KAILASA Library/ஜீவன் முக்தி/இறைவனை அடைய உதவும் தடயங்கள்Sign in
ஜீவன் முக்தி

இறைவனை அடைய உதவும் தடயங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆன்மீக அனுபவம்

Spiritual experiences -The toolsThat help us to attain God

எந்த வழியாக அவள் தூக்கிச் செல்லப்பட்டாள் என்று, ஜீவாத்மாவுக்கு, ராமனுக்குத் தெரிவதற்காக, சீதை சில ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுவிட்டுப் போகிறாள். அதுதான் நம்முடைய ஆன்மீக அனுபவங்கள்.

எந்த வழியாக வந்தால் என்னைப் பற்றிக் கொள்ளலாம், என்னைக் கண்டு கொள்ளலாம் என்று, ராமனுக்கு வழி சொல்வதற்காக, சீதை கழற்றிப் போட்டு விட்டுப் போகிற ஆபரணங்கள் போன்று, ஜீவான்மாவிற்கு வழி சொல்வதற்காக, பரமாத்மா கழற்றிப் போட்டுவிட்டுப் போகிற ஆபரணங்கள்தான் ஆன்மீக அனுபவங்கள்.

அதைக் கண்டெடுத்து, இது சீதையினுடையதுதானா என்ற தெளிவைக் கொடுக்கிற வேலை சத்குரு நாதனுடையது.

அதற்காகத்தான், சீதை கழற்றிப் போட்டு விட்டுப்போன, அந்த ஆபரணங்களை எல்லாம், அனுமான்தான் சேகரித்து வைத்திருக்கிறார்.

ராமனுக்குக் காட்டி, "பாரப்பா, பரமாத்மா இதன் வழியாகத்தான் உன்னை வரச் சொல்லுகிறது. தெரிந்து கொள்," என்று அந்த நகைகளை ராமனுக்குக் காட்டி விளக்குகிறார்.

சத்குருநாதன்தான், "இது சரியான ஆன்ம அனுபவம். பரமாத்மாவை, சீதையை அடைவதற்கு இதன் வழியாகத்தான் நீ போயாக வேண்டும்," என்று விளக்குகிறார்.

அதைக் கேட்டுவிட்டு ராமன், அதேவழியில் தொடருகிறான். மெதுவாக, மெது மெதுவாக, பரமாத்மாவை நோக்கி அந்தப் பயணம் நடக்கிறது. இறுதியாக, ராமேஸ்வரம் கரைக்கு வந்ததும் அந்தப் பயணம் நின்றுவிடுகிறது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? இந்த உடல் என்ற எல்லைக்கு வந்து நின்று விடுகிறார்கள். அதற்குமேல் கண்ணுக் கெட்டிய தூரம்வரை கடல்தான். அப்படி என்றால் என்ன அர்த்தம்?

அதற்குமேல் மனம்தான். உடலால் செய்து முடிக்கக் கூடிய, சாதனைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

அதனால்தான் ராமேஸ்வரத்தில் விக்கிரக பூஜை செய்கிறார்.

ராமன், ஈஸ்வரனுக்குப் பூஜை செய்கிறார்.

பூஜை என்பது என்ன?

உடலால் செய்யக்கூடிய வழிபாடு.

உடலால் செய்யக்கூடிய சாதனைகள் முடிந்துவிட்டது. இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது. அத்தனைப்பேரும் அந்த இடத்திற்குமேல் போக முடியாமல் நின்றுபோய் விடுகிறார்கள்.

ராமர், ராமருடைய சேனை, ஜீவாத்மா, ஜீவாத்மாவினுடைய மனம், புத்தி, சித்தம், எண்ணங்கள், உடல் வலிமை, மன வலிமை எல்லாம் ஒரு சேனையாக சேர்ந்து ஒரு அளவுக்குத்தான் போக முடியும்.

அதற்குமேல் போக முடியாது.

எல்லாப் படைகளும் சேர்ந்தாலும்கூட ஒரு அளவுக்குத்தான் போக முடியும். ராமேஸ்வரத்தில் போய் முட்டி மோதி நின்று விடுகிறார்கள். இதற்குமேல் ஒன்றும் போக முடியாது. ஒன்றுமே நம்மால் செய்ய முடியாது என்று தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் தேவை குரு கிருபை.

குருவின் கிருபை, அவர்களுக்குக் கிடைக்கிறது.

அனுமன் பறந்து, அந்தப்பக்கமாகச் சென்று, பரமாத்மா இருப்பதை உறுதிப் படுத்திவிட்டு, பார்த்ததற்கு அடையாளமாய் மீண்டும் கொண்டு வந்து ராமனிடம் கொடுக்கும் கணையாழிதான் முதல் ஆன்மீக அனுபவம். (First Spiritual Experience). சத்தோரி என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

தேடுதல் ஆழமாக, ஆழமாக உங்களின் பரமாத்மாவை நீங்கள் அடைய முடியும் என்பதை உங்களுக்கு ஊர்ஜிதப் படுத்தும் முதல் ஆன்மீக அனுபவம் சத்குருவின் கிருபையால் கிடைக்கும். அது கிடைத்த பின்புதான் பரமாத்மாவை அடைந்து விட முடியும் என்ற அளவு கடந்த உற்சாகம் பொங்க முடியும்.

“பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார். அவரை அடைவது சாத்தியம்தான். இதை அடைவதற்கான வழியைப் பார்த்துக் கொள் அப்பா,” என்கிற உற்சாகத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுக்கிறார், சத்குரு.

எந்தக் கரையையும் உத்வேகத்தோடு, தாண்டிச் செல்லும் சக்தி வாய்ந்தவர், இந்தக் கும்பலில் சத்குரு மட்டும்தான்.

சத்குருவால் மட்டும்தான் இரண்டு கரையையும் தாவ முடியும். பரமாத்மா இருக்கும் இடத்திற்கே செல்ல முடியும்.

பரமாத்மாவை யார் வைத்திருக்கிறார்?

மாயை. ராவணன்தான், அந்த மாயை.

மாயை தன்னுடைய கோட்டைக்குள்ளே பரமாத்மாவை வைத்திருக்கிறது.

மாயை, தன்னுடைய கோட்டைக்குள்ளே மறைத்து வைத்திருக்கிற பரமாத்மாவைச் சத்குருவைத் தவிர, வேறு யாராலும் தாண்டிச் சென்று பார்க்க முடியாது.

"அந்தப் பரமாத்மாவை நான் கண்டு விட்டேன். உன்னாலும் காண இயலும். காண்பது சத்தியம். காணும் வழிமுறை உண்டு," என்று மீண்டும் வந்து ராமருக்குச் சொல்கிற செய்திதான். ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்படுகிற உற்சாகம்.

ஏனென்றால், கடல்வரை வந்த பிறகு,ராமருடைய மொத்த சேனைக்கும் நம்பிக்கை போய்விட்டது. அதாவது ஜீவாத்மா, ஜீவாத்மாவின் உடல் -மனம்-புத்தி-இந்திரியங்கள் எல்லாவற்றுக்குமே நம்பிக்கை போய் விடுகிறது.

சத்குருவின் உதவியைத் தொடர்ந்து பெறாத ஆன்மீக சாதகர்களுக்கு நிகழும் மனச்சோர்வு இதுதான். ஆழ்ந்த குருபக்தி கொண்ட ஆன்மீக சாதகங்களுக்கு இந்தப் பிரச்சினை வரவே வராது.

"இதற்கு மேல் என்னடா செய்வது? நம்மால் என்ன செய்ய முடியும்?" (பரமாத்மாவை அடைவதற்கு இனி சாத்தியம் இல்லையா) என்று சோர்ந்து, நொந்து, சாய்ந்து விடுகிறார்கள்.

அப்போது சத்குருநாதன் சொல்கிறார், "கவலைப்படாமல் இருங்கள்," என்று நம்பிக்கையூட்டுகிறார். இப்படித் தானாய் குரு வந்து உதவுவதைத்தான் குருபார்வை, குரு கருணை என்கிறோம்.

இப்படி நம்பிக்கையூட்டி, குருவே அக்கரைக்குத் தாண்டிச் சென்று நமக்காக சத்தியத்தின் சாட்சியை, இக்கரைக்குக் கொண்டுவருவதுதான், முதல் ஆன்மீக அனுபவம்.

அந்த நேரத்தில் சத்குருவால் மட்டும்தான் மனத்தை உடைத்துவிட முடியும்.

அந்த முதல் ஆன்மீக அனுபவம்தான், மொத்தக் கூட்டத்திற்கும் அளவில்லாத உற்சாகத்தைக்கொண்டு வந்தது.

ஜீவான்மாவிற்கும், ஜீவான்மாவு டைய மனம், புத்தி, சேனை அனைத்திற்கும் மிகப்பெரிய உற்சாகம் வந்தது.

மாளாத உற்சாகம். இப்போது அந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் உற்சாகம் வந்துவிட்டது.

இப்படி உற்சாகப்படுத்தப்பட வேண்டிய தொய்வடைந்த சேனைகளாகப் பல ஆன்மீக சாதகர்கள் வாழ்வின் பல பகுதிகளில் தொய்வடைந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தியாக வேண்டும்.