துன்பக் கணக்கெடுப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைக்க முடியுமா?
பத்து லட்டுகளை சாப்பிடுவதால் இனிப்பின் மீதான வெறி குறையுமா? மறையுமா?
நிஜத்தில் சாத்தியமில்லாத, கற்பனைக் காவியங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், படிப்பதால், பகல் கனவுகள் திருப்தி பெறுமா?
எல்லாவற்றிற்கும் பதில்: 'ஆம்' என்றால் வெளியுலகின் கேளிக்கைகள் உங்களுக்குத் திருப்தியையும், நிம்மதியையும் தரும் இல்லையென்றால்.... திருப்தி இல்லை என்பது உறுதியாகிறது.
நீங்கள் எங்கெங்கோ செல்கிறீர்கள். ஏதேதோ செய்கிறீர்கள்.
என்ன செய்தாலும், உங்களின் நிம்மதி உங்களிடமிருந்து தூரமாகப் போய்க் கொண்டேயிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
அனுபவிக்கும் தன்மை அதிகமாகாமல் எவ்வளவுதான் சுக போகங்கள் அதிகமானாலும் நிம்மதியோ, ஆனந்தமோ கிடைக்காது. மாறாக நிம்மதியின்மையும் அதிகமாகும். அதிருப்தித் தீயை அணைப்பதற்காக, நீங்கள் ஊற்றும் எல்லா சிற்றின்பங்களையும் கணக்கெடுங்கள். வாழ்க்கையின் விளையாட்டுப் புரிய வரும்.
துன்பக் கணக்கெடுப்பு செய்ய, சில டிப்ஸ் :
உங்களுக்கு மிகவும் பிடித்தவை எவை? (இன்னும் ஒரு முறை கூட நீங்கள் அவற்றை முழுமையாகத் தாண்டி வாராததால்தான் உங்களின் டாப் டென் - ஸ்டில் அவை இடம்பெற்றிருக்கின்றன).
திரும்பத் திரும்ப மனதில் நீங்கள் அசைபோடும் சந்தோஷ நிகழ்வுகள் எவை?
(மனமானது அசைபோடும் கலையைக் கற்றுக்கொண்டு விட்டது என்பதற்கான அறிகுறி இவையே. இன்று மனம் அசை போடுவதை சந்தோஷம் எனச் சொல்கிறீர்கள்.
நாளை அதே மனம் அசை போடப்போகும் வேறு சிலவற்றைத் துன்பம் எனச் சொல்லப் போகிறீர்கள். "என்னை வாட்டும் எண்ணங்கள் இவை" எனச் சொல்லப் போகிறீர்கள்.
இன்பம் இது, துன்பம் இது எனப் பிரித்துப் பார்க்க முடியாத மனதின் இந்த அசைபோடும் செயல் சரிசெய்யப்பட வேண்டும்.
உங்களைக் கஷ்டப்படுத்தும் நினைவுகள் எவை?
உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காதவை எவையெவை?
இந்த நான்கு கேள்விகளுக்குள் உங்களின் துயரங்களுக்கான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. கேள்விகளுக்கான பதில்களை, ஒரு தனி புத்தகத்தில் எழுதுங்கள். எழுதுவதை மிக சிரத்தையோடும், மிக நேர்மையோடும் செய்யுங்கள்.
கண்டுபிடித்த வெறி, வெறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வே, உங்களைப் பற்றிய ஒரு தெளிவான வர்ணனையைத் தரும்.
உங்களைப் புரிந்து கொள்ளவும், உங்களைச் செதுக்கவும் துன்பங்களைத் தாண்டவும் இந்தக் கணக்கெடுப்புகள் உளிகள் போலச் செயல்படும்.
உங்களின் இன்றைய இந்தக் கணக்கெடுப்புகள் ஆனந்த வாழ்வின் அஸ்திவாரமாக மாறும்.

துன்பம் என்பது
தூங்கும்
எரிமலை குழம்பு!