உணர்ச்சிகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘போர்க்களத்தில்
சட்டென்று இதயத்தில்
இறங்கிய வாளாய்
இறங்குகிறது -
உணர்ச்சிகள்
போர்க்களம் எவ்வளவோ மேல்,
உயிர் உடனே பிரிந்து விடுகிறது - ஆனால்
இதயத்தில் இறங்கிய வாள்!!!
வாழ்க்கை எவ்வளவு கொடுமை!
உயிர் இருக்கும்வரை போராட்டம்.
நெஞ்சில் நுழைந்த உணர்ச்சிகள்!!!
உணர்ச்சிகளால்
பொங்கும் வேதனை
என்று அடங்கும்?’
உணர்ச்சிவசப்பட்டுக் கேட்ட சீடனுக்கு
‘இது போன்ற
உணர்ச்சிவசப்படுவதை
என்று நிறுத்துகிறாயோ அன்று!’
குருவின் பதிலில்
நெஞ்சே
நெறிகட்டிக் கொண்டதைபோல
வலித்தது!
‘வெந்த புண்ணிலே
வேலா...
வழி கேட்டால்
வலி தருவதுதான்
திருவிளையாடலா? - சீடன்
‘புண்ணிலே
சீழ் கோர்த்து விட்டது...
வலித்தாலும் சரி,
வழி இதுவே
சென்று வா’ - குரு
வீட்டுக்குச் சென்றவன்
எட்டி உதைத்தான்
தூண்டப்பட்ட வேதனையில்.
துடிதுடித்துத்
துள்ளி விழுந்தான்.
தூணில் உதைபட்ட
கால் பெருவிரலில் இருந்த புண்ணால்.
விழுந்தவன் சிந்தித்தான்
‘சின்ன உதைக்குத் துடித்துப் போனது
தூணாலா???
புண்ணாலா???
பதில்
‘புண்ணால்தான்’ - என்று வந்தது.
அடுத்த நொடியே உதித்தது
‘உணர்ச்சிகள் வேதனைப்படுத்துவது,
உள்ளிருக்கும் புண்ணுக்குத்
தியானமென்னும் மருந்திட்டான்
புண் மறைந்தது.
அதே உணர்ச்சிகள் நிறைந்த
சமுதாயம் அதன்பின்
ஒருமுறை கூடத் தீண்டவில்லை அவனை’.
