7. கேள்வி - பதில் பகுதி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1. எதற்கு ஆனந்தம் என்ற வார்த்தையை ஞானிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? ஆனந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன! ஒரு பெரியவரின் கேள்வி இது.
சந்தோஷம் வேறு; ஆனந்தம் வேறு; சந்தோஷத்திற்கும் ஆனந்தத்திற்கும் சம்பந்தமே கிடையாது.
நாக்கு சுவைக்கும், எல்லோருக்கும் தெரியும்! நாக்கில் இனிப்பை எடுத்து வைத்தால் அது இனிக்கத்தான் செய்யும். உங்களுக்கும் இனிக்கும் எனக்கும் இனிக்கும்.
70, 80 வயது ஆனவர்களுக்கு இனிப்பை நாக்கில் வைத்தால், இனிப்புச் சுவை உங்களுக்குத் தெரிகிற அளவிற்கு அவர்களுக்குத் தெரியாது. வயதாக, வயதாக அதன் சுவைக்கும் திறன் குறையும். அந்தச் சுவையை சுவையென்று உணர வைப்பது சுவைக்கும் சக்தி. சுவைக்கும் சக்தி ஒரு தனி வஸ்து. ஒரு தனி நரம்பு போன்று சுவைக்கும் சக்தியும் ஒரு தனி வஸ்து. அது இயங்கிக் கொண்டே இருக்கிறது. நாக்கு இருப்பதால் மட்டுமே சுவைத்துவிட முடியாது. சுவைக்கும் சக்தி சரிவர இயங்க வேண்டும்.
அந்தச் சுவைக்கும் சக்திக்குப் பெயர் ஞான இந்திரியம். நம் உடலில் ஐந்து புலன்கள் உண்டு. அந்த ஐந்து புலன்களும் செய்யும் வேலை - பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், அனுபவித்தல்.
இந்த ஐந்து உணர்வுகளுக்கும் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, சுவைக்கும் சக்தி, நுகரும் சக்தி, அனுபவிக்கும் சக்தி என்ற ஐந்துவிதமான சக்திகள் இருக்கின்றன. இந்த ஐந்து சக்திகளும் ஒழுங்காக இருந்தால்தான் நாம் புலன்கள் மூலமாக உலக இன்பங்களை முழுமையான அனுபவிக்க முடியும். இவைதான் பஞ்ச இந்திரியங்கள்.
அனுபவிக்கும் சக்தியின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கிறது. (ஞான இந்திரியங்களின் செயல் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கிறது.) சுவைக்கும் சக்தி எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான், அந்தச் சுவையை நாம் அனுபவிக்க முடியும்.
வெறுமனே, மைசூர் பாகுவை எடுத்து வாயில் போடுகிறீர்கள். அதில் கிடைக்கும் இன்பம் வெறும் புலனின்பம். நாக்கு என்ற புலனின் இன்பம். அது சந்தோஷம்.
அதுவே, அந்தச் சுவைக்கும் சக்தி முழு வஸ்துவாக மாறி, முழுமையாக வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அந்த சுவைக்கும் சக்திக்கும் தனி பரிமாணம் கிடைக்கும் அப்பொழுது அதே சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும் அது ஆனந்தம்.
சாதாரண இருளின் மதிப்பு நமக்குத் தெரியாது எத்தனை பேருக்கு இங்கே இருளுக்கு மதிப்பு தெரியும்? கிட்டத்தட்ட யாருக்குமே தெரியாது! இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, காலையில் சுமார் ஒரு மணிநேரம் நல்ல வெயிலில் கடுமையான பயிற்சிகளைச் செய்து முடிந்தபின், வந்து உட்கார்ந்தால் தெரியும்... அப்போது கண்களை மூடினால் அந்த இருள் எவ்வளவு பெரிய சுகம் என்று. அத்தகைய இருளுக்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். ஏனென்றால் இருள் என்பதும் சக்திதான்.
மொத்தப் பிரபஞ்சத்தையும் எடுத்துப் பாருங்கள். என்ன இருக்கிறது? பிரபஞ்சம் தான் கடவுள் என்றால், பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது? கருப்புதான் எங்கும் இருக்கிறது. அப்படியென்றால் கடவுளின் நிறம் என்ன? கருப்புதான்.
நாம் பேயை, பிசாசை என்ன நிறத்தில் காட்டுகிறோம்? அதுவும் கருப்பு நிறத்தில்! ஏதாவது ஒத்து வருகிறதா? ஒன்றும் ஒத்துவராது. ஏனென்றால் இவையெல்லாம் கற்பனையின் கோலங்கள்; எண்ணங்களின் வெளிப்பாடு. சந்தோஷம் என்று நாம் சொல்வதுகூட ஒரு எண்ணம்தான்.
ஒரு நாலு பேர் சேர்ந்து நம்மைப் புகழோ புகழ் என்று புகழ்கிறார்கள்! நாம் என்ன நினைத்துக்கொள்வோம்? ‘ஆஹா! நாம் ஒரு பெரிய ஆள்தான். அதனால்தான், மற்றவர்கள் நம்மைப் புகழ்கிறார்கள்’ என நினைத்துக்கொள்வோமா, இல்லையா?! இதுபோன்ற எண்ணத்தின் வெளிப்பாட்டைத்தான் சந்தோஷம் என நாம் நினைத்துக்கொள்கிறோம். அது சந்தோஷம் அல்ல.
சந்தோஷத்தைத் தாண்டி, ஆனந்தம் என்ற ஒன்று இருக்கிறது. இன்பம், துன்பம் என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டதுதான் ஆனந்தம். நமக்குத் தெரிவது எல்லாமே இன்பம், துன்பம் என்ற இரண்டு மட்டுமே.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்! நாம் எந்த அளவிற்கு இன்பம் அனுபவிக்கிறோமோ, அந்த அளவிற்கு துன்பத்தையும் அனுபவிப்போம்.
இன்பம், துன்பம் இரண்டும் இரண்டு கோடி. இந்த இரண்டு கோடிக்கு இடையில் மனம் ஆடி, ஆடி, ஆடி, அடங்கி, ஒரு நேரம் நடுவில் நிற்கும். அதுதான் ஆனந்தம். அந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாது.
இதற்கு ஒரு அருமையான அறிவியல் விளக்கம் இருக்கிறது.
எலக்ட்ரான் என்பது என்ன? என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய விஞ்ஞானிகள் குழு, ‘எலக்ட்ரான் என்பது துகள்’ என்றது.
மற்றொரு விஞ்ஞானிகள் குழு, ‘எலக்ட்ரான் என்பது துகள் அல்ல, அது ஒரு அலை’ என்றது. அதற்குப் பிறகு மூன்றாவதாக ஒரு விஞ்ஞானிகள் குழு, இந்த இரண்டு கருத்துகளையும் ஆய்வு செய்தது.
துகள் - இருக்கிற மாதிரி தெரியும். அலை - நகர்ந்து கொண்டே இருக்கும்.
ஆய்வின் முடிவில் எலக்ட்ரான் துகள் மற்றும் அலை என்ற இரண்டின் பண்பையும் பெற்றிருக்கிறது. அதிலும் ஓர் வினோதம். எலக்ட்ரான் ஒரே நேரத்தில் துகளாகவும் அலையாகவும் இருந்து கொண்டே இருக்கிறது.
அது நிலையாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது, நிலையாக இல்லை என்றும் சொல்ல முடியாது. துகளாக இருந்துகொண்டு, அலையாக அலையும். இந்த நிலைக்கு என்ன பெயரிடுவது என்று தேடியதின் விளைவே 'Quntum' என்ற வார்த்தையின் கண்டுபிடிப்பு. எலக்ட்ரான்கள் போன்றே இரு நிலைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன.
உங்கள் வாழ்க்கையில் இரண்டு இரண்டாக என்னென்ன இருக்கின்றன என்று சொல்லிப் பாருங்கள்! இருள்-வெளிச்சம், ஆண்-பெண், சிவன்-சக்தி, இன்பம்-துன்பம், சந்தோஷம்-கவலை! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சந்தோஷம்-கவலை என்ற இருநிலைக்கு அப்பாற்பட்டதுதான் ஆனந்தம்.
எந்த ஒரு சொல்லுக்கும் ஒரு எதிர்ப்பதம் இருக்கும். அந்த எதிர்ப்பதைத் தாண்டி இன்னொன்று இருக்கிறது. அது என்னவென்பதை நாம் அறிந்து கொண்டால், நாம் எல்லோரும் இப்படி இருக்க மாட்டோம்! இந்த உலகத்தையே சொர்க்கமாகப் பார்ப்போம்.
அந்த மூன்றாவதை உணர்வதற்குப் பெயர்தான் ஞானம். அதை உணர்ந்துகொண்டால் பெறுவதுதான் ஆனந்தம்.
2. சந்தோஷம், துன்பம் அடையாமல், நேராக ஆனந்தத்தை அடைய முடியுமா? - ஒரு பெண்மணி இப்படிக் கேட்டார்.
குழந்தைகளுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அழகாக இருக்கும். அசிங்கமான ஒரு குழந்தையைப் பார்க்க முடியுமா? அழகான ஒரு மனிதனைப் பார்க்க முடியுமா? கஷ்டம்! நடைமுறையில் மிகமிகக் கஷ்டம்.
ஆனால் அழகான குழந்தையைப் பார்க்க முடியும். அசிங்கமான குழந்தையைப் பார்க்க முடியாது; அசிங்கமான ஞானியைப் பார்க்க முடியுமா? முடியாது.
ஞானியும் அழகான இருக்கிறார்; குழந்தையும் அழகாக இருக்கின்றது; இடையில் இருக்கிற நம்மிடம் தான் ஏதோ ஒரு குறை. ஆனந்தமாக இருந்த நாமெல்லாரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் துக்கம் என்ற வலையில் விழுந்து விட்டோம். ஆனந்தம் என்பது நிறைவு நிலை. குழந்தை பல பிறவிகள் எடுத்து, ஏதோ ஒரு பிறவியில் ஞானியாகிறது.
குழந்தையும் ஆனந்தமாக இருக்கிறது; ஞானியும் ஆனந்தமாக இருக்கிறார்.
ஆனந்தமாக இருந்த நாமெல்லாரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் துக்கம் என்ற வலையில் விழுந்து விட்டோம். ஆனந்தம் என்பது நிறைவு நிலை. குழந்தை பல பிறவிகள் எடுத்து, ஏதோ ஒரு பிறவியில் ஞானியாகிறது.
இந்த குழந்தை, ஞானியாகும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த துக்கம் என்பது நடைபெறுகிறது. கிட்டத்தட்ட துக்கம் என்ற ஒன்று மாத்திரமே நடைபெறுகிறது. வலி என்ற ஒன்று மாத்திரம்தான் நடைபெறுகிறது.
ஒரு நல்ல குடும்பப் பெண் என்றழைக்கப்படும் பெண்ணுக்கு, மற்றவரின் மதுப் பழக்கம் மனவேதனை தரும் அதே நேரம், விலைமாது என்றழைக்கப்படும் பெண்ணுக்கு மதுப் பழக்கம் இனிக்கும். குடும்ப பெண்ணுக்கு - மது துக்கத்தைத் தருகிறது; விலைமாதுவுக்கு-மது சந்தோஷத்தைத் தருகிறது. இது எப்படி சாத்தியம்? ஒரு பெண்ணுக்கு அது துன்பம்; மற்றொரு பெண்ணுக்கு அதுவே இன்பம். காரணம்
- மனோநிலை வேறுபாடுகள் தான்.
மொத்த உலகத்திலும் இரண்டே இரண்டுதான் இருக்கிறது. ஒன்று வலி, மற்றொன்று ஆனந்தம். இந்த இரண்டைத் தவிர்த்து வேறு ஒன்றும் கிடையாது. வலியின் இருவேறு வெளிப்பாடுகள்தான் இன்பமும்-துன்பமும். சந்தோஷம்-துக்கம். நீங்கள் ஒன்றை துன்பம் என்று நினைத்தால் அது துன்பம்; அதை இன்பம் என்று நினை த்தால் அது இன்பம்; இன்பம் துன்பம் இரண்டுமே உங்களுடைய மனக்கோட்டை; மனக் கற்பனை; மனநிலை சம்பந்தப்பட்டது.
அந்த மனக் கோட்டையை மாத்திரம் எடுத்துக் கீழே போட்டுவிட்டால், இன்பத்தையும் துன்பத்தையும் தாண்டிய ஆனந்தத்தை அடையலாம். ஆனந்தத்தை அடைய முடியும்! வலியிருந்து நேராக ஆனந்தத்திற்குத்தான் போக முடியும். இடையில் சில நேரம் சந்தோஷமாகவும். சில நேரம் துக்கமாக இருப்பதாகவும் நமக்கு நாமே ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
3. இந்த உலகத்தில் பற்றோடு இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியுமா, பற்றற்று இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியுமா? - ஒரு பெரியவரின் கேள்வி இது.
இந்த உலகத்தில் பற்றோடு இருந்தாலும், பற்றற்று இருந்தாலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது; இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலையிருக்கிறது. சற்று முன்னர்தான் இதைத் தெளிவாகச் சொன்னேன். உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதை ஒரு அட்டவணையாக எழுதுங்கள். அவற்றிற்கெல்லாம் ஒரு எதிர்ப்பதமே இருப்பதை அறிவீர்கள்.
பற்றோடு இருத்தல், பற்றற்று இருத்தல் என்பவை, நாம் புரிந்துகொள்வதற்காக ஞானிகள் கூறிய வார்த்தைகள். இன்பம், துன்பம் என்பவை நீங்கள் கண்டுபிடித்த வார்த்தைகள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. ஞானிகள் கண்டுபிடித்துக் கொடுத்தவை.
மனிதன் மனித வாழ்க்கையைப் புரிந்துகொண்டு ஆனந்தமாக வாழ்வதற்காக காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றார்போல் உருவாக்கிக் கொடுத்த வார்த்தைகள்தான் இவை.
‘பற்றோடு இருத்தல்’ என்ற விஷயம் உங்களுக்குத் தெரிந்துள்ளதால், ‘நீங்கள் பற்றால் சிக்கி இருக்கிறீர்கள். உங்களுடைய மனம் அங்கே இருக்கிறது’ என்று சொன்னால் உடனே புரிந்துகொள்வீர்கள்.
ஞானி தான் இருக்கும் நிலையை முதன்முதலில் ஏதோ ஒரு மனிதனிடம் விளக்கியிருக்க வேண்டும்.
மனிதனுக்கு வார்த்தைப் பற்றாக்குறை இருப்பதால் ஞானியின் விளக்கத்தைப் புரிந்துகொள்ளத் தவித்திருப்பான்.
பின் ‘பற்றோடு இருப்பது - நீ’ ‘பற்றற்று இருப்பது - நான்’ என்று விளக்கியிருப்பார்.
அந்த மனிதனால் இரண்டு நிலைகள் இருக்கிறது என்ற வேறுபாடுவரை மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
அதற்குப்பின் வந்தவர்கள் பற்றற்று இருப்பது என்றால், உலக வாழ்க்கைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இங்குதான் குழப்பம் உருவாகிவிட்டது.
பற்றற்று இருப்பது என்ற நிலையில் ஞானம் அடையும்வரை மட்டுமே கற்பனை செய்ய முடியும், புரிந்துகொள்ள முடியாது.
பற்றோடு இருத்தல், பற்றற்று இருத்தல் என்ற இரண்டையும் தாண்டிய ‘இருத்தல்’ என்ற நிலையில்தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
அடுத்த கேள்வி?... ஒருவருமே இல்லையா? இரண்டே இரண்டு பேருக்குத்தான் சந்தேகமே வராதாம். ஒன்று புத்தா. இன்னொன்று புத்து.
புத்தா என்றால் ஞானி; புத்து என்றால் முட்டாள். இதைக் தெரிந்துகொண்டு, நாளை வரும் பொழுதாவது கேள்வியோடு வாருங்கள்... (ஹாலில் சிரிப்பொலி)
4. கேள்வி கேட்பதைக் கீழே போட்டு விட்டு ஞானியின் சொல்படி நடந்து பார்க்க
வேண்டும் என்கிறீர்கள். இப்பொழுது எங்களை கேள்வி கேட்கச் சொல்கிறீர்கள்?
"கேள்வியைக் கேட்கக்கூடாதென்று சொல்லிவிட்டு, எதற்காக நீங்களே எங்களிடம் கேள்வி கேட்கிறீர்கள்?" அருமையான கேள்வி. ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள்.
கேள்வி கேட்டால்தான் புத்தி வரும். கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் புத்து தான் (முட்டாள் தனம்) மிஞ்சும்.
நான் வேண்டாம் என்று சொன்னது - கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது.
கேள்வி கேட்கலாம் - தவறே இல்லை. கேள்வி கேட்காமல் முன்னேறவே முடியாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கலாம். தவறு கிடையாது. ஆனால் அந்த ஏன், என்ற கேள்வியை கேட்பவருக்கு அது நேரடிப் பயனைத் தராது.
உதாரணத்திற்கு... இப்பொழுது இங்கே ஒருவர் எழுந்து, 'ஏன் நீங்கள் டர்பன் கட்டியிருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. அதைப் பற்றி ஒரு கால் மணி நேரம் என்னால் விளக்க முடியும். நான் கால் மணி நேரம் பேசுவதால், கேள்வி கேட்டவர் டர்பன் (தலைப்பாகை) கட்டப் போகிறாரா? இல்லை. அப்படியென்றால் அந்தக் கேள்வி தேவையற்றது.
எதற்காக? என்ற கேள்விகூட மேம்போக்கான கேள்வியே.
உதாரணத்திற்கு... 'எதற்காக இந்தக் காவி உடையை அணிந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டால், இதற்கு ஒரு அரைமணி நேரம் என்னால் பதில் கூற முடியும். நிறங்களில் ஆரம்பித்து நிறப்பிரிகை வரை பேச முடியும். என்ன பிரயோஜனம்? காவி உடுத்தப் போகிறீர்களா நீங்கள்? இல்லையே!
எப்படி? என்ற கேள்வி எப்போதுமே கேட்பவருக்கு நேரடிப் பயனைத் தரக்கூடியது.
எப்படிநீங்கள்இவ்வளவுஆனந்தமாகஇருக்கிறீர்கள்?எப்படிஎல்லாக்கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறுகிறீர்கள்? இப்படி கேள்விகள் கேட்டு, உண்மையிலேயே நீங்கள் ஆனந்த நிலையை அடைய ஆசைப்படுகிறீர்களா? உண்மையிலேயே அப்படி நேர்மையான ஆசையிருந்தால், அவர்கள் எழுந்து கேள்வி கேட்கலாம். இப்பொழுது ஏன், எதற்கு, எப்படி ஆகியவற்றில் ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை ஒதுக்கிவிடலாம். இந்த மூன்றில் உருப்படியான ஒரு கேள்வி எது என்றால், அது 'எப்படி' என்ற கேள்விதான். ஆனால் எப்படி? என்ற கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டாலே, நீங்கள் வம்பில் மாட்டிக்கொள்கிறீர்கள்! காரணம், இந்த கேள்விக்குப் பதில் நேரடியாக உங்களைக் குத்தும்.
ஏன் - என்ற கேள்வியை நீங்கள் சாகிறவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம். Philosophers தத்துவவாதிகள் கடைசிவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அது ஏன்? அது ஏன்? அது ஏன்? என்று கேட்டுக் கொண்டே போகலாம். அதற்கு எல்லையே கிடையாது.
எதற்கு - என்ற கேள்விக்கு வக்கீலாக இருந்தால் போதும்; எதிர் வழக்கை ஜெயிக்க விடாமலே செய்துவிடலாம். (எதனால்? எதற்கு? எதனால்? எதற்கு? -பதில் கூற முடியவே முடியாது.) எதனால்? (அ) எதற்கு? என்ற கேள்விகளை, மிகச் சரியாகக் கேட்கிற திறமை மட்டும் ஒருவரிடம் இருந்தால் அவரை வாய் ஜாலத்தில் யாருமே ஜெயிக்க முடியாது. இருந்தும் இந்த கேள்விகளால் தனி மனித வளர்ச்சி ஒரு துளிகூட நடக்காது.
ஆனால் எப்படி - என்ற கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றால், அடுத்த நிமிடமே பதிலை நீங்கள் நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
எப்படி? - என்ற கேள்வியின் வலிமை இப்பொழுது புரிகிறதா? எப்படி - என்ற கேள்வியை அகங்காரத்தால் கேட்கவே முடியாது. அப்படி ஒருவேளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்களிடம் விழிப்புணர்வு இல்லாமல்தான், என்ன கேட்கிறோம் என்பதே தெரியாமல்தான் அந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியும்.
இந்த மூன்று கேள்விகளில் எப்படி என்ற கேள்விக்கு மட்டுமே கொஞ்சம் மரியாதை உண்டு. இந்தக் கேள்வியால் கிடைக்கிற பதிலைப் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் தந்திர மனது இது போன்ற கேள்விகளை சந்தேகமாகக்கூட எழுப்பாது.
ஆனால் வாழ்க்கை முழுவதும் என்ன நடக்கிறது? கேள்வி கேட்பதை மாத்திரம்தான் செய்கிறோம். செயலாக்கம் செய்து பார்ப்பதே கிடையாது. இது தொடரக்கூடாது. குறைந்தபட்சம் இந்த ஒரு நாளாவது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாங்கள் உறுதியாகச் சொல்வதை ஒருமுறை பரிசோதித்தாவது பாருங்கள் என்கிறோம். நான் ஒன்றும், கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தவில்லையே. ஒரு சிறிய சோதனை, ஒரு சிறு முயற்சி ஏன் செய்து பார்க்கக்கூடாது?
பயனில்லாத கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
உங்களுக்கு நேரடியாக பயன்படும் கேள்விகளை மட்டும் கேளுங்கள்; அப்போதுதான் வளர முடியும்.
5. ஆனந்தமயக் கோஷத்திற்குப் போய்விட்டு, அன்னமயக் கோஷத்தை அனுபவிக்க முடியுமா? - இது ஒரு பெரியவாரின் கேள்வி.
அன்னமயக் கோஷத்தை அப்பொழுதுதான் அனுபவிக்கவே முடியும். அனுபவித்தல் என்ற நிகழ்ச்சியே அப்பொழுதுதான் முழுமையாக நடைபெறும்.
இப்பொழுது, நீங்கள் இந்த பொருளைத் தொடும்பொழுது, நீங்கள் தனி, இந்தப் பொருள் தனி என்ற ஒரு உணர்வு இருக்கும். இதற்கொரு மென்மை இருக்கும்; இதைப் பற்றிய கருத்து, அதைப் பற்றிய கருத்து-இவையே மனோமயக் கோஷத்தில் ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனந்தமயக் கோஷத்துக்குப் போய்விட்டால், இந்தக் கை எங்கே முடிகிறதென்பது உங்களுக்குத் தெரியாது. இது எங்கே ஆரம்பிக்கிறது என்பதும் தெரியாது. இது முழுக்கவே நீங்களாக உணர்வீர்கள்! இப்பொழுது இந்த 'மைக்' கைத் தொட்டவுடன், நான் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் நான் இதைத் தொடும்பொழுது, 'நான் இதைத் தொடுகிறேன்' என்ற உணர்வு எனக்கு இருக்கும்.
இத்தகைய ஒரு சிறு உணர்வு வரும்பொழுது, அந்தப் பிரம்மாண்ட உணர்வுக்குள் போக முடியாமல், ஒரு சிறிய வட்டத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோம்.
சிறிய வட்டத்தில் மாட்டிக்கொள்ளும்பொழுது பிரம்மாண்டம் என்ற ஆனந்தத்தை முழுதாக அனுபவிக்க முடியாது. ஆனந்தம் என்பதை நாம் கற்பனைதான் செய்ய முடியும். உண்மையான ஆனந்தத்தை நாம் மனதால் புரிந்துகொள்ள முடியாது.
இது கை, இது முன்னாடி இருக்கிற பெஞ்ச், இது அறை என்றெண்ணி நாம் சிறிய, சிறிய வட்டத்துக்கு உள்ளே இருக்கும்பொழுது, இந்த உடலையும் சிறு, சிறு பகுதியாகத்தான் நீங்கள் அனுபவிக்க முடியாது.
அந்தப் புலன்கள் வாசலில் நின்று தட்டிக்கொண்டுதான் இருக்க முடியுமே தவிர, உள்ளுக்குள் ஊடுருவிப் போக முடியாது. உள்ளுக்குள் ஊடுருவிப் போனால் மாத்திரமே ஆனந்தமயக் கோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
நாம் எல்லோரும் புரிந்துகொள்ள முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற காம சாஸ்திரத்தை வாத்ஸயாயனர் என்ற ஒரு சன்யாசி எழுதினார். அதை ஒரு சம்சாரி எழுதவில்லை. எப்படி ஒரு சன்யாசியால் அது முடிந்தது?
சம்சாரியாகிய நமக்குத் தெரிந்தது, சாதாரண வழி. புலன்களின் வழி. உலக மக்கள் எல்லோருக்கும் தெரிந்த வழி.
அந்த வழியில் செல்லாமல் இன்னொரு வழியில் செல்வது. அந்த வழி ஞான இந்திரிய வழி. பஞ்ச இந்திரியம் (புலன்கள்) பற்றி சம்சாரிக்குத் தெரியும். ஞான இந்திரியம் சம்சாரிக்குத் தெரியுமா?
ஞான இந்திரியம் பற்றி தெரிந்தால் மாத்திரமே உடலை முழுக்க முழுக்க அனுபவிக்க முடியும். அந்த ஞான இந்திரியம் வழியாக ஆனந்தமயக் கோஷத்துக்குள் சென்றால் மாத்திரமே அன்ன மயக் கோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
6. இப்ப நல்லாயிருக்கேன். ஆனா ஏதாவது கஷ்டம் வந்தா மனசொடிஞ்சு போய்விடுகிறேன். காரணம் என்ன? இதிலிருந்துநான் விடுபட என்ன செய்யவேண்டும்?
வலி, வேதனை என்ற இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தையை அடிக்கிறீர்கள்; அதற்கு வலிக்கும். அந்தக் குழந்தை கத்தும். அதே குழந்தை தனியாக கீழே தடுக்கி விழுந்துவிட்டால் - கத்தாது. இப்படி அப்படித் திரும்பிப் பார்க்கும். பார்த்துவிட்டு அமைதியாக எழுந்து போய்விடும்.
இரண்டு விஷயங்களையும் எடுத்துக் கொண்டால், முதலில் வலியுடன், வேதனையும் இருக்கும் இரண்டாவதில் வலி மாத்திரம் இருக்கும். வேதனை இருக்காது.
வேதனை என்பது சூட்சம சரீரம் சம்பந்தப்பட்டது. சூட்சம சரீரம் என்பது மனோமயக் கோஷம். இந்த மனோமயக் கோஷத்தில் இருக்கிற வேதனைதான் நம் எல்லோரையும் பாடாய்ப்படுத்துகிறது.
குழந்தை அடி வாங்கும்போது வெறும் உடலில் மாத்திரம் அடி வாங்கவில்லை. உள்ளுக்குள் எங்கோ ஆழமாக அந்த அடி விழுகிறது.
மனவலிதான் வேதனை.
‘ஐயோ! இப்படி நடந்துடுச்சே!’ என்று பதரும் பதற்றம்தான் மனவேதனை.
மனிதகுலம் நோயால், வலியால், கஷ்டப்படுவதை விட ‘எனக்கு இப்படி நேர்ந்து விட்டதே’ என்ற மனதளவில் கஷ்டப்படுவதுதான் அதிகம்.
வலி சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும்.
வேதனை கண்டுபிடிக்கப்பட்டுக்க் களையப்படாவிட்டால் வாழ்வின் கடைசிவரை மனிதனை வாட்டி எடுக்கும்.
நீங்கள் மனோமயக் கோஷத்தை விட்டுத் தாண்டி ஆனந்தமயக் கோஷத்துக்குப் போக வேண்டும். ஆனந்தமயக் கோஷத்துக்குப் போன பின்னால், இந்த மனம் தனியாகப் பிரிந்துவிடும். அந்த மனதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. அப்போது அதிகபட்சமாக வலி மாத்திரம் இருக்கும்; வேதனை இருக்காது. காரணம் இந்த உடலும், மனமும் நீங்கள் அல்ல. இவை தாண்டிய ஒன்றே ‘நீங்கள்’ என்ற அனுபவம் கிடைத்துவிடும்.
அந்த ஆனந்தமயக் கோஷத்திலேயே எப்போழுதும் ரமணமகரிஷி இருந்ததனால்தான், ‘எனது உடலுக்கு கேன்சர் இருக்கிறது’ என்றார். அவருக்குக் கேன்சர் இல்லை. நான்காவது முறையாக அவரது உடலில் கேன்சருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது மகரிஷி, ‘அப்பா, போதும்டா! நீங்கள் வற்புறுத்திச் சொன்னதால்தான் மூன்றுமுறை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டேன். இந்த நான்காவது அறுவை சிகிச்சைக்கு நான் தயாராக இல்லை. நீங்கள் அறுவைச் சிகிச்சை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, நான் உள்ளுக்குள் இருக்கிற படிதான் எப்போழுதும் இருக்கப்போகிறேன். இந்த உடலைப் பாதுகாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்; அது போகிற நேரத்தில் போகத்தான் போகிறது. உடலுக்கு வலி இருக்கிறது - அது உண்மை. ஆனால் எனக்கு வேதனை கிடையாது’ என்றார்.
இத்தகைய நிலையை நீங்களும் அடையலாம். அப்பொழுது, உடம்பில் நோய் இருந்தாலும், இல்லையென்றாலும் கவலையில்லை. இத்தகைய நிலையில் மனதில் கஷ்டம் இருக்கவே வாய்ப்பில்லை. உள்ளுக்குள் சுதந்திரமாக இருப்பீர்கள்.
கடைசியாக சில வார்த்தைகள்...
எல்லா நோய்களையும் எல்லோராலும் குணப்படுத்தி விட முடியாது.
அந்தந்த கோஷங்களுக்கு அதனதன் சிறப்புத் துறைகளால் மட்டுமே சிறந்த தீர்வளிக்க முடியும்.
அன்னமயக் கோஷம்- அலோபதி(ஆங்கில மருத்துவம்)
பிராணமயக் கோஷம்- பிராணாயமம், யோகாசனம், அக்குபஞ்சர்
மனோமயக் கோஷம்- ஹோமியோபதி, ஹிப்னாடிஸம்.
விஞ்ஞானமயக் கோஷம்- ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம்.
ஆனந்தமயக்கோஷம்- தியானம், ஆனந்தா ஹீலிங்.
நோயின் மூலவேர் கண்டுபிடிக்கபடாமல் நோயை குணப்படுத்த முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியையே தழுவச் செய்யும்.
பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் இன்று மருத்துவம் தடுமாறுகிறது. காரணம்? நோயின் காரணி ஆழமான உடல் அடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதுதான். பல நோய்களின் மூலவேர், விஞ்ஞானமயக் கோஷத்திலும், ஆனந்தமயக் கோஷத்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறது.
எல்லா நாள்பட்ட நோய்களின் மூலவேர்களும் உள் அடுக்குகளில் ஒளிந்துகொண்டு இருப்பதால், ஆனந்தமயக் கோஷத்தின் மருத்துவ முறையான தியானமும், ஆனந்தா ஹீலிங்கும் நாள்பட்ட நோய்களிருந்து விடுபட பெரிதும் உதவும்.
எல்லா கோஷங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தியான சக்தி குணமாகும் வேகத்தை அதிகப்படுத்தும்.