KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/ஸ்பூர்த்தி பானாSign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

ஸ்பூர்த்தி பானா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்தத் தியானமுறையைப் பற்றி :

நீங்கள் எதைச் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அந்தச் செயலே ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு சிறந்த தியானத்திற்குரிய நுட்பம் ஆகும். நீங்கள் சும்மா அமர்ந்திருப்பதை விட, செயல்படும்போதே, விழிப்புணர்வை நிலைநிறுத்துவது எளிது.

அதுதான், 'டைனமிக் தியானம்', 'ஓடும் தியானம்.'

ஏன் ஓட வேண்டும்?

நீங்கள் ஓடும்போது, தயார்நிலையிலும், விழிப்புணர்வோடும் இருப்பீர்கள்.

ஓடும்போது, உடலும் மனமும் உயிரும் ஒன்றி இருக்கும் ஒற்றுமையை உணர்வீர்கள்.

உங்களுக்குள் உள்ள அனைத்தும் ஒன்றுபட்டு, ஒரு குறிக்கோள் நோக்கிச் செயல்படும். அமர்ந்திருக்கும்போது, உடல் மட்டுமே அசையாமல் இருக்கும். மனமோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும்! இதில், உடலும் மனமும் பிரிந்து நிற்கும். உடலோ அமர்ந்திருக்கிறது, மனமோ தன் பயணத்தைத் தொடங்கி விடுகிறது!

உங்கள் உடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிர்ச்செயல் நிகழ்கிறது.

நீங்கள் ஓடும்போது, மனம் அசைவது இல்லை,

உங்கள் மனம் பேசுவதை நிறுத்தி விடுகிறது. தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால், சற்று நேரம் ஆன பிறகு ஓட்டம் உங்களை சுவீகரித்துக் கொள்கிறது.

அப்போது, உங்களுடைய உடலும், மனமும் உங்களுக்குச் சொந்தமில்லாமல் போய்விடுகிறது. நீங்கள் ஓட்டமாகவே மாறிவிடுவீர்கள்!

செயல்முறை விளக்கம் :

ஓடுவதற்கான நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதிகாலை நேரம் சிறந்தது,

அடுத்தபடியாக மாலை நேரம்.

கதிரவனின் உதயம், மறைவு ஆகிய நேரங்களில், உடல் மிகவும் திறந்திருக்கும்; இயற்கையின் சக்திகளைப் பெறுவதற்கு மிகவும் தயாராக இருக்கும்.

எளிய, நேரான, நிசப்தமும் தனிமையும் உள்ள பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான பாதை சரிப்பட்டு வராது.

ஓடும்போது... உங்கள் கவனம் ஓட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓரத்துச் சரிவில் விழுந்து விடுவோமோ, வாகனங்கள் இடித்துத் தள்ளிவிடுமோ என்ற கவலைகள் இல்லாதபடியான பாதையாக அது இருக்க வேண்டும்.

ஓடிப் பழக்கமில்லை என்றால், கொஞ்ச தூரம் - ஒரு அரை மைல் - ஓடினால் போதும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்,

வயிற்றிலிருந்து ஆழமாக மூச்சு விடுங்கள். கைகள் எல்லாம் செயல்படும்படி ஓடுங்கள். களைப்புத் தோன்றினால், உடலுக்குச் சிரமம் கொடுக்காமல், சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

காலணிகளைக் கழற்றிவிட்டு, கால் பூமி மண்ணைத் தொட்டு உணரும்படி நில்லுங்கள். பூமியைத் தொடுவதால் கிடைக்கும், ஒரு சக்தி ஆதாரத்தை நாம் இழந்து விட்டோம். காரணம், எங்கும் செயற்கையான தளங்கள் இருப்பதால், நாம் வெறுங்காலில் நடந்து மகிழ்வதையே விட்டுவிட்டோம்.

இந்தியாவில், வெறுங்காலில் நடப்பது புனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

அதனால்தான், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும், மிதியடிகளை வெளியே விட்டு வரும்படி செய்கிறார்கள்

அந்த இடங்களில் சக்தி மட்டம் உயர்ந்திருக்கும். அந்தச் சக்தியைப் பெற உங்கள் புலன்கள் அனைத்தும் தயாராகத் திறந்து இருக்கும்படி செய்ய வேண்டும்.

பாதை நன்றாக இருந்தால், வெறுங்காலில் ஓடுவது மாபெரும் அனுபவமாக அமையும்.

புல்வெளியிலோ,
ஆற்றோரத்திலோ,
கடற்கரையிலோ முயற்சி செய்து பாருங்கள்.

பூமியோடு தொடர்பு கொள்வது,

வாழ்வின் ஆதாரமூலத்தோடு தொடர்பு கொள்வதாகும்.

மையப்பட்டு, மையத்தில் நிற்பதற்கு இது ஓர் இனிய வழி.

அதிகப்படியாக ஓடும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். காலத்தை வரையறுக்க வேண்டாம்.

உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக ஓட வேண்டாம். எடைக் குறைப்பதற்காகவும் ஓட வேண்டாம்! ஒருவேளை உங்கள் எடை குறைந்தால், அதுவும் நல்லதுதான்ஆனால் அதற்காக என்று ஓடக் கூடாது. சும்மா ஓடுங்கள்!

பல நாள் ஓடிய பிறகு, அந்தக் காரியம் மலைபோல் தோன்றினால், அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு தியான முறைக்குப் போய் விடுங்கள்! நீந்தலாம், நடனமாடலாம். மறுபடியும், செய்யலாம் என்று தோன்றினால் ஓடுவதற்குத் திரும்ப வந்து விடுங்கள்.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய, இந்தச் சில குறிப்புகள் தவிர, வேறு எந்த விதிகளையும் வகுத்துக் கொள்ளாதீர்கள்.

விதிகள், தியானத்தின் ஆனந்தத்தை அழித்துவிடும்.