KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எதிரிகள் எதிரிகளேயல்ல

குறைகாணும் மனம் - தனக்கு ஏற்றார் போல நீதி நெறிகளை வளைத்துக் கொள்ளும்.

தான் வாழ, அது மற்றவரின் குறையைத் தர்க்க ரீதியாய்க் குற்றம் எனக் காட்டும். எதிரிகளை உருவாக்கும்.

ஒருவரின் குறைகளை மட்டும் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை "உங்களின் எதிரி." நிறைகளின் கூட்டுத்தொகை, "உங்களின் நண்பன்," கூட்டுத்தொகையை மாற்றுங்கள். நண்பர்களின் கூட்டுத் தொகை அதிகரிக்கும். எதிரிகள் எதிரிகளேயல்ல என்பது புரியும். “உங்களின் சக்தியை வீணடிக்குமளவிற்கு முக்கியமானவர்களா உங்கள் எதிரிகள்?!

மற்றவரின் துர்ச்செயல்களால் மிகவும் துன்பப்படுகிறேன். மனித நேயம் குறைந்துவிட்டதா?

-பானு, மேட்டுப்பாளையம்

ஜென் ஞானி ஒரு முறை தம் வெள்ளை உடையில் ஒரு சொட்டுச் சிவப்பு மைவிட்டு “இது என்ன?” என்று சீடர்களிடம் கேட்டார்.

“அச்சச்சோ! நல்ல, உடை இப்படிப் பாழாப் போச்சே,” என்றார்கள்.

“வெள்ளை உடையில் ஒரு பொட்டுச் சிவப்பு. இதைச் சொல்ல இவ்வளவு உணர்ச்சின் கொந்தளிப்புத் தேவையா. அச்சச்சோ அதிகமில்லையா?” என்றார்.

துர்ச்செயல்கள், எதிரானவை என நாம் முத்திரை குத்தித் துன்பப்படுவதற்குக் காரணம் - இதுபோன்ற மிகைப்படுத்துதல்தான்.

குறைகாணும் குணம் நாளடைவில் கொந்தளித்து எழும் மனப்பழக்கமாக எல்லோருக்குள்ளும் மாறிவிடுகிறது. சிறு தவறுகள்கூட சீற வைக்கின்றன நம்மை.

கொந்தளித்தெழும் மனப்பழக்கத்தைச் சரிசெய்து விட்டால், நம்மாலும் இயல்பாய் ஆனந்தமாய் இருக்கமுடியும்.

‘மோசமானவன்’ ‘அயோக்கியன்’, ‘என் எதிரி’ எனக் கொந்தளித்தெழாமல், அந்த மனிதரிடம் இந்தச் சிறு தவறு இருக்கிறது என இயல்பாகக் கூறி, அந்த நண்பனை இழக்காதிருப்போம். குறைகளையே காணும் குணம் மாற, நிறைகளையே முதலில் கண்டுபிடிப்போம், அதையே அதிகம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குணமாக மாற்றுவோம்.

‘இதெல்லாம் என்னால் முடியுமா?’ என்று தயங்காதீர்கள். நிறைகளால் மனத்தை நிரப்பும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். நிறைகளைச் சேகரியுங்கள், கொந்தளிக்கும் குணம் குணமாகும். மனித நேயம் குறைந்ததாய்க் காட்டும் 'குறைகுணம்' குறையட்டும்.