KAILASA Library/உன் மனதே சமுதாயம்/மனதை கடந்துவிடலாம்Sign in
உன் மனதே சமுதாயம்

மனதை கடந்துவிடலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அழகான ஒரு ஜென் ஞானியின் கதை.

ஒரு காட்டிலே ஜென் ஞானி ஒருவர் வசித்து வந்தார். அவரிடத்தில் ஒரு இளைஞன் ஒரு நாள் இரவு நேரத்தில் சென்றான். அந்த இளைஞன், "அய்யா! இந்தக் காட்டை நான் கடந்து செல்ல வேண்டும். தயவு செய்து இந்தக் காட்டைக் கடக்கும் வரை ஒளி கிடைக்க உதவி செய்யுங்கள்"

"நீங்கள் தான் ஒளியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் என்னால் காட்டைக் கடக்க முடியும்" என்றான். மனிதர்கள் ஒரு மகானைப் பார்த்துவிட்டால் அவரிடம் ஏதாவது அமானுஷியமாக கேட்பார்கள்.

இவர்களுக்கு அமானுஷியமான செயல்கள் செய்வதற்காகத்தான் அவர்கள் ஞானம் அடைந்தது போல்...கேட்டது மட்டுமல்லாமல் சிலபேர் கட்டாயப்படுத்துவார்கள்.

என்னிடம் கூட, “சாமி! உங்களை நம்பி வந்துவிட்டேன், நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்” என்பார்கள். என்னவோ அவர் என்னை நம்புவதால் அவர் பெரிதாக எனக்குச் சேவை செய்வதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எப்பவும் சொல்வதுண்டு,.. “யாருப்பா என்னை நம்பிச் சொல்லச் சொன்னது.” நம்பினால் அந்த நம்பிக்கை உங்களுக்கு உதவி செய்யலாம். என்னை நம்புவதனால் எனக்கு ஒன்றும் நீங்கள் செய்வதில்லை.

கோயிலுக்குச் சென்று அதைத்தான் செய்கிறோம். “கடவுளே உன்னை நம்ப வந்துவிட்டேன்” என்று முறையிடுகின்றோம். என்னவோ நாம் நம்புவதால் கடவுளுக்கு நாம் பெரிதாக உயர்வு ஏற்படுத்திவிட்டதுபோலவும், நாம் அவரை நம்புவதால் நாம் ஏதோ கடவுளுக்கு நன்மை செய்வது போலவும்.

தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் அவரை நம்புவதால் நீங்கள் உயர்கிறீர்களே தவிர கடவுள் உயர்வது இல்லை.

நம்முடைய நம்பிக்கை எல்லாமே போலித்தனமானது. தேர்வில் வெற்றி பெற்றால் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது. இல்லையென்றால் பிள்ளையாரையே உடைப்பது. நம்முடைய நம்பிக்கை எல்லாம் மடத்தனமானது, முழுமையானது இல்லை. காரியவாதம் என்று சொல்வதுண்டு.

நம் நம்பிக்கை எல்லாம் நாம் சொல்கிற வேலையையெல்லாம் செய்கிறவரைக்கும் அவர் கடவுள். நாம் சொல்கிற வேலையில் ஏதாவது ஒன்றைச் செய்யாமல் விட்டுவிட்டார் என்றால் அவருடைய பதவியை உடனே இறக்கிவிடுவோம்.

நாம் சொல்கிற நம்முடைய வீட்டுபாடத்தையெல்லாம் அவர் செய்துகொண்டு இருந்தால் அவர் ‘கடவுள்’ என்ற பதவியில் வைத்திருப்போம். அப்படி இல்லையென்றால் கடவுள் பதவியில் இருந்து உடனே நீக்கிவிடுவோம்.

நமது மனம் முழுமையாக ஆழ்ந்து, சிந்தித்து இயங்குவதில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மனம் ‘நமக்கென்ன, நமக்கென்ன நமக்கென்ன’ என்று தான் பார்க்குமே தவிர, நிஜமான சூழ்நிலையை தெரிந்துகொள்ளாது.

நிஜமான சூழ்நிலை என்னவென்று ஆராய்ச்சி செய்யாது. நிஜமான சூழ்நிலை என்னவென்று புரிந்துக் கொள்ளாது. சமுதாயத்திலிருந்து அளவுக்கு மீறி வாங்கிக் கொண்ட பயங்களால் நாம் நம்முடைய வாழ்க்கையை எளிமையாக நடத்துவதற்குத் தயாராக இல்லை. அளவுக்கு மீறி நாம் சேர்த்து வைத்திருக்கும் அச்சங்களால்,எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கும் முன் அளவுக்கு மீறிய பயங்களை நாம் ஏற்படுத்தி வைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்.

அந்த ஞானியிடம் சென்ற மனிதன், "சாமி! நீங்கள் தான் வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். காட்டைக் கடப்பதற்கு வழிக்காட்டுங்கள்" என்றான்.

அந்த ஞானி சொன்னார், "கவலைப்படாதே" என்று கூறி ஒரு (லாந்தர்) விளக்கை ஏற்றி, இதை எடுத்துக் கொண்டு போ..... நீ காட்டைக் கடந்துவிடலாம்" என்றார். ஆனால் அந்த மனிதனுக்கு நம்பிக்கை வரவில்லை.

"என்ன சாமி சொல்கிறீர்கள்! காடோ பத்து மைல் தூரம். இந்த லாந்தர் விளக்கோ பத்தடி தூரம் தான் வெளிச்சம் தரும். நான் எப்படி இந்த லாந்தர் விளக்கை வைத்துக் கொண்டு, பத்து மைல் தூரமுள்ள காட்டைக் கடந்து செல்வது?" என்று கேட்டான். அவன் காட்டின் தூரத்தை கணக்குப் போட்டான்..லாந்தர் விளக்கு ஒளியின் தூரத்தைக் கணக்குப் போட்டான்.

தர்க்க ரீதியாக இது ஒரு சரியான கேள்விதான்! அவனது அறியாமையைப் புரிந்துகொண்ட ஞானி, "இது ஒரு மந்திர விளக்கு, கையில் எடுத்துக் கொண்டு செல், 10 மைலுக்குமே வெளிச்சம் கொடுக்கும்" என்று கூறினார்.

"இதைப் பிடித்துக்கொண்டு நடந்துசெல். பத்தடி கடப்பாய். 10 அடி நடந்தவுடனே இன்னும் 10 அடி தூரத்திற்கு வெளிச்சம் கொடுக்கும். அதை வைத்து 10 அடி நட. இன்னொரு 10 அடிக்கு வெளிச்சம் தரும், அப்படியே தொடர்ந்து நடந்தால் மொத்த 10 மைல் தூரமுள்ள காட்டையும் கடந்து விடலாம்" என்றார் அந்த ஞானி.

அதன்படியே அவன் காட்டைக் கடந்து முடித்தான். அதே மாதிரிதான் நம்முடைய வாழ்க்கையும்! இன்றைக்கு உள்ள பிரச்சினையை சந்திக்கக் கூடிய ஞானம் இருந்தால் நாளைக்கு வரக்கூடிய பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய ஞானம் உங்களுக்கு இருக்கும். இன்றைக்கு வந்த பிரச்சினையை எதிர்கொண்ட நீங்கள், நாளைய பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? நிச்சயமாக முடியும்.

10 அடி தூரம் நடக்க முடிந்த அவனுக்கு எப்படி அந்த லாந்தர் விளக்கு 10 மைல் தூரத்திற்கும் வெளிச்சம் தந்ததோ, அதுபோல, இன்றைய நாளை நடத்தினீர்களானால், இப்போது இருக்கும் சக்தியை வைத்து இன்றைய வேலையை முடித்துவிட்டால் நாளைய பிரச்சினைகளுக்கு இதே சக்தி தீர்வு தரும்.

அப்படியில்லாமல், அந்த லாந்தர் விளக்கு வைத்திருந்தவர், “இந்த லாந்தர் விளக்கு பத்தடி தூரம்தான் வெளிச்சம் தரும்... நான் கடக்க வேண்டிய தூரமோ 10 மைல்...நான் எப்படிக் கடப்பேன்?” என்று சொல்லிக் கொண்டு அங்கேயே இருந்தால், எப்படிக் காட்டைக் கடந்திருக்க முடியும்? முடியாது.

அதே போல் நாமும், நம்முடைய முழு வாழ்க்கையையும், வாழ்க்கையின் மொத்த முழுபிரச்சினைகளையும் நம்முன் எடுத்து வந்து கையாள நினைக்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணவேண்டும் என்று நினைக்க கூடாது.

படிப்படியாக, ஒவ்வொன்றாக வாழ்க்கையை வாழுங்கள். பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டே செல்வீர்கள். அதாவது இதுநாள் வரையிலும் வாழ்ந்த வாழ்க்கையைப் பிரச்சினையில்லாமல் கழித்தீர்களா? இல்லையே. பல பிரச்சினை இருந்தது. அதையெல்லாம் கடந்து வந்து அதையெல்லாம் தீர்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இவ்வளவு தூரம் வாழ்ந்து முடித்த நாம் மீதி வாழ்க்கையை வாழ முடியாதா? நிச்சயமாக முடியும். ஏற்கெனவே, பிரச்சினைகளைத் தீர்த்துத் தீர்த்து 40, 50 வருட அனுபவம் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையை வாழ்வது இன்னும் சுலபமாகவும், இனிமையாகவும் இருக்கும்.

சமூகம் உங்கள் மீது திணித்த ஆசைகள், உங்கள் வாழ்க்கையை எப்படி நரகமாக்குகிறதோ அதேபோல் சமூகம் உங்கள் மீது திணித்த அச்சங்களும் நரகத்தை உண்டு பண்ணும்.

மூன்றாவது, இன்னொரு முக்கியமான கருத்து என்னவென்றால், உண்மையிலேயே சமூகம் சமுதாயம் என்றால் என்ன? உங்கள் மனம்தான் சமுதாயம்.