழுதும் என்னவோ போலிருக்கும்," என்றார்.
பிறகு நான் கேட்டேன்... "உங்கள் சுதந்திரம் பலவற்றைச் சார்ந்திருக்கிறது. அப்படியானால் நீங்கள் எவ்வாறு உண்மையான சுதந்திரத்துடன் இருக்க முடியும்?" என்று கேட்டேன்.
சுதந்திரம் என்பது எந்த நிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் சுதந்திரமாக இருப்பது. இதைத்தான் வெறும் சுதந்திரம் என்றழைக்கிறோம்.
இதற்காகவோ, இதிலிருந்தோ அல்ல. நிகழ்பொழுதில் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்தல்.
பேராசையோ, அச்சமோ, எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்போ, இறந்தகாலம் பற்றிய வருத்தமோ எதுவுமே இல்லாமல், எதற்கும் கட்டுப்படாமல், இருந்தால் மட்டுமே அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். வெளிச் சூழல்களைச் சார்ந்திராத சுதந்திரமே, உண்மையான சுதந்திரம். இந்த வகைச் சுதந்திரத்தைத்தான் நீங்கள் தியானத்தின் போது அனுபவிப்பீர்கள்.