KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/வினாக்களின் வாசலில்....Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

வினாக்களின் வாசலில்....

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஏன் தியானம் செய்ய வேண்டும்?

துவக்க நிலைக்கான சரியான கேள்வி.

ஏன் தியானம் செய்ய வேண்டும்?

நமது வாழ்வில் தியானம் செய்வதற்கான தேவை உண்மையாகவே இருக்கிறதா?

சரி. நான் கேட்கிறேன், நீங்கள் ஏன் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இந்தத் தருணத்தில் எவ்வளவோ புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்க வேண்டிய நீங்கள், இந்தப் புத்தகத்தை எதற்காகப் படிக்கத் தேர்ந்தெடுத்தீர்கள்?

உங்கள் செயலே, தியானத்திற்கான தேவை உங்களுக்குள் ஆழமாக அமர்ந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது - நாம் ஒவ்வொருவருக்குள்ளேயும்தான்.

உங்களது இறுதியான குறிக்கோள் என்ன?

அதிகம் சம்பாதிப்பதா?

என்றும் இளமையுடன், ஆரோக்கியமாக, அழகாக வாழ்ந்திருப்பதா?

இருப்பதைவிட இன்னும், நெடுங்காலம் நீடிக்கிற உறவுகள் வேண்டுமென்பதா? உங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதா?

பட்டியலுக்கு முடிவே இல்லை - ஒவ்வொரு தனிமனிதருக்கும் வேறுவேறு இலட்சியங்கள்.

ஆனால் ஒவ்வொரு தனி இலட்சியமும் - வித்தியாசமே இல்லாமல், ஒன்றையே சுட்டிக் காட்டுகிறது. அது ஆனந்தப் பரவசம் அடைய வேண்டும் என்பதுதான்.

இதையாராவது மறுக்க முடியுமா? "எனக்கு ஆனந்தத்தில் ஈடுபாடு இல்லை. மகிழ்ச்சியாக, பரவசமாக இருப்பது பற்றி எனக்குக் கவலையே இல்லை," என்று யாராவது சொல்வார்களா என்ன?

நாம் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருப்பது ஆனந்தத்தைத் தவிர வேறில்லை. நாம் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் சொன்னாலும், நாகரிக முறையில் வெளிப்படுத்தினாலும், நாம் தேடுவதெல்லாம் ஆனந்தமே.

ஆனால் நாம் அதைத் தேடும் வழிகள்தாம் வேறு வேறு.

பணத்தின் மூலமாகவும், அதிகாரத்தின் மூலமாகவும், உறவுகளின் மூலமாகவும், - நமது அன்றாட வாழ்வின் எல்லா இன்பவியல், துன்பவியல் நாடகங்கள் மூலமாகவும், நாம் தேடிக் கொண்டிருப்பது ஆனந்தத்தைத்தான். நமது வாழ்வின் ஒரே உந்து சக்தி அதுதான்.

வாழ்நாள் முழுவதும், நாம் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருந்தும், ஏன் நம்மால் அதை இன்னும் அடைய

முடியவில்லை?

காரணம், நாம் விழிப்புணர்வு இல்லாமல் தேடுவது தான். நம்முடைய உண்மையான குறிக்கோள் ஆனந்தம்தான் என்பதைக்கூட நம்மில் 99% பேர் உணர்வதில்லை!

ஏதோ நம் வாழ்வில் குறையிருக்கிறது; பணம், உறவுகள், சொத்துகள் கொண்டு நிரப்ப முடியாத வெற்றிடம் நம்மிடம் இருக்கிறது என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம்.

வெளியுலகில் நீங்கள் சேர்த்த ஏதாவதுஒன்றாவது நிரந்தர இன்பத்தைக் கொடுக்கக் கூடியதா என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

என்றாலும், இன்னும் நாம் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

அதை நாம் அறியாதிருப்பதால், நம்மை நாமே வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே அது நமக்குள் இருந்தும்கூட உலகமெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறோம்!

நம்பினால் நம்புங்கள்.....

ஆனந்தம் நமது பிறப்புரிமை.

ஆனந்தம் நமது உண்மை இயல்பு.

ஒரு சின்ன கதை:

ஒருநாள் மாலைப் பொழுதில், குன்வார் குல்ஜீத் தமது வீட்டு வாசலில் எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.

அவருடைய மனைவி வந்து விசாரித்த போது, ஒரு நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக அவர் சொன்னார். அதைக் கேட்ட அவளும் தேடுதலில் சேர்ந்து கொண்டாள். சீக்கிரத்தில் மற்றவர்களும் அதில் சேர்ந்து கொண்டார்கள். குறிப்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் நாணயத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.

சட்டென ஓர் இளைஞன், “நீங்கள் நாணயத்தை எந்த இடத்தில் தவற விட்டீர்கள்? அது ஏன் இன்னும் அகப்பட வில்லை?” என்று குல்ஜீத்திடம் கேட்டான்.

“ஓ, அதுவா? நான் நாணயத்தை வீட்டிற்குள் தொலைத்து விட்டேன்” என்றார் குல்ஜீத்.

திகைத்துப் போன இளைஞன், “அப்படியானால் இதைக இங்கே எதற்குத் தேட வேண்டும்?” என்று கேட்டான்.

“சிக்கல் என்னவென்றால், வீட்டிற்குள் விளக்குகள் இல்லை. இங்கே என்றால், தெருவிளக்கு வெளிச்சமாவது இருக்கிறது. அதன் வெளிச்சத்தில் தேடலாமே, என்றுதான் இங்கே.....” என்றார் குல்ஜீத்!

இதைத்தான் நமது வாழ்வில் நாம் செய்து கொண்டிருக்கிறோம். தப்பான இடங்களில் தேடுவதில் நாம் திறமைசாலிகளாக இருக்கிறோம்!

எல்லா இடங்களிலும் நாம் தேடுகிறோம் - பணத்தில், அதிகாரத்தில், உறவுகளில், கொள்கை கோட்பாடுகளில். ஆனால் நாம் சரியான திசைநோக்கி நகர்வதே இல்லை - உள்முகமாக.

விழிப்புணர்வை நோக்கிய முதல்படி, நாம் தேடும் நாணயம் நம் சொந்த வீட்டிற்குள் இருக்கிறது என்பதை உணர்வதுதான். அதை உணர்ந்து விட்டால், பிறகு நீங்கள் தெருவில் தேடுவதை நிறுத்தி விடுவீர்கள்.

ஆனந்தத்தைத் தெருவில் தேடுவது வீண் என்பதை நீங்கள் உணரும் தருணமே, நீங்கள் தியானத்திற்காக இயல்பாகவே கனிந்து விட்டீர்கள் என்பதைக் காட்டும்.

ஆனந்த நிலை என்பது என்ன என்று நீங்கள் சொல்கிறீர்கள்? தியானத்தின் மூலமாகத்தான் அதை நாம் அனுபவிக்க முடியுமா?

நான் நூற்றுக்கணக்கான வழிகளில் ஆனந்தத்தை விளக்க முடியும். ஆனால் ஒரே ஒரு வழியின் மூலமாக த்தான் உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் - அதை அனுபவிப்பதன் மூலமாக!

என்றாலும், உங்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர முயற்சி செய்கிறேன்.

நாம் எல்லோருமே, நமது வாழ்வில், பெரிய அளவில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறோம். ஆனால் அவற்றிற்கு எல்லாம் காரணங்கள் இருந்திருக்கும்.

உண்மைதானே?

உங்களுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சி. ஒரு நோய் குணமாகி விட்டால் மகிழ்ச்சி. ஒரு புதிய கார் வாங்கி விட்டால் மகிழ்ச்சி. (உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் கார் மக்கர் செய்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி!).

நீங்கள் மகிழ்ச்சியடையும் தருணங்களில், உங்கள் மகிழ்வை வேறு எதனாலும் கெடுக்க முடியாது என்றே நினைக்கிறீர்கள். ஆனால் அதே நாளில், உங்கள் கணவர் அல்லது மனைவியுடன் சண்டையிட நேர்ந்தால், உங்கள் வாழ்வே படுமோசம், துக்ககரமானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!

சொல்லப்போனால், எல்லா மகிழ்ச்சிகளும் இறுதியாக வேதனைக்கே இட்டுச் செல்கின்றன.

காரண காரியங்களால் வரும் மகிழ்ச்சிநிலை, எப்போதும் நிலைத்திருக்க வழியில்லை - மகிழ்ச்சி மாறினாலோ, முடிந்து விட்டாலோ, நீங்கள் வேதனைப் படுகிறீர்கள். காரணமே இல்லாமல் வரும் மகிழ்ச்சிதான் நிரந்தரமானது. காரணம், அது எதையுமே சார்ந்திருப்பதில்லை.

ஆனந்தம் என்ற சொல்லின் சரியான பொருள், 'குறைக்க முடியாதது, இழக்க முடியாதது' - என்பதுதான்.

ஆனந்தம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் சொல் அன்று. அதன் சரியான பொருள், 'குறைக்க முடியாதது, இழக்க முடியாதது' என்பதை அறிந்த பிறகு நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள்.

ஆனந்தம் (பரவசம்) மகிழ்ச்சி அன்று. ஆனந்தம் என்பது பேரமைதி; மெளன நிலை. இன்ப துன்பங்களைக் கடந்து செல்லும்போது, நீங்கள் அதை உணர முடியும்.

அந்த நிலையில், இன்ப துன்பங்கள் உங்களைப் பாதிக்கும் சக்தியை இழந்துவிடும்.

அதனால் அந்த ஆனந்த நிலையை, நீங்கள், நிரந்தர, காரணமற்ற சாந்தி என்று சொல்லலாம்.

தியானத்தின் மூலமாகத்தான் நீங்கள் ஆனந்த நிலையை அனுபவிக்க முடியும் என்பதில்லை - ஆனால் தியானம் அதற்கு நிச்சயமான வழி.

அன்றாட வாழ்வின் இழுபறிகளிலிருந்து தியானம் உங்களைக் காக்கும். நீங்கள் தியானம் செய்யும்போது, உங்கள் உடலின் ஆணவத்தின் குறுகிய எல்லையை உடைக்கும் புரிந்துகொள்ளுதலை விசாலமடையச் செய்துவிடுவீர்கள்.

எல்லாவற்றிற்குள்ளும் உங்களை உணரும் ஒருமை உணர்வு அனுபவப்பட்டுவிட்டால், அன்றாட வாழ்வின் இன்ப துன்பப் பற்றுகளை இயல்பாகவே நீங்கள் கை நழுவ விட்டு விடுவீர்கள்.

அறிவுப்பூர்வமாக இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வது சிரமம்தான். ஆனால் ஈடுபாட்டுடன் தியானம் புரிய, உங்களுக்கு அனுபவம் வசப்படும். ஆனந்தத்தின் ஓர் ஒளிக்கீற்று புலப்படும். பிறகு எல்லாம் விளங்கிவிடும்.

நமது அன்றாட வாழ்வில் நாம் ஆனந்த அனுபவத்தை என்றும் பெறுவதே இல்லை. காரணங்கள் இல்லாத மகிழ்ச்சி இருக்கக் கூடும் என்பதே நமக்குத் தெரியாது. அப்படியானால், எப்படித்தான் நாம் அனைவரும் அந்த ஆனந்தத்தை அடைவது?

நீங்கள் அதைப் பெற்றுத்தான் இருக்கிறீர்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் உண்மையான இயல்பு!

அதை நான் விளக்குகிறேன்:

தைத்ரேய உபநிடதத்தில் ஓர் அழகிய ஸ்லோகம் இருக்கிறது. அது சொல்கிறது,

“ஏதஸ் அத்மன ஆகாசஸ்ய சம்பூதஹ
ஆகாக்ஷாத் வாயுஹூ, வாயோர் அக்னிஹி
அக்னேர் ஆப்பஹ ஆபஹ் பிரித்விஹி
பிரித்வியோர் அன்னம்”

இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு பஞ்ச பூதங்களால் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம்) உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தச் சுலோகம் சொல்கிறது. மனிதனும் இந்தப் பஞ்சபூதச் சேர்க்கையால் படைக்கப்பட்டவனே. அதனால்தான் இவனுக்கு இந்தப் பஞ்சபூதங்கள் மேல் ஆழமான ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. இவற்றோடு இணைய, அதாவது தனது மூலத்திற்குத் திரும்ப அவன் விரும்புகிறான்.

இந்த முக்கியமான ஐந்து சக்திகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ள அவன் பல வழிகளிலும் முயற்சி செய்கிறான்.

விக்கிரக வழிபாட்டின் மூலமாக, அவன் பூமிச் சக்தியோடு தன்னை இணைத்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

வேள்விகள், யோகங்கள் மூலம் நெருப்பு ஆற்றலுடன் தன்னை இணைத்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம் காற்று சக்தியுடன் இணைய முயற்சி செய்கிறான்.

இந்த எல்லா வழிகளின் மூலமும், இந்த அனைத்து முறைகளின் மூலமும், மனிதன், அடிப்படை சக்திகளோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முயற்சி செய்கிறான்.

மிக நுட்பமான, மேலான, ஆகாய சக்தியுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளுதல், புற முயற்சிகளால் முடியாத ஒன்று. அது உள் அனுபவம் சம்பந்தப்பட்டது. ஆகாய ஆற்றலுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளுதல் தியானத்தின் மூலமே சாத்தியம்.

நாம் தியானத்தில் பிரவேசித்தவுடனே, சுற்று வட்டம் பூர்த்தியாகிவிடுகிறது; பூர்த்தி செய்து விடுகிறோம். நமது மூலத்திற்கும், நமக்கும் இடையில் காணாமற்போன தொடர்புச் சங்கிலியை நாம் அப்போது கண்டுபிடித்து விடுவோம். நாம் நமது ஆதி மூலத்திற்குத் திரும்பி விடுவோம். நாம் முழுமை பெற்றுவிட்டதாக, பாதுகாப்புப் பெற்று விட்டதாக உணர்வோம். அதனால்தான், தியானம் உங்களை ஆனந்த பரவச பரிணாம நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது.

ஆகவே, ஆனந்தத்திற்கு ஆசைப்படுதல் என்பது நமது மூல நிலைக்குத் திரும்பும் தவிப்புத்தான். அதனால்தான், தெரிந்தோ, தெரியாமலோ, நமக்குள் தியானத்திற்கான ஆவல் இருந்துகொண்டே இருக்கிறது.

தியானம் என்பது திட்டவட்டமாக என்ன?

தியானத்திற்கு நிறைய இலக்கணங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு குருவும் தமது அனுபவத்திற்கு ஏற்றபடி விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, எந்த மக்களிடம் அவர்கள் பேசுகிறார்களோ, அவர்களுடைய தேவைக்கு ஏற்றபடி விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.

தியானம் என்பது வழிபாடு,

நமக்குள்ளே நாம் பூட்டி வைத்திருக்கிற செல்வத்தை நாம் கண்டுகொள்ள உதவும் வழிமுறைதான் தியானம்.

பிரபஞ்ச சக்தியுடன் உங்களைப் பிணைப்பதற்கு உதவும் வழிமுறைதான் தியானம்.

இவை எல்லாமே சரிதான்.

நான் சொல்வது இதுதான்: இந்தக் கணப்பொழுதின் ஆனந்தமே தியானம்! நீங்கள் இந்தக் கணத்தில் நிம்மதியாக, அமைதியாக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தியான நிலையில் இருப்பதாகப் பொருள். வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டியதே இல்லை.

எல்லோரும் தியானத்தைக் கற்றுக் கொள்ள முடியுமா?

தியானத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதே இல்லை. நீங்கள் ஏற்கனவே தியானத்தில்தான் இருக்கிறீர்கள்!

உங்கள் வாழ்வில் அளவுகடந்த அழகை அனுபவித்த நேரங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.

மலைக்குப் பின்னாலிருந்து கதிரவன் சட்டென மேலே எழுகிறான். அல்லது முதன்முறையாக ஓர் இனிய இசையைக் கேட்கிறீர்கள்...

அந்தக் கணத்தில், சட்டென, நீங்கள் நின்று விடுகிறீர்கள். பேச்சற்றுப்போய் விடுகிறீர்கள்.

நாம் அனைவருமே அப்படிப்பட்ட தருணங்களை அனுபவித்திருக்கிறோம். அல்லவா?

அந்தக் கணங்களில், அந்த அழகின் முன், உங்களால் மேற்கொண்டு எதையுமே சிந்திக்க முடியாது. நீங்கள் மௌனமாகி விடுகிறீர்கள். அந்த அழகு மட்டுமே கவனத்தில் இருக்கிறது. அவ்வளவுதான்.

அந்தக் கணப்பொழுதே தியானம்.

சில விநாடிகளுக்குப் பிறகு, உங்களது உள் அரட்டை மறுபடியும் ஆரம்பமாகி விடுகிறது. 'அந்த உதயம் அழகாக இருக்கிறது' என்று மனம் சொல்கிறது.

உங்கள் மனம், நீங்கள் கேட்ட இசையை, முன்பு நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு இசையோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. அதன் அர்த்தம், நீங்கள் தியானத்திற்கு வெளியே விழுந்து விட்டீர்கள் என்பதுதான்!

மௌனமாக ஆனந்த நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.

அந்த நிலையை நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது அது.

H தெளிவாக இருங்கள்: தியானம் என்பது, நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒன்றல்ல.

தியானத்தைச் செய்ய முடியாது.

உங்கள் எல்லாச் செயல்களையும் நீங்கள் கைவிட்டு விடும்போது, மலரும் ஒரு நிலைதான் தியானம்.

அது உடல் இயக்கமன்று. சிந்திப்பதுகூட ஒரு செயல்தான். மன ஒருமைப்பாடு கொள்வதுகூட ஒரு செயல்தான்!

எல்லாச் செயல்பாடுகளையும், எல்லாச் சிந்தனைகளையும், எல்லாப் பணிகளையும், எல்லா உணர்வுகளையும் களைந்துவிட்டபின், எஞ்சி இருப்பதே தியானம்.

சும்மா, அப்படியே இருத்தலே தியானம். கதையில் வரும் ஜென் குருவைப்போல, எந்த எதிர்ப்பும் இல்லாமல், நிகழ்காலத்தை அனுபவித்தலே தியானம்.

கடுமையாக உழைத்து, நீங்கள் சாதிக்க வேண்டிய

ஒன்றல்ல ஆனந்தம்.

ஆனந்தத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது; நீங்கள் ஆனந்தத்தில் கரைந்து இளைப்பாற மட்டுமே முடியும்.

ஆனந்தம் எங்கோ இருக்கும் ஒன்றல்ல. உங்கள் உள்ளேயும் வெளியேயும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றே ஆனந்தம்.

ஆனந்தம் தேடி அடைய வேண்டிய ஒன்றல்ல. இங்கேயே, இப்பொழுதே, கண்டுணரப்பட வேண்டியது.