அப்படியானால் தியான முறைகள் எதற்காக?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியான முறைகள் நீங்கள் எதையாவது சாதிப்பதற்காக அல்ல. உங்களுக்கு நினைவுபடுத்தவே அவை.
ஆனந்தத்திற்குள் மூழ்கி விடுங்கள்! - என்று நான் சட்டெனச் சொன்னால், நடக்கிற காரியமா அது?
ஆனந்தம் என்பது உங்கள் இயல்புநிலை என்பதுகூட உங்களுக்குத் தெரியாதே!
அது தெரியாதபோது, தியானத்திற்கான செயல்முறை குழப்பமாகவும், அச்சம் தருவதாகவும் இருக்கும்.
தியானத்திற்குள் பிரவேசிப்பது, கரைகளற்ற கடலில் பிரவேசிப்பதுபோல, நீந்தக் கற்ற பின், தன்னந்தனியாகக் கடலில் குதித்து விடுவீர்களா என்ன?
மாட்டீர்கள்! மிதக்க, மிதவை வேண்டும், வழி தெரிய, கலங்கரை விளக்கமும் வேண்டும்.
அதேபோல, தியானத்தில் பிரவேசிக்கையில், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முறை தெரிந்திருக்க வேண்டும். தியானத்திற்கான பாதையைக் காட்டுவதாக அது அமைய வேண்டும். அப்போதுதானே எல்லாம் இயல்பாக நிகழமுடியும்?
தியான முறைகள், மிதவைகள்போல.
தியானம் உங்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டபின், தாமாகவே நீங்கள் ஆரம்பத் தியான முறைகளைக் கைவிட்டு விடுவீர்கள்!
தினசரி நான் எத்தனை மணி நேரம் தியானம் செய்ய வேண்டும்?
எத்தனை மணி நேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் முன்பு குறிப்பிட்டபடி, தியானம் என்பது உங்களது வாழ்வில் சேர்க்கப்பட வேண்டிய ஏதோ ஓர் அம்சமன்று. இது, நான் தினசரி எத்தனை முறை மூச்சுவிட வேண்டும் என்று கேட்பதுபோல உள்ளது.
நான் இவ்வளவு மணி நேரம் தியானம் செய்கிறேன். மீதி நேரங்களில் என் அன்றாட அலுவல்களைக் கவனிக்கிறேன் - என்று நீங்கள் சொல்ல முடியாது.
தியானம், உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. உங்களது முழு வாழ்க்கையுமே, தியானம்தான். இந்த உண்மை அனுபவமாக மாற வேண்டும். அதற்கான விதை உங்களுக்குள் ஏற்கனவே இருக்கிறது. அது வளர்ந்து பெருமரமாகிப் பூப்பூக்க வேண்டுமென்றால், முதலில் அந்த விதை வெடிக்க வேண்டும்!
விதை வெடிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும்!
நீங்கள் உண்மையான ஈடுபாட்டுடன் தியானப் பயிற்சியில் ஈடுபடும்போது, அது தானாக நிகழ்ந்துவிடும். ஆனால் விதை வெடிப்பதற்கான விருப்பம், பரிபூரண நிலைமாற்றம், உங்களுக்குள் நடக்க வேண்டும்.
தியானம் ஒரு வகை மறுபிறப்பு!
முதலில் நீங்கள் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் - உங்களது சொந்த மரணத்தை!
முற்றிலும் மாறுபட்ட ஒருவராக நீங்கள் மறுபிறப்பு எடுப்பதற்காக நீங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆயத்தமாகுங்கள்!
தியானத்தின் பயன்கள் என்ன?
உங்களின் நிலையையே மாற்றச்செய்யும் சக்தி.
உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் - தியானம் நம்மை பக்குவப்படுத்தும்.
உடலளவில் கிடைக்கும் தியானத்தின் பலன்கள் எல்லோரும் அறிந்தவையே.
தியானத்தின் மூலமாக உங்கள் இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கட்டுப்படுத்திவிடலாம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
கொடிய நோய்களான தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, மூட்டுவலி முதலியவற்றையும் குணப்படுத்தி விடலாம்.
தியான சக்தியின் முன்னால், எந்த நோயாலும் தாக்குப்பிடிக்க முடியாது!
தியானம் மருந்திற்குத் துணை நிற்பது. ஆனால் மருந்திற்கு மாற்று ஆகாது.
மன அளவில், தியானம் எண்ணங்களைத் தெளிவு படுத்தும்; சொல்லாற்றலை வளர்க்கும். எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும்.
தியானம், உறுதியாக மனத்தை ஒருமுகப்படுத்தும்; நினைவாற்றலை வளர்க்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சாதாரண அறிவாற்றலிலிருந்து உங்களைப் புத்திசாலித்தனத்திற்கு இட்டுச் செல்லும்.
சிக்கல்கள் ஏற்படும்போது, அவற்றை புதிய கோணத்தில் மிகுந்த படைப்பாற்றலோடும், ஆக்கபூர்வமாகவும், சமாளிக்கும் திறமைதான் புத்திசாலித்தனம் என்பது. இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் தியானத்தில் தானாக இந்தத் திறமை மலர்ந்துவிடும். தியானத்தின் ஆன்மிகப் பயன்களைப் பட்டியலிட முடியாது! அது மிக நீளமானது!
✶ பிரபஞ்சத்தின் எல்லையற்ற ஆற்றலுடன் உங்களை நேரடியாகவே தொடர்பு கொள்ளச் செய்வது தியானம்.
✶ நம் அனைவருக்குள்ளும் இருக்கிற தெய்விகப் பண்பைக் கண்டுகொள்ள, கதவு திறந்து வைப்பது தியானம்.
✶ தியானம் சொல்லுக்குள் அடங்காதது. இதன் பயன்களை அனுபவித்து உணாலாமே தவிர, விளக்கிச் சொல்ல வழியில்லை!
24 மணி நேரமும் தியான முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தால், 'சும்மா இருத்தல்' என்பதிலேயே என் கவனம் சென்று கொண்டிருந்தால், என் அன்றாட வேலைகளை எப்படி செய்வது?
தியானம் தினசரி செயல்களுக்கு எதிரானதன்று!
இடையூறு ஏற்படாமல், உங்கள் இருப்பிலேயே இருப்பது எப்படி என்ற நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டால், அதே நிலையில் இருந்தபடி, எத்தனை காரியங்களை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். வெளிப்புறச் செயல்களோ, செயல்படாமையோ முக்கியம் அல்ல.
இது இரண்டு வகை நடைமுறைகள் கொண்டது. முதலாவது - நீங்கள் உங்களது உள் இருப்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒன்று உள்ளே இருப்பதை நீங்கள் உணர வேண்டும்! சும்மா இருத்தலில் மகிழ்ச்சி பெறக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது ஆரம்பத்தில், தினசரி, அரைமணி அல்லது ஒரு மணி நேரம் இதைச் செய்யுங்கள்.
அந்த நிலையில் சௌகரியமாக இருக்க முடியும் போது, ஆரம்ப தியான நேரத்திற்கும் அதிகமாக, அதை நீட்டித்துப் பாருங்கள்.
சின்ன காரியங்கள் மூலம் இதை ஆரம்பிக்கலாம்.
நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், தட்டைக் கழுவிக் கொண்டிருந்தாலும், உங்களில் நீங்கள் மையம் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதைச் செய்தவுடனே, நீங்கள், அதிக சிக்கலான காரியங்கள் நோக்கி நகர முடியும்.
புறத்தில், உங்களது வாழ்வுாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இதே வாழ்வை இன்னும் சற்றுச் சிறப்பாக நடத்திச் செல்ல முடியும். காரணம், தியானம் உங்களுக்குள் அதிகப்படியான தெளிவையும், ஆழ்ந்தனுபவிக்கும் திறனையும் ஏற்படுத்தும். இனி, நீங்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன், அதிகப் படைப்பாற்றலுடன் செயல்பட முடியும்.
அதே சமயம், உங்களுக்கு உள்ளேயும், ஆழ்ந்து, இடையூறு கொடுக்க முடியாத, ஒரு மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். அதுதான் தியானத்தின்
மகத்துவம்.
உங்கள் உணர்வுகளையும், செயல்களையும் பார்த்துக் கொண்டிருப்பவராக, ஒரு சாட்சியாக மாத்திரம் நீங்கள் மாறிவிடுவதுதான், தியானத்தின் முழு இரகசியம்.
உங்கள் செயல்களை விலகி நின்று கவனிக்க ஆரம்பித்தவுடன், ஏதோ ஒன்று உங்களுக்குள் மாறாமல் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அது, சினம் கொள்வதில்லை, வருத்தப்படுவதில்லை, பணம், பாதுகாப்பு, புகழ் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
அதுதான் உண்மையான ‘நீங்கள்’.
மற்றவை எல்லாம் உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டவை.
வேலைகளைச் செய்வது நீங்களல்ல, கோபப்படுவது நீங்களல்ல, வேதனைப்படுவது நீங்களல்ல, சலிப்படைவது நீங்களல்ல என்பதை உணர்ந்த உடனே எல்லையற்ற சுதந்திர உணர்வை உங்களுக்குள் அனுபவிப்பீர்கள்.
இது தியானத்தின் மூலமாக ஏற்படும் ஓர் அருமையான நிலை.
தியானம் பரிபூரண சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது - அதாவது உங்களிடமிருந்தே உங்களுக்கு விடுதலை!
நீங்கள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள உங்களது ‘ஆளுமை’யின் (Personality) பிடியில் இருந்தும் விடுதலையை
தியானத்தை அணுக சரியான வழி என்ன?
நல்ல கேள்வி.
முதலில், அதை ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், சிரத்தையுடனும் அணுக வேண்டும்.
தியானத்தை நம்புங்கள், தியானத்தை நம்பாதீர்கள் என்பதைப் பற்றி நான் பேசப்போவதில்லை.
நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுகூட நான் சொல்லவில்லை.
நம்பகத்தன்மை வேண்டும் என்கிறேன்.
நம்பிக்கை என்பது, ஒன்றில் நாம் நம்பிக்கை கொள்ளும்படி ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட ஒரு கொள்கை அல்லது கருத்து மட்டுமே.
நம்பகம் என்பது, எதற்கும் தயாராக இருப்பது, வெளிப்படையாக இருப்பது.
தியானத்திற்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். திறந்த மனத்தோடு இருங்கள்.
உற்சாகமாக இருங்கள். மனம் அதிரும்படியாக ஏதோ ஒன்று நிகழப்போகிறது! அதற்கு ஆயத்தமாக இருங்கள்!
நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்பது -
இரண்டாவது அம்சம்.
பரவச நிலை என்பது, யோகிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் மட்டுமே எனப் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பது அன்று.
தியானத்திற்காகத் தகுதி பெறுதல் என்பதே கிடையாது.
ஒருமுறை, ஆன்மிக மகா ஞானியான ரமண மகரிஷியை ஒருவர் அணுகி, “பகவானே, ஆன்மிக வாழ்விற்கு நான் தகுதி பெற்றவன்தானா?” என்று கேட்டார்.
அதற்கு, ரமணர் ஒரு பதில் வினா கொடுத்தார்: “நீ உயிரோடு இருக்கிறாயா?” என்றார்.
அந்த மனிதர் அதிர்ந்து போனார்.
“ஆமாம், நான் உயிரோடுதான் இருக்கிறேன்”.
“அப்படியானால், அது போதும்! ஞானம் பெறுவதற்குத் தேவையான தகுதி அதுதான்” என்றார் ரமணர்.
உயிரோடு இருப்பதே ஆன்மிகத்திற்கு போதுமான தகுதி!
இயற்கை உங்கள் மீது எந்த வரைமுறைகளையும் திணிக்காதபோது, நீங்கள் ஏன் கண்டதையெல்லாம் உங்கள் மீது திணித்துக் கொள்கிறீர்கள்? ஏன் இறுக்கிக் கொள்கிறீர்கள்.
ஆரம்பிப்பதற்கு முன் தெளிவாக இருங்கள்.
உங்களுக் கென்று திட்டவட்டமானதொரு குறிக்கோள் இருக்கிறது.
நீங்கள் உறுதியாக அதை அடையத்தான் போகிறீர்கள்.
மூன்றாவதாக - விளையாட்டுத்தனமாக இருங்கள்!
தியானம், பெரியதொரு சாகசம்.
சொல்லப்போனால், உங்கள் வாழ்வின் மிகப் பெரிய சோதனை அது. நீங்கள் தியானத்தில் மிகத் தீவிர காட்டினால், அதை இழந்து விடுவீர்கள்.
ஆன்மிகம், தியானம் கடுமையான ஒன்றல்ல. வாழ்க்கை ஒரு லீலை என்பதை அறிந்து கொள்வதே தியானம். தெய்விக விளையாட்டு. திருவிளையாடல்! பிறகு எதற்காகத் தீவிரம் காட்ட வேண்டும்?
தியானத்தைக் கொண்டாடுங்கள்.
sாதா ரணமாக மகிழுங்கள்!
நான்காவது - பொறுமையுடன் காத்திருங்கள்!
தியானத்திற்கான முதல் அமர்விலேயே, உங்களுக்குள் எட்டிக் குதித்து விடுவதல்ல தியானத்தின் ஆனந்த அனுபவம்!
தியானத்தை ஆரம்பிக்கும்போதே, அதன் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
ஒரு சின்ன கதை:
ஒரு காட்டில் மூன்று குரங்குகள் நண்பர்களாக இருந்தன.
ஒரு சமயம், அந்த மூன்று குரங்குகளில் ஒன்று, பழுத்த மாங்கனி ஒன்றைப் பார்த்தது.
எல்லாக் குரங்குகளைப்போலவும், அந்த ஒரு கனிக்காக, சற்று நேரம் அவை சண்டையிட்டுக் கொண்டன.
பிறகு, ஏதோ ஒரு காரணத்தால், ஒரு தெளிவு பிறக்க, கொஞ்சம் புத்தி வர, அவை புத்திசாலித்தனமான ஒரு முடிவுக்கு வந்தன.
அந்தக் கனியை அப்படியே சாப்பிட்டு விடுவதை விட, அதைப் பூமியில் விதைக்க முடிவெடுத்தன.
ஒரு மாங்கொட்டையிலிருந்து ஒரு மரமே தோன்றும். அந்த மூன்று குரங்குகளும் தாராளமாக உண்ண நிறைய மாங்கனிகள் தோன்றும் என்று சிந்தித்துச் செயலில் இறங்கின.
ஒவ்வொரு குரங்கும் அதை வளர்ப்பதில், ஆளுக்கொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டன.
"நான் தினந்தோறும் இதற்குத் தண்ணீர் விடுகிறேன்," என்றது முதல் குரங்கு.
"மண்ணைச் சத்துள்ளதாக்க, உரமிட்டு நான், நன்கு செடி வளரப் பார்த்துக் கொள்கிறேன்," என்றது இரண்டாவது குரங்கு.
"கடுமையான பருவ நிலைகளிலிருந்தும், பிராணிகளிடமிருந்தும் நான் இதைப் பாதுகாக்கிறேன்," என்றது மூன்றாவது குரங்கு.
மாதம் ஒன்று ஆயிற்று. பிறகு, இரண்டு, மூன்று என மாதங்கள் கழிந்தன.
மாங்கொட்டை முளைவிடவே இல்லை!
உடனே, மூன்று குரங்குகளும் ஓர் அவசரக் கூட்டம் கூட்டி, தங்கள் செயல்பாடுகள் பற்றி விவாதித்தன.
"வாக்களித்தபடி, நான் தினமும் தவறாமல் தண்ணீர் விட்டுக் கொண்டுதானே வருகிறேன்," என்றது முதல் குரங்கு.
"வாக்களித்தபடி மண் சத்துப் பெற நான் உரம் மிட்டுக் கொண்டுதானே வருகிறேன்," என்றது இரண்டாவது குரங்கு.
மூன்றாவது குரங்கு சொன்ன பதில் இது: "இதை மிகக் கவனமாகவே நான் பாதுகாத்துதான் வருகிறேன்! அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், மாங்கொட்டையை வெளியில் எடுத்து, முளைவிட்டதா, இல்லையா என்று பார்த்தும் வருகிறேன்!' ,
அதனால் முதல் சில அமர்வுகளிலேயே அற்புதம் விளையும் என்று எதிர்பார்க்காதீர்கள்! தியானம் முறையாக உங்களுக்குள் வளரக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். உடனடிப் பலனுக்குப் பேராசைப்பட்டால், தியான அனுபவங்கள் உங்களுக்குள் படிவதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், அதைத் தடுக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பலன்களை அனுபவிக்க... பொறுமை கொள்ளுங்கள்!
ஐந்தாவதாக - தனிமையில் மகிழுங்கள்.
முடிந்தவரை, உள்முகப் பார்வைக்கு முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் சற்று நேரம் மெளனமாக இருங்கள்.
lதனித்திருங்கள்.
உங்களது அகச் சூழலை அனுபவிக்க ஒரு வாய்ப்புக் கொடுங்கள். தியானம் உங்களது வாழ்வின் ஒரு பகுதியாகி விடும்போது, அந்த நிலை இயல்பாக உங்களுக்குள் மலர்ந்து விடும். ஆனால் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், அந்த நிலையை இடைவிடாமல் விழிப்புணர்வோடு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பல தியான முறைகள் இருக்கின்றன. எது எனக்குப் பொருத்தமானது என்பதை நான் எவ்வாறு கண்டு கொள்வது?
விளைவைக்கொண்டுதான்!
ஒரு தியானமுறை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதில் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் முழு ஆற்றலையும் அதில் செலுத்துங்கள். உண்மையான மிகுந்த தீவிரத்துடன் முயற்சி செய்யுங்கள்.
அது நிச்சயம் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் ஈடுபட்டால், சில நாட்களிலேயே, அது உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பது தெரிந்து விடும்.
ஆரம்பத்தில், அமர்வுத் தியான முறையை விட, உடலை இயக்கி செய்யும் தியான முறைகளில் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
காரணம், ஏகப்பட்ட இடையூறுகள் உங்களுக்குள் இருக்கின்றன. பேசாமல் அமர்ந்து கவனிக்க ஆரம்பிக்கும் போது, உங்கள் உள்ளே உள்ள அளவற்ற இடையூறுகளையே நீங்கள் கவனிக்க வேண்டி நேரும்.
அதனால் தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது ‘செயல்முறை’ தியான முறைகளைத் தேர்ந்தெடுக்கவும், இவை, முதலில் உள்ளிருக்கும் குப்பை கூளங்களை வெளியேற்றி, அகத்தைச் சுத்தப்படுத்தும்.
அவை வெளியில் சுறுசுறுப்புடன் இருப்பதாகத் தோன்றும். ஆனால் உள்ளே, மௌனத்தின் அமைதி அனுபவத்திற்கு இட்டுச் செல்லும்.
தியானம் கைவரப் பெற்றுவிட்ட பிறகு, உங்கள் தடைகளை எல்லாம் சுத்தப்படுத்திவிட முடிவதால், அதற்குப் பிறகு நீங்கள் விரும்பும் எந்தவொரு தியான முறையையும் மேற்கொள்ளலாம்.
தியானமுறையின் சரியான தன்மையை எவ்வாறு அளந்தறிவது?
ஒரு தியான முறை, உங்களுக்கு ஒத்ததாக, நிம்மதி தருவதாக, உணர்வுப்பூர்வமானதாக, மையம் கொள்வதாகத் தோன்றினால் - அதுதான் பொருத்தமானது.
அது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருவதாகவும், நீங்கள் விசாலப்பட சக்தி தருவதாகவும் அமைந்தால், அதுவே உங்களுக்கு பொருத்தமானது.
அது சரிப்பட்டு வரவில்லையென்றால், அதைத் தள்ளி வைத்து விட்டு வேறு முறையில் ஆரம்பித்துவிடுங்கள்.
ஆனால் பொறுமை காட்டுங்கள்! உடனடிப் பலன்களுக்குப் பேராசைப்பட்டு, நடைமுறைக்குச் சாத்தியமான நல்ல தியான முறைகளை வீசி எறிந்துவிடாதீர்கள்.
முதலில் உள்ள ஐந்தோ, எட்டோ தியான முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அவற்றில் ஏதாவதொன்று உங்களுக்கு ஏற்றதாக அமைந்துவிடும்.
அத்தைக் கண்டுபிடியுங்கள்!
செயல்படுங்கள்!