KAILASA Library/தியானம்/8. தியானம் செய்வது எப்படி?Sign in
தியானம்

8. தியானம் செய்வது எப்படி?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

◆ மனதால் கட்டுப்படுத்தப்பட்டு, எண்ணங்களின் போக்குப்படி அலைக்கழிக்கப்படுவதால்தான் மனிதனால் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை.

◆ அகங்காரமே! எங்கே இருக்கிறாய் நீ! என்று உள்நோக்கிய உணர்வோடு பிரயாணித்தலே தியானம் செய்தல். இதில் ஒரு பார்வையாளன் போல் ஈடுபட வேண்டும்.

◆ எண்ணங்களின் ஓட்டம் குறையக் குறைய, உள் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

◆ மனிதனை அடிமைப்படுத்தி, கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து சுதந்திரமாக ஆர்ப்பரிப்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.

இந்த தலைப்புக்கு பதில் தெரிந்துகொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான். அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல்முறையாகத் தன்னுள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இயல்பாக இருக்கிறேன் என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் உள்ளே இருக்கும் இயல்பற்ற தன்மைதான் தியானத்தில் அமரும்போதுதான் அவர்களுக்கேத் தெரியவரும்.

ஒரு சுவாரஸ்யமான சம்பவம்,

இந்தியா சுதந்திரம் பெற்ற இருபத்தைந்தாவது நாள். தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாசிரமம் நோக்கி ஆந்திராவில் இருந்து உள் சுதந்திரம் தேடி, தியானம் கற்க வந்திருந்தான் அந்த இளைஞன்.

என்றும் போல் இன்றும் காலார நடந்து வர ரமணமகரிஷி புறப்பட்டு விட்டிருந்தார்.

உள் சுதந்திர தீ கொழுந்துவிட்டு எரிவதால் நிமிடநேரத்தையும் வீணாக்க அந்த இளைஞன் தயாராக இல்லை.

ரமண மகரிஷியை வழிமறித்து, "சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகு தூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்கு தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்ய சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்" என்று கேட்டுக் கொண்டான் இளைஞன். கேட்டவனின் கேள்வியை ரமணர் கண்டுகொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை அவரின் உடல் அசைவுகள். ரமணர் சிரித்துக் கொண்டே கால்களையும் கணக்கால் களையும் தேய்த்துக்கொண்டு நடப்பதற்கு புறப்பட்டார்.

இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.

ரமணர் தமது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க! பின்னால் இருந்தவர்களை நோக்கித் திரும்பி, "எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன சொல்வது?

தானிருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது. மிகச்சரியானது. அந்த இடத்திலேயே தியானம் செய்" என்ற வரிகளை சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.

பக்கத்திலிருந்தவர்களிடம், "என்னங்க இவர்! நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதை கேட்கவா நான் ஆந்திராவிலிருந்து வந்தேன்.

இவர் பெரியவர், அதனால் எனக்கு தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால், 'தானிருக்கும் இடத்திலேயே இரு' என்கிறாரே! இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன். அப்போ நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம்கொள்வது? இதென்ன வீண் விளையாட்டு!" என்று நொந்துபோய் பேசினான்.

ரமணமகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவனிடம் சொன்னார் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.

பின் பக்தர் ஒருவர் இந்த இளைஞனை தனியே அழைத்துச் சென்று, "நண்பா, பகவான் தமாஷாகச் சொன்னாலும் சரி, விளையாட்டாகச் சொன்னாலும் சரி, அவர் பேசுவது சத்தியத்தைப் பற்றி மட்டுமே.

'நான்' என்கிற அகங்காரம் எங்கே இருந்துகொண்டிருக்கிறதோ அதுவே 'நீ' இருக்கும் இடம். அந்த அகங்காரம் இருக்கும் இடத்திற்கு விழிப்புணர்வோடு சென்று, பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருத்தலே தியானம். நீ (அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணர்வோடு இருப்பதுதான் தியானம். அதை விட்டு, விட்டு இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா? அங்கே உட்காரலாமா? என்று கேட்பது எல்லாம் நேர விரயம்" என்று விளக்கம் சொல்லி முடித்தார்.

"ஓஹோ! தியானம் என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல் வெளி விஷயங்களில் நான் விளையாட்டுத் தனமாக இருப்பதைதான் மகரிஷி விளையாட்டாய் குத்திக் காண்பித்திருக்கிறார்" என்பதைப் புரிந்துகொண்ட அந்த இளைஞன் தியானத்தில் முழுமையாக ஈடுபட்டான்.

தியானத்தில் ஈடுபடுவது சுலபம். சில சூட்சமங்களை சரியாகப் புரிந்துகொண்டால் தியானத்தில் வேகமாக முன்னேறலாம்.

"உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வை நோக்கி ஊடுருவுங்கள்" - இதைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தால்...

தியானசூத்திரம் - எண்ணங்களை சாட்சியாக மாத்திரம் பார்

மனக்காட்சிகளை
நிறுத்தாதே!
தொடராதே!
உருவாக்காதே!
எண்ணங்களையும்,
காட்சிகளையும்
தொடர்ந்து பார்.
எண்ணங்களும்
நிற்க ஆரம்பிக்கும்.
பின் நின்றுவிடும்.
ஆனந்தம் பொங்கும்.

ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்.

சினியமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் சினிமாவில் உங்களுக்கு பிடித்த காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்கா அதே காட்சிகள் தொடர்ந்து வராது. அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்த படம் சரியில்லை, போர் அடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.

சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு 3 மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்துவிட்டு தானே வருவீர்கள்? அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள். வெறுமனே பாருங்கள் சாட்சியாக மாத்திரம் பாருங்கள். 30 நிமிடம் உள்ளேயே ஒரு சினிமா பாருங்கள்.

◆ ஒருவேளை! வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை காட்சிகளை நிறுத்த வேண்டாம்.

◆ வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை தொடர வேண்டாம்.

◆ புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.

இந்த மூன்று விதிகளை கடைப்பிடித்தால் சாட்சியாக மாத்திரம் பார்ப்பது சுலபம். தியானத்தில் நன்றாக ஈடுபடமுடியும். தியானித்துப் பாருங்கள்.