KAILASA Library/மனதைத் திற/மகாவாக்கியம்Sign in
மனதைத் திற

மகாவாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“மனத்தைச் செதுக்கலாம், புதுமனம் படைக்கலாம்,”

செதுக்கப்படாத வரை, பாறைக்குள் அழகுச் சிலை ஒளிந்தேயிருக்கும்.

பாறை அழகுச்சிலையாவது சிற்பியின் கை வண்ணத்தால், உணர்வென்னும் உளியை உள்ளெடுத்து வராத வரை, மனம் கல்லாக இருக்கும்; உணர்வால் செதுக்கச் செதுக்க கல்லாயிருக்கும் மனம் அழகாகும். ஆரோக்கியமாகும்.

விரும்பினால், முயன்றால், நீங்களும் சிற்பியாகலாம், புது மனம் படைக்கலாம்.

பட்ட காலிலேயே படும் என்பது போலத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பிரச்சினைகளையே சந்திக்கிறேனே... ஏன்? என்ன தீர்வு?

  • சசீந்தரன், லால்குடி

கதைப்புத்தகம் ஒன்றை ஊன்றிப்படித்துக் கொண்டிருந்த நிட்டியிடம், அவரின் மனைவி முகத்தைத் திருப்பிச் சொன்னார்...

“நிட்டி, நீங்கள் இனி ம்ம்... அதுசரி... ஆமாம்... என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் என் பேச்சை நிறுத்தி கால்மணி நேரமாகிறது.”

இப்படி ஒரே நேரத்தில் இரட்டைச் செயல் செய்யும் மன வியாதி எல்லோரிடமும் இருக்கிறது. இது ஒரு தவறான மனப்பழக்கம். வண்டி ஓட்டிக்கொண்டே எதையாவது யோசிப்பது, சாப்பிட்டுக்கொண்டே டி. வி பார்ப்பது, படித்துக்கொண்டே எதையாவது கற்பனை செய்வது... என இரட்டைச் செயல் செய்யும் போதுதான், மனிதர்களை இயந்திரத்தனம் தொற்றிக் கொள்கிறது.

எதையும் முழுமையாய்ச் செய்யாமல் இரட்டைச் செயல் செய்தால்... நிட்டி போல் எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரே மாதிரியான பிரச்சினைகளையே திரும்பத் திரும்ப ஒருவர் சந்திக்கக் காரணம், அவர் ஒரே ஒரு முறைகூட அந்தப் பிரச்சினையை முழுமையாய் அணுகவில்லை என்பதுதான்.

உடல் ஓரிடத்தில் இருக்க, எங்கோ மனம் சுற்றித்திரிவது, ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. இது தொடர்கதையாகவும் மாறிவிட்டது.

பிரச்சினைகளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும், சிந்திக்கும் மனம் சிறப்பாய்ச் செயல்படுவதில்லை. இரட்டைச் செயலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிரச்சினைகளை முழுமையாய் எதிர்கொள்ளுங்கள். எதைச்செய்தாலும் முழுமையாய்ச் செய்யுங்கள். வழக்கமான மனப்பழக்கம் வலுவிழக்கும். வழி பிறக்கும்.