மகாவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘‘அன்பு - மருந்துக்கெல்லாம் மருந்து,’’
ஞானியின் பூரண அன்பு நிலையை அடைந்தபின்தான் முழு அன்பு செய்ய வேண்டும் - என்ற கட்டாயம் இல்லை.
உங்களின் சாதாரண பாசத்திற்கே அளப்பரிய மருத்துவ சக்தியுண்டு.
பாசத்தை வழங்குவதில் பூரணமாகுங்கள். ‘‘முழுப்பாசம் - முழுமருந்து,’’ உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்!
பாசத்தின் உச்சிக்குச் செல்லுங்கள், அன்பின் பாதம் தரிசிப்பீர்கள்.
ஆனந்தமடைவீர்கள்.
பலகாலமாய் அன்பு கஜானா பூட்டப்பட்டேயிருக்கிறது.
பெட்டிக்குள் கட்டித்தங்கமாய்... அதனால்
யாருக்கென்ன பயன்?
அன்பைப் பகிருங்கள்.
பரவசமாவீர்கள்.
திருந்தாதவர்கள் இருந்தென்ன பயன். மகான்களால் இவ்வளவு காலம் மாறாதவர்கள், இனியா மாறப்போகிறார்கள்? எனக்கு நம்பிக்கையில்லை.
~~-இராபின்சன், நீலகிரி.~~
‘‘என்ன சொன்னாலும் திருந்தாத இந்தச் சமுதாயத்திற்கு, என்னதான் நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் தானே,’’ என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு, ‘‘பெருங்காயத்தால் கடல் வாசம் பெறுகிறதோ இல்லையோ, கடலில் கரைக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வாசமாகும்,’’ என்றேன்.
சமுதாயத்தில் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல முயற்சிகள் சில வேளைகளில் பொய்த்துத்தான் போகின்றன.
அதற்காக உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது உங்கள் வாழ்க்கையை வாசமாக்கும்.
உண்மைகளை உணர்வதற்கு முன்புவரை நீங்களும் திருந்தாதவர்கள் பட்டியலில்தானே இருந்திருப்பீர்கள்.
முன்னாள் திருந்தாதவர், இந்நாளில் திருந்தாதவரை சலித்துக்கொள்வது எந்தவகையில் நியாயம். ஜூனியர்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஏதாவதொரு நொண்டிச்சாக்கைக் காட்டி உங்களை பொறுமையிழக்கச் செய்யும் வெறுமை குணங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.
உங்களால் முடிந்த நல்லதையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள். வாழ்வில் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.