நதியல்ல அது குரு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘என்ன இது? சொட்டு சொட்டாய்ச் சேர்ந்து, மெல்லிய கோடாகச் செல்கிறோமே, பெரிய நதியாகய் பிரவாகிப்பது எப்போது?’ என்று தொடக்கத்தில் எந்த நதியாவது தயங்குகிறதா...?
ஆனால், மனிதர்கள்தான் நானெல்லாம் சாதிக்க முடியுமா? என்று வாழ்வை மலைப்போடு பார்க்கிறார்கள்.
தொடர்ந்து முன்னேறுவதாலேயே, காண்பவர் கண்கள் விரிய, நம் கண்முன்னே எம்பிக்குதித்து வழிந்தோடுகிறது அந்த நதி.
அது சுயவிமர்சனத்தோடு, அங்கேயே தேங்கி நிற்பதில்லை. துணிந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.
“என் இலட்சியம் இந்த இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதேயாகும்,” என ஓட்டமாய் ஓடும் நதி...
நதியைப்போல்
பாகுபாடு இல்லாமல்
வாழத் தெரிந்தவருள்,
உற்சாகமும், குஷியும்
நதியைப்போல் பாயும்.
வேகமாய் முன்னேறிப் பாய்கையில், உடன்வருவது ஓடையா, சுனையா என்று பாகுபாடு பார்க்காமல், உடன் வரும் அனைவரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, குதூகலத்துடன் வேகமாக அழைத்துச் செல்கிறது, சாதிக்கிறது.
நதியைப்போல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள், உற்சாகமும், குஷியும் நதியைப்போல் பாயும்.
நதியானது, “அட நாம்தான் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டோமே,” என்று எண்ணுவதில்லை.
ஏனெனில், பெருமிதம் ‘தேக்கத்தின் தோழி’ என்று அதற்குத் தெரியும். அதனால் முன்னேறுவதே என் இலட்சியம் என்று தொடர்ந்து தம் பயணத்தைத் தொடர்கிறது.
நதியைப்போல் வாழ்பவர், விதியைக்கூட எளிதாய் வளைத்து, நெளித்து, மாற்றிவிடுவார். நதி செல்லும் வழியில், பல தடைகள் வந்து செல்லும்போது, ‘இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் செய்யும் சதி’ என்று புலம்பி, மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.
சின்னத் தடைகளைத் தாண்டிச் செல்லும்; பெரிய தடைகளாக இருந்தால், அதனைச் சுற்றி அழகாய் வளைந்து முன்னேறிச் செல்லும்.
அப்போதுகூட, ‘இந்த சின்னத் தடையெல்லாம் ஒரு தடையா?’ என்றோ, ‘ஐய்யோ எவ்வளவு தடை நம்முன்னே இருக்கிறது. இது எப்போது நகர்ந்து செல்லும்’ என்று நொந்து, அந்தத் தடை தானாக விலகும் வரை நின்று காத்திருக்காமல், தொடர்ந்து நிற்காமல் முன்னேறுவதிலேயேதான் ஒரே குறியாகயிருக்கிறது.
மேடு, பள்ளம் எனக் கரடுமுரடான பாதைகளைப் பார்த்ததும் சிறிதும் மனம் கோணாமல், அழகான இடங்களைப் பார்த்தால், இரசித்து மயங்கி அங்கேயே நின்று விடுவதில்லை.

நதி செல்லும் வழியில், பல தடைகள்
வந்து செல்லும்போது,
‘இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து
மற்றவர்கள் செய்யும் சதி’ என்று புலம்பி,
மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.
“எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்,” என்று அடுத்தவர் அறிவுரை செய்தாலும், இளைப்பாறாமல், தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்லும் அழகிய நதி, நம் முன்னேற்றத்திற்கு ஒரு முன்மாதிரி.
ஒரு கர்மயோகி, எவ்வாறு தாம் செய்த செயலுக்காகப் பலனை எதிர்பார்ப்பதில்லையோ, அதேபோன்று, தாம் செல்லும் இடங்களையெல்லாம் கொழிக்கச் செய்தாலும், அதனால் ஒரு போதும் அகம்பாவம் கொள்வதில்லை.
இவ்வளவு கடினப்பட்டு இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோமே? இப்படி நம்மையே அடையாளம் தெரியாமல் காணாமல் போகச் செய்யும் கடலுக்குள் செல்வதற்காகவா?
“இலட்சக்கணக்கானவர்கள் என்னால் பயன்பெற்றனர். ஆனால், முடிவில், என் தனித்துவம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறதே!” என்று கடலுள் கலப்பதைப்பற்றி நினைத்துக் கண் கலங்கி நிற்பதில்லை.
அதனால்தான், நதி, கடலாகிறது.
இப்படி வாழத்தெரிந்த தனி மனிதரே மக்கள் திலகமாகவோ, மஹாத்மாவாகவோ, மகா ஞானியாகவோ மாறுவார்.
ஆழ்ந்து புரிந்துகொண்டால், நதி நமக்கு மிகப் பெரிய ஆன்மீக வழிகாட்டி என்பதை உணரலாம்.
நதிபோல் வாழுங்கள். விதிபோல் பாடுபடுவது நிற்கும். சதிபோல் தெரிவதெல்லாம் மதியால் புது உருவெடுக்கும். புது குதூகலம் உயிரில் ஒட்டிக்கொள்ளும்.
ஆரம்பத்தில் சிறிய கோடாயிருந்தாலும் கொஞ்ச காலத்திலேயே பெரிய பிரவாகமாகி விடுவீர்கள்.
நதிபோல் வளைந்து செல்பவருக்குத் தடைகள் என்ற ஒரு அம்சம் இருக்கவே முடியாது.
நதியைப் போல் வாழ விதியைக்கூடத் திருத்தலாம், மாற்றலாம்.
சில நிமிடங்கள் கண்களை மூடி நதியின் போக்கு, துள்ளல், எளிமை போன்ற எல்லா குணங்களையும் தியானியுங்கள். அது, உங்களின் உணர்வு நதிக்குள் கலக்குமளவுக்கு, ஆழமாய்த் தியானியுங்கள்.
நீங்கள் ஒரு உற்சாக நதியாவீர்கள். உங்களுள் ஓர் ஆனந்த நதி பிரசவிக்கும் அதிசயத்தை உடனே காண்பீர்கள். தியானித்துப்பாருங்கள்.
தப்புன்னு தெரியுது. அந்த நேரம் வரும் போது நம்மையும் மீறி தப்பு நடந்திடுதே, தவிர்க்க முடிவதில்லையே, ஏன்? -மௌரி, உத்ராஞ்சல்
‘தப்பு’ என்பது ஆழ்மனத்தைப் பொறுத்த அளவிற்குச் சுவையான ஒரு பதார்த்தம்.
சாதாரண ஒரு செயலை, ‘இது தப்பு’ என்று சொல்லிவிட்டால், நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும்.
ஆழ்மனம்தான் 90 சதவீதம். மேல்மனம் வெறும் 10 சதவீதம்தான்.
அதனால்தான், பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனதிலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.
இது மிகக் கடினமானது. மீகுக போன்ற உயர்நிலை தியான வகுப்புகளில்தான் ஆழ்மனதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரஸவாதத்தை நிகழ்த்த முடியும்.
இப்போதைக்குத் தப்பைப் பற்றிச் சரியான தெளிவே போதுமானதாயிருக்கும்.