KAILASA Library/ஜீவன் முக்தி/உன்னத ஆன்மாக்கள்Sign in
ஜீவன் முக்தி

உன்னத ஆன்மாக்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Higher Souls

9. ஆனந்த சமாஜம் என்றால் புரிகிறது. அதென்ன ஆனந்த சமாஜத்தினர்? (Ananda Samajiate)

  • மாதவ், திருவாரூர்

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஆனந்தத்தையும், தியானத்தையும் எடுத்துச் சென்று சேர்ப்பது என்பது என் தனி முயற்சியால் மட்டுமே முடிந்துவிடக் கூடிய காரியமல்ல. அதே சேவையை செய்ய பலர் தங்களின் வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

இந்தச்சேவையை நேரடியாக, உலகுக்குத்தருகின்ற மக்கள் ஒன்றாய் வாழுமிடத்தைத்தான் ‘ஆனந்த சமாஜம்’ என்கிறோம்.

ஆனந்தசமாஜத்தில் வாழும் வாய்ப்பைப் பெறாதவர்கள், அவரவர் வாழுமிடத்திலிருந்தே இவ்வளவு பெரிய தர்ம சேவையில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் பாக்கியசாலிகளைத்தான் ஆனந்த சமாஜத்தினர் (Ananda Samajiate) என்கிறோம்.

நேரடியாக மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கான இந்தச்சேவைக்கு, உணர்ச்சிப்பூர்வமான பொறுப்பெடுத்து ஒரு மாதத்தில் தன்னுடைய மூன்று நாள் வருமானத்தை, மக்களுக்காக இயங்கும் இந்தச் சேவைக்கு அளித்து, குறைந்தது ஒரு மாதத்திற்கு, ஒரே ஒரு நாளாவது தங்களுடைய நேரத்தை அர்ப்பணித்து வாழ்பவர்கள்தான் ஆனந்த சமாஜத்தினர்.

முதல்வகையினர் சேவையை அனுபவிப்பதோடு நின்றுவிடுபவர்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்வதோடு, நன்றிக் கடனாய் ஆனந்த சேவையாய், தாங்கள் பெற்றதை உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பெற, நான் உதவ வேண்டும் என்று சொல்பவர்கள்.

இந்தச் சேவை, இந்தத் தியானம், இந்தப் புத்தகம் என்னிடம் வந்து சேர்வதற்கு எத்தனைபேர் தங்களின் நேரத்தையும், இரத்தத்தையும், வியர்வையையும் உழைப்பாக்கியிருப்பார்கள்?

யாரோ ஒரு சிலர் தங்களின் வாழ்வையும், குணத்தையும், பணத்தையும் தியாகம் செய்ததினால்தான் பல்லாயிரம் மக்களின் வாழ்வு பூத்திருக்கிறது என்னும் உண்மையை உணர்ந்த உன்னத ஆன்மாக்கள்.

இந்தப் புனித சேவையை அனுபவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்கான பொறுப்பையும் எடுக்கும் உயர்ந்த உணர்வுடைய ஆன்மாக்கள்தான், ஆனந்த சமாஜத்தினர்.

கூட்டுத் தியானத்திற்கு அவ்வளவு சக்தியா?

So much power for mass meditation...?

10. ஒருமுறை சேலத்திலும், ஒருமுறை கோயம்புத்தூரிலும் உங்களின் இலவச தியான சத்சங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். எல்லோருக்கும் நீங்கள் கற்றுத் தரும் 'நித்ய தியானத்தை' நான் தினமும் வீட்டில் செய்து வருகிறேன். சக்தியோட்டத்தை நன்றாக உணர்கிறேன். வீட்டில் செய்யும் போது எனக்குள் நிகழும் ஆனந்த உணர்வை விட, சத்சங்கங்களில் செய்யும் தியானத்தில் அதிக ஆனந்த உணர்வு ஏற்படுகிறது. இது ஏன்? எதனால் இப்படி அதிகரிக்கிறது? -கோபி, நாய்ச்சல்

காரணம், கூட்டுத்தியானத்தின் மகிமை!

பத்துப்பேர் சேர்ந்து பத்து பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய் சேரும். அந்த நூறு ரூபாயை அதே பத்து பேர் சமமாகப் பிரித்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் வெறும் பத்து பத்து ரூபாய் மாத்திரமே கிடைக்கும். ஆனால் பத்து, பத்து வோல்டேஜ் மின்சாரத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்து, பத்துப்பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்தப் பேட்டரியைத் தொட்டால் என்ன நிகழும்! பத்துப் பேருமே நூறு வோல்டேஜ் மின்சார அதிர்வைப் பெறுவார்கள். கொடுத்தது பத்து வோல்டேஜ் மின்சாரம், ஆனால், பெற்ற அதிர்வு நூறு வோல்டேஜ் மின்சாரம்.

இதேதான் கூட்டுத் தியானத்தின் போது நிகழ்கிறது.

திரு. கோபி,. பல நூறு மக்கள் ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது, அவ்வளவு பேரின் தியான சக்தியும், ஒரே அறையில் குவிகிறது. மொத்தத் தியான சக்திக் களத்தையும், நீங்கள் ஒரு சேர உணர்வால்தான், "அதிகமாக ஆனந்த உணர்வைப் பெறுகிறேன்," என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

இப்படி எல்லோரும் தியான சக்தியை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முடிந்த அளவு ASP தியான முகாம் நடைபெற்ற எல்லா ஊர்களிலும் தியானபீடத்தின் கிளைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அங்கே எல்லோருக்கும் இலவசமாகத் தியானம் கற்றுத்தரப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் கூட்டுத் தியானத்தின் மூலமாக, பொது மக்களுக்குத் தியானம் கற்றுத்தரப்படுகிறது.

தினம் காலை, மாலை 6.30 முதல் 7.00 மணி அளவில் நித்ய தியானம் கூட்டுத் தியானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டுத்தியானத்தின் மகிமையை, உங்கள் ஊரில் இருக்கும் தியானபீடக் கிளையில் சென்று, நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்.

இன்னொரு குருவை ஏற்பது தவறா?

Is it wrong to accept another Guru?

11. நம்ம வாழ்க்கையில் ஒரு குருவைச் சந்தித்து விட்டோம் என்றால், அவரை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா?

  • ரமேஷ், கோவில்பட்டி

சத்தியத்தையே வேறு யாராவது ஒருவர் வேறு ஏதாவது ஒரு முறையிலே காட்டுவாரானால், காட்ட இயலும் என்று தெரிந்தால், அவரை முழுமையாகக் கடைபிடிப்பதற்கு நம் தர்மத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் அழகாக விவேகானந்தர் சொல்வார், "freedom is the first condition for any growth" சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் அடித்தளம்.

மேலை நாடுகளில் சமூக சுதந்திரம் உண்டு, அவர்கள் எங்கே வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும், எதை வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

வீடு, கார், வீட்டுக்காரர் மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருக்கலாம். சமூக ரீதியாக சுதந்திரத்தில் வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆன்மீக சுதந்திரம் இல்லை.

வாயில் ஊட்டிவிடுவது (spoon feeding) என்று சொல்வார்களே, அதுபோல்தான், அவர்களுக்கு ஆன்மீகம் என்பது. ஒரு குறிப்பிட்ட வகுக்கப்பட்ட கொள்கைகள், சட்ட திட்டங்கள் மட்டும் இருக்கும். அவ்வளவுதான்.

நமக்குப் பெரிய சமூக சுதந்திரம் இல்லை.

ஆனால், மிகப்பெரிய ஆன்மீக சுதந்திரம் இருந்திருக்கிறது. அதனால்தான், அந்தத் துறையில் நாம் அந்த அளவிற்கு ஆழமாக மூழ்கி முத்தெடுத்திருக்கிறோம்.

அவர்களுடைய நாட்டிலே காரை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டுக்காரரை மாற்றிக்கொள்வதற்குச் சுதந்திரம் இருக்கிறது.

நம் நாட்டில் நாம் செல்லுகின்ற சத்தியத்தை நோக்கிய பாதையை மாற்றிக் கொள்வதற்கு, குருவை மாற்றிக்கொள்வதற்கு, கடவுளை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது.

ஏனென்றால், ஒன்றைத்தாண்டி ஒன்றில் நாம் போய்கொண்டே இருப்போம் என்கின்ற ஆழத்தை நம் முன்னோர்கள் உணர்ந்ததினால், அந்தச் சுதந்திரத்திலே எந்த விதத்திலும் குறுக்கீடும், தலையீடும் வராமலே பார்த்துக் கொண்டார்கள்.

இராமகிருஷ்ணர் மாதிரி ஒரு குருபக்தி உடைய ஆழ்ந்த சரணாகதி உடைய மனிதரைப் பார்க்க முடியாது. அவர் எந்த குருவிடமும் செல்வதற்குத் தயங்கவே இல்லை.

'யோக'த்தை ஒருவரிடம் கற்றார்.

அதற்கு அடுத்த நிலையான 'தந்திர'த்தை அளிப்பதற்கு, இன்னொரு பைரவி வந்தபொழுது, தயங்காமல் அவரிடம் சென்று கற்றார்.

அதற்கடுத்து, 'வேதாந்த'த்தின் உச்ச ஞானத்தை அடைவதற்கு தோத்தாபுரி என்கின்ற ஞானி வந்தபோது, தயங்காமல் பைரவி பிராமணி என்கின்ற 'தாந்த்ரீக குரு' தடுத்தபொழுதும், தயங்காமல் அவ்வளவையும் உதறிவிட்டு தோத்தாபுரியிடமும் சென்று, ஞானத்தை உள்வாங்கினார். அதுதான் அந்த சத்தியத்தின் சக்தி...

தேடுதலை விடாமல் இருக்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நம்முடைய ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்

தேடுதல் உடைய ஒருவர் அடுத்த நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் இன்னொரு குருவிடம் செல்வதற்குத் தயங்க வேண்டியதில்லை.

பல நேரங்களில் உங்களுடைய குருவின் சக்தியும், ஆசீர்வாதமுமே அடுத்த பரிமாணத்தை மலர்த்த உதவும் மற்றொரு குருவிடம் அழைத்துச் செல்லும். நிம்மதியாக உங்களின் பயணத்தைத் தொடருங்கள்.