KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உங்களின் அதிவேக வளர்ச்சிக்குSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உங்களின் அதிவேக வளர்ச்சிக்கு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

ஆஸ்ரமத்திற்குள் ஒரே பரபரப்பு...

"இந்தத் துறவி திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்றார்.

அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் இவர் காணாமல் போய்விடுகின்றார். எங்கே போகிறார்? என்ன செய்கிறார்!?" என்று காரசாரமான விவாதம் நடந்தது.

"இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது போன்ற தவறான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று ஒருவர் சொன்னார்.

இன்னொருவர், "இல்லை, இப்படிப்பட்டவர்களை இங்கு தங்குவதற்கே விடக்கூடாது. துரத்திவிட வேண்டியதுதான்", என்றார்.

கடைசியாக ஒருவர், "எனக்கு வெகுநாளாகவே இந்த சந்தேகம் இருக்கின்றது. இப்போது அந்தத் துறவி இல்லை. இதுதான் சரியான நேரம். வாங்க, அவருடைய அறையை பரிசோதனை செய்யலாம். நிச்சயம் ஏதாவது ஆதாரம் கிடைக்கும்" என்றார்.

உடனே, அந்தத் துறவியின் அறைக் கதவு உடைக்கப்பட்டது. அறையின் முகப்பிலே கட்டிலுக்கு அருகில் ஒரு வாளியில் இரண்டு சேலைகள் நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்ததும்... "நாம் சந்தேகப்பட்டது சரியாய் போய்விட்டது. இது சரியான ஆதாரம்" என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது தூரத்தில் துறவி வந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர், "அதோ அவர் வருகிறார், பாருங்கள்" என்று சத்தமிட்டார்.

ஆஸ்ரமம் நோக்கி வந்துகொண்டிருந்த துறவி, ஏதோ ஒரு ஞாபகம் வந்தவரைப் போல் நின்று, திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அந்தக் கூட்டத்திலிருந்த இருவர், "ஆம்! இதுதான் சரியான சமயம். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்றாலே, அவரை கையும் களவுமாகப் பிடித்துவிடலாம். அதனால் நாங்கள் செல்கிறோம்" என்று முன்னே வந்தார்கள்.

துறவி

மனிதர்கள்
இன்னொருவரிடம்
கண்டுபிடிக்கும்
தவறுகள் அவரை
நல்ல விதமாக
யோசிக்க
விடுவதில்லை...

கூட்டம் அமைதியாய் ஆமோதிக்க, இருவரும் பூனைபோல பின் தொடர்ந்தார்கள்.

துறவி ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தனி குடிசைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்ற இருவரும் ஜன்னலைத் திறந்து பார்த்தார்கள்.

உள்ளே நடந்த காட்சியைப் பார்த்த இருவரும் முகம் இருளடைந்து நின்றார்கள்.

காரணம்....

வீட்டிற்குள்ளே சென்ற துறவி கட்டிலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவரை எழுப்பி, "மன்னித்துவிடம்மா.... ஆஸ்ரமம் வரைக்கும் சென்ற பிறகுதான் உனக்கு இன்று இரவு மருந்து கொடுப்பதற்கு மறந்துவிட்டேன் எனத் தெரிந்தது. இதைச் சாப்பிடு" என்று மருந்தைக் கொடுத்தார்.

மருந்து கொடுத்த துறவியைப் பார்த்து, நன்றிமிக்க அந்த அம்மா புன்னகையோடு தன் இரு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னார்.... கொஞ்சம்கூட நகர முடியாத நிலையில் தொழுநோயுற்றிருந்த அந்த நூறு வயது பாட்டி!

தங்களின் தவறான முடிவை நினைத்து தலை கவிழ்ந்தார்கள்.

துறவியைப் பற்றி நல்ல விதமாக யோசிக்க விடாமல், அவர்களை தவறான முடிவுக்கு வரவைத்தது எது?

இதற்கு பதில் தெரிந்துவிட்டால் ஒருவரின் வளர்ச்சியை வேகமாக நிகழவைக்கும் ஒரு முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடித்துவிடலாம். அது...

மனிதன் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல.

அவை அவனுடைய தவறுகள்.

பிரபல ஜென் ஞானி ஒருவரைப் பற்றி தவறான முறையில் சித்தரித்து, பல தவறுகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், பலபேர் அதனால் தங்களின் வாழ்க்கையையே இழந்துவிட்டதாகவும் செய்தி வந்திருந்தது.

இந்தச் செய்தியைப் படித்த ஞானி, சின்ன அதிர்ச்சிகூட இல்லாமல், “இதில் எழுதப்பட்டிருப்பதெல்லாம், இதை எழுதியவரின் மனத்தில் உள்ள அழுக்கைக் காட்டியிருக்கிறது.

இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் புரியவரும்” என்று சிரித்த முகத்தோடு சொல்லிவிட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றார். அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே இன்னொரு செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. அது அந்த ஜென் ஞானியைப் பற்றித் தவறாக எழுதியவர் கைது செய்யப்பட்டதாக வந்திருந்த செய்தி.

செய்தியில் எழுதப்பட்டிருந்ததோ, “அந்தத் தவறுகளை அவர் இவ்வளவு காலமாக செய்துகொண்டிருந்ததை அவரால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களோடு வெளியிட்டிருந்தார்கள்.”

ஜென் ஞானியைத் தவறாய் பார்க்க வைத்தது, அதை எழுதியவரின் மனத்தில் குடிகொண்டிருந்த தவறுகளே.

மனிதன் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல.

அவை அவனுடைய தவறுகள்.

ஒன்றை முழுமையாய் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்கும் குற்றங்கள், குறைகள் அவர்களின் மனதைத்தான் படம் பிடித்து காட்டுகின்றது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டாலே, உங்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும். புரிந்து கொள்ளமுடியும்.

இன்னொருவரைப் பற்றி, அவரின் செயல்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் நம் வளர்ச்சியை பல மடங்குகள் அதிகரிக்கும் சூத்திரங்கள்.

ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

மற்றவர்களைப் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் உங்களைப் பற்றி உங்களுக்கே விளக்கும் உரைகள்.

இன்றிலிருந்து மற்றவர்களைப் பற்றி உங்களின் மனம் கண்டுபிடிக்க முயற்சிக்கும் குறைகளை, குற்றங்களை ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் எழுதி வையுங்கள்.

ஒருநாள் முழுவதும் எழுதிய கண்டுபிடிப்புகளை எடுத்து அன்று இரவு படியுங்கள். நீங்கள் நம்புவதற்கே ஆச்சரியப்பட்டால்கூட, அதில் உள்ள 90%திற்கும் மேற்பட்டவையெல்லாம் உங்களின் மனதிற்குள் உங்களுக்கு தெரியாமலே தூங்கிக் கொண்டிருக்கும் பிரச் னைகள்.

இதைச் செய்தாலே, உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பலவற்றை தெரிந்துகொள்வீர்கள்.

இவைதான் உங்களின் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கும் தடைகள். இவற்றை மாற்றிக் கொண்டால் உங்களின் வளர்ச்சி அதிவேகமாகிவிடும்.