நீங்கள் விரும்பும் இடத்தை சக்தியூட்டலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லோருக்கும் ஒரு கேள்வி...
உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ நாற்பத்தி இரண்டு வயதிலோ இல்லை ஐம்பது வயதிலோ, "உன்னை நான் இவ்வளவு நாள் நிறையக் கஷ்டப்படுத்தி விட்டேன், தவறாகப்புரிந்து கொண்டேன்" என்று மனம் திருந்தி சொல்வதினால் என்ன பயன்!
இருபத்தைந்து வயதில் சொல்லி இருக்க வேண்டியதை ஐம்பதில் சொன்னால் அதுதான் சோகம்.
"இளம் சமுதாயமே! இப்பொழுது நீங்கள் தான் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள்தான் இந்தத் தியானத்தையும், ஞானத்தையும் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்" என்று ஜென் ஞானி ஒருவர் அடிக்கடி தன் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவார்.
குழப்பமிகு கேள்வியொன்றை நிருபர் ஒருவர் கேட்டார், "பலரும் பலவிதமாய் ஆன்மீகத்தை பற்றிச் சொல்கின்றார்கள். நிஜமாய் ஆன்மீகம் என்றால் என்ன?"
அதற்கு "ஆன்மீகம் என்றால் பெரிதாக நினைத்து குழப்பிக் கொள்ளவேண்டாம்.
பட்டையிட்டு, காவி அணிந்து, ருத்ராட்ச மாலை அணிந்துகொண்டு இருப்பது மட்டும்தான் ஆன்மீகம் என்று நினைத்து விடாதீர்கள். ஆன்மீகம் என்றால் ஆனந்தமாக இருப்பதும், அதற்கு உங்களைத் தயார் செய்வதும் தான்.
நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் உங்களை முழுமையாக அனுபவிக்கச் செய்து குதூகலமாகவே இருக்கச் செய்வதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதே நீங்கள் தேடுவதை உங்களுக்குத் தரும் இனிய வழி என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது" எனப் பதிலளித்தேன்.

கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் கேட்ட அருமையான கேள்வியொன்று நினைவிற்கு வருகிறது.
"25 வருடங்கள் கழித்து நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையைச் சந்திக்கப் போகிறீர்கள், வாழ்க்கைக்கு பணத்தையும், வசதிகளையும் தேவையான அளவு தயார் செய்து வைத்துவிட்டீர்கள்!. ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்? எதைத் தயார் செய்தீர்கள்?
ஒரு மனிதரைப் புரிந்து கொள்வதற்கு என்ன கற்றுக் கொண்டீர்கள்? எதுவுமே புரிந்து கொள்ளாமல் எப்படிக் காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்?" என்றுகேட்டதற்கு அவர்களின் ஆழ்ந்த யோசனைமிக்க அமைதியே பதிலாய் வந்தது.
இப்படித்தான் நாம் எல்லோருமே மிகப்பெரிய அபாயத்தில் இருந்தாலும், அபாயத்தில் இல்லாதது போல் சுதந்திரப் பறவைகளைப் போல பறந்து கொண்டிருக்கிறோம்.
இது மிக மிகத் தவறு, மாபெரும் அபாயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிச் சிறிது கண்டிப்பாக ஆராய்ந்து அதை எதிர் கொள்வதற்காக நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
அதனால் தான் ஞானிகள் தொடர்ந்து "நாடு முன்னேறுவதற்கு இளைஞர்களிடம் ஏற்படும் விழிப்புணர்வுதான் தேவை" என்று சொல்கின்றார்கள்.
ஒரு இளைஞர் யோசித்தால் போதும். எதிர்காலத்தில் உருவாகப் போகிற ஒரு வம்சமே ஆனந்தமாக மாறிவிடும், ஆரோக்கியமாகிவிடும்.
ஜென் ஞானி ஒருவரிடம், "ஏன் நீங்கள் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தியானம் சொல்லித்தரும் வாய்ப்பு கிடைத்தால் அவ்வளவு குஷியாகி விடுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு
"தியாக மனப்பான்மைக் கொண்ட, பொறுப்புணர்வு கொண்ட ஒரு இளைஞரை இன்று உருவாக்கிவிட்டால், எதிர்காலத்தில் அவரைச் சுற்றி ஒரு மிக உயர்ந்த சமுதாயமே உருவாகி விடும்.
ஒரு இளைஞர் எழுச்சியடைவது, நூறு குடும்பங்கள் எழுச்சியடைவதற்குச் சமம்" என்றார்.
"மிக உயர்ந்த சமுதாயம் உருவாக எது அடிப்படை?" என்று மிகப்பெரிய ஆராய்ச்சி நடந்தது. ஆராய்ச்சியின் முடிவு என்னவாயிருக்கும் என ஆர்வத்தோடு பலர் எதிர்பார்த்திருக்கையில் "ஒருவரை ஒருவர் முழுமையாய் புரிந்து கொண்டு, உணர்வறிந்து இனிமையாய் வாழும் உயர்ந்த பண்புதான் அடிப்படை" என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சமூக ஆராய்ச்சியாளர்கள்.
ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளும்தன்மை, அவர் தன்னைப் புரிந்துகொள்ளும் தன்மையை வைத்து நிர்ணயமாகிறது. இதை மிக எளிதாய் நிகழ்த்தும் ஆனந்தக் கலைதான் ஆன்மீகம். நாடு நலம் பெறுவதுகூட "ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை அடிப்படையாய் கொண்டதுதான். இதையெல்லாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் முன் தெரிந்து கொள்வதா? இல்லை, வாழ்க்கையை வாழ்ந்த பின்பு
ஒரு இளைஞர் எழுச்சியடைவது, நூறு குடும்பங்கள் எழுச்சியடைவதற்குச் சமம் தெரிந்து கொள்வதா?
எது பலனளிக்கும்! யோசித்துப்பாருங்கள்.
வாழ்க்கைக்கு முன்பு தெரிந்து கொண்டால்தான் நல்லது. அப்போதுதான் ஏதாவது உபயோகமாக இருக்கும்.
எல்லாம் முடிந்து, எல்லாம் சலித்து விட்டபின் சண்டையெல்லாம் போடக்கூட திராணி இல்லாத நிலையில் வந்து "நான்தான் உன்னைத் தவறாகப்புரிந்து கொண்டேன் என்று சொல்வதால் என்ன பலன்?
கடைசியாய் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு கேள்வி...ஆன்மீகம் தவறா? தியானம் தேவையா? இல்லையா?
இந்த ஆன்மீகம் உங்களுக்குத் தேவையா? தேவை இல்லையா? என்று முடிவெடுக்க... நாட்டை நலமாக்கி மிக உயர்ந்த சமுதாயமாக்கும் ஆனந்தம் தேவையா? தேவை இல்லையா? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.
ஆத்ம தியானம்
ஆனந்த சக்தியையும், புரிந்து கொள்ளும் புத்தியையும் நேரடியாய் அதிகரிக்கும் தியானமிது.
பள்ளிகளையும், கல்லூரிகளையும், கோயில்களையும், இல்லங்களையும், மன்றங்களையும் இந்த ஒரு தியானத்தால் சக்தியூட்டிவிடமுடியும்.
வெறும் 7 பேர் சேர்ந்தாலே ஒரு இடத்தையே உங்களால் சக்தியூட்ட முடியும். மேலும் உங்களுக்குள்ளும் அபரிமிதமான சக்தியைப் பொங்க வைக்க முடியும். அதற்கு நேரடியாய் உதவும் தியானம்தான் இந்த மண்டல தியானம்.
கூட்டுத்தியானத்தில் மிகப்பெரிய சக்திப் பெருக்கை தரும் மிக வலிமையான தியானங்களின் ஒன்றான மண்டல தியானத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
சக்தி சங்கிலி வளையம் :
7 பேருக்குக் குறையாமல் வட்டமாக அமர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் வலது கையும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் இடது கையினுடைய உள்ளங்கையை கட்டை விரலாலும், புறங்கையை மீதமுள்ள விரலாலும் மெல்லக் கவ்விப் பிடித்தவாறு அமர்ந்து கொள்வது மண்டல தியானத்தின் முதல் படி.
அடுத்த படி....
இந்தச் சக்தி சங்கிலி வளையத்தில் இருந்து கொண்டு மகாமந்திர தியானத்தை ஒவ்வொருவரும் செய்யுங்கள். கூட்டுத் தியானத்தால் பொங்கும் நேர்மறை சக்தி அந்த இடத்தையே சக்தியூட்டிவிடும். தியானத்தில் உருவாக்கப்படும் அதிர்வுகள் அங்குள்ள எதிர்மறைச் சக்திகளையெல்லாம் துரத்தி விடும் வல்லமை பெற்றது. இதைத் தொடர்ந்து நல்ல காரியங்கள் பல அங்கு நிகழ ஆரம்பிப்பதை அனுபவமாகப் பார்த்து எங்களோடு நன்றிகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். செய்து பாருங்கள். பலன் புரியும்.
மகாமந்திர தியானம் :
முதல் படி : முதுகெலும்பு, தலை நேர்க்கோட்டில் இருக்குமாறு தளர்வாக அமர்ந்து 21 நிமிடங்கள் “ம்ம்ம்...” என்ற மகாமந்திர நாதத்தை ஆழமாகவும், நீளமாகவும், சப்தமாகவும் முழு சக்தியைப் பிரயோகித்து 21 நிமிடத்திற்கு உச்சாடனம் செய்யுங்கள்.
இரண்டாம் படி : 10 நிமிடங்கள் உள்ளேயும், வெளியேயும் நிகழும் மாற்றங்களைச் சாட்சியாக இருந்து பாருங்கள்.
