தொடர்ந்து காப்பாற்றபடுகிறீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு நடந்த கதை. நடந்த கதையாக சொல்லப்பட்ட கதை.
ஒரு நாட்டில் பெரிய வெள்ளம் வந்து அந்த நாட்டையே மூழ்கடிக்கத் துவங்கியது. எல்லோரும் ராணுவத்தால் காப்பாற்றப்பட்டார்கள். அப்போது ஒரேயொருவர் மட்டும் வீட்டின் கூரை மீது உட்கார்ந்து கொண்டு “என்னைக் கடவுள் காப்பாற்றுவார்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக ஒரு ராணுவப்படகு வந்தது. “வாருங்கள் அய்யா... காப்பாற்றி விடுகிறோம். வெள்ளம் நிறைய வருகிறது” என்றனர். “கடவுள் என்னைக் காப்பாற்றுவார். நீங்கள் போங்கள்” என்றார் அவர்.
பிறகு ராணுவத்தின் விமானம் ஒன்று வந்து அவரை காப்பாற்ற முயற்சித்தது. அப்போது அவர், “என்னைக் கடவுள் காப்பாற்றுவார்! போங்கள் அய்யா,” என்றார்.
வெள்ளம் அதிகமாக வந்து அவரை அடித்துச் சென்று விட்டது. அவரும் இறந்துவிட்டார்.
மேலே சொர்க்கத்தில் தீர்ப்பு அளிக்கிற நேரத்தில் இவருக்கு அளித்த தீர்ப்பை பார்த்து அதிர்ந்தார். ஏமாற்றப்பட்டதாக எண்ணியவர் கடவுளைப் பார்த்து, “கடவுளே! உன்னையே நம்பியிருந்தேன்! இப்படி என்னைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டாயே” என்றார்..
உடனே கடவுள் சொன்னார், “மூன்று முறை உதவி அனுப்பினேன். முதலில் ஒரு சின்ன படகு வந்தது. அதன்பின் ஒரு பெரிய படகும் வந்தது, அதன்பின் விமானமும் வந்தது. மூடனே! உன்னைக் காப்பாற்றத்தான் மூன்று முறை அனுப்பினேன். நீ அதைப் புரிந்துகொள்ளவில்லை... நான் என்ன செய்வேன்?" என்றார்.
ஆபத்து அவசர காலத்தில் ஏற்படுகிற தற்பாதுகாப்புக் கலை தவறு இல்லை. (பயம்) அது வேறு விஷயம். இந்த மனரீதியான பயம், "இது நடந்துவிடுமோ, அது நடந்துவிடுமோ, என்ன ஆகுமோ? இது எப்படிப் போகுமோ? அது எப்படி ஆகுமோ?" என்ற பயங்கள் தான் தவறு.
வியாபாரத்திலே ஒரு நாள், ஒரு 10 ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது என்றால், உடனே, "இப்படியே போனால், 1 மாதத்தில் 3,000 ரூபாய் நஷ்டம் ஆகிவிடுமே. ஒரு வருஷத்தில் இவ்வளவு ரூபாய் நஷ்டம் வருமே. 10 வருஷத்துல எவ்வளவு லட்சம் நஷ்டம் வரும்? அப்புறம் நான் என்ன ஆவேன்? நான் நடுத்தெருவில் நின்றுவிடுவேனே! என்பது போன்ற பயங்கள்... ஒரு நொடிக்குள் உங்கள் எண்ணத்தினால் வாழ்க்கையையே ஓட்டிப் பார்த்துவிடுவீர்கள். ஒரு சிறு விஷயம் நடப்பதினால் வாழ்க்கை முழுவதும் அதைக் கணக்குப் போட்டு பார்த்து விடுகிறீர்கள். மொத்த வாழ்க்கை பற்றியும் ஒரு படம் பிடித்து விடுகிறீர்கள்.
அதனாலேயே சோர்ந்து போய், பயந்து போய் எதையும் செய்ய முடியாமல் திராணியில்லாமல் அமர்ந்துவிடுவீர்கள். எந்த இயக்கத்திலும் உங்களால் இயங்க முடியாது. அதேபோல் உங்கள் வாழ்க்கை முழுவதையும் மொத்தமாக உங்கள் மனதின் முன் வைத்துப் பார்த்தீர்கள் என்றால், "அய்யோ! எப்படி நான் இயங்குவேன்? என்னால் முடியுமா? எனக்கு சக்தியிருக்கா?" என்று பயந்துபோய் உட்கார்ந்து விடுவீர்கள்.