மகா வாக்கியம் : சொல்லின் அதிர்வுகள் 'சுகமான ராகங்கள்'
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனக் காயங்கள் மறையும்போது,
உறவுகளின்
உள்ளர்த்தம் மிகு வார்த்தைகள்கூட
'வேடிக்கை வாக்கியமே!,
அது சிரிக்கக் கிடைத்த
இன்னொரு வாய்ப்பு
எனும் புதுப்பார்வை கிடைக்கும்.
காயம் மறைய, நேசம் மலர
இனி நீங்கள் துடிதுடித்துப் போகும்
நிமிடங்களையெல்லாம் ஆராயுங்கள்.
ஆராய்ச்சியின் பக்க விளைவு
உங்களின் சொற்களே
சுகமான ராகங்களாகும்!
நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டேங்கறாங்க? என்ன செய்வது? எல்லாம் கலி முத்திப்போச்சு... மட மனிதர்கள் மாறுவார்களா?
- ஜேம்ஸ், திருச்சி.
இது கலிகாலங்கய்யா. நீங்கள் நல்லவராக வாழ்வது மட்டுமே போதாது. நீங்கள் நல்லவர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி, நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.
நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.
"நான் நல்லவன்," எனச் சொல்வதும்,
நல்லவர் போல் நடிப்பதும் - உங்களை
கெட்டவராக்கிக் காண்பிக்கும்.
நல்லவன் நான் என
சொல்லாதீர்! காண்பிக்காதீர்!
நல்லவராகவே மாறிவிடுங்கள்.
அதை உங்கள் சொல், செயல், முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.
மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான் போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது. இது கலியுகம்.
நல்லவராயிருப்பதோடு,
புரியும் வகையில்
நல்லவராய் வாழ்ந்து காட்டவேண்டும்
- இது கலியுக நெறி
கடவுள் தானென்று
மறந்துபோனதால்,
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்
மனிதராய்.
உச்சத்தை உணருங்கள்! உணர்த்துவியுங்கள்!
"உலகையே நேசிக்கிறேன்."- இது எளிது.
ஏனெனில்
இது வெற்று வார்த்தை.
நிஜத்தில்,
பக்கத்து வீட்டுக்காரர்
பெயர்கூடத் தெரியாது!
மனித உறவுகள்
மலிந்து போயின.
உண்மையில்
மனித உறவுகள்
மகத்தானவை - அவை
உணர்வுகளின் முகங்காட்டும்
கண்ணாடிகள்.
ஆனந்த வானின்
ஜன்னல்கள்!
உறவுகளிடம்
உச்சத்தை
உணருங்கள்
உணர்த்துவியுங்கள்
இரண்டுமே தியானம்தான்!