KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நிஜமான தேவைSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நிஜமான தேவை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிஜமான ஆனந்தம்

portrait

ஆற்றங்கரை ஓரமாய் அமர்ந்திருந்த ஞானியை தரிசிக்கப் பலர் வந்த வண்ணம் இருந்தார்கள்.

"இவரால் உதவ முடியாவிட்டால், வேறு யாராலும் உங்களுக்கு உதவ முடியாது" என்று தனக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஞானியைப் பார்ப்பதற்கு வெகு ஆவலோடு சென்று கொண்டிருந்தார், அந்தச் செல்வந்தர்.

"என்னுடைய வாழ்வில் நிஜமான ஆனந்தத்தை யாராவது காண்பித்துவிட்டால், அவருக்கு என்னுடைய மொத்தச் சொத்தையும் தந்துவிடத் தயாராய் இருக்கிறேன்.

இந்த மூட்டைக்குள் என்னுடைய மொத்தச் சொத்தையும் விற்ற பணத்தை வைத்திருக்கிறேன்.

இந்த ஞானி என்னுடைய நெடுநாள் மன இறுக்கத்தையும், வெறுமையையும் தீர்த்துவிட்டால், இவருக்கே இந்த மொத்த சொத்தையும் தந்துவிடுவேன். இந்தச் சொத்தின்மீது எனக்குத் துளிகூடப் பற்றில்லை.

ஒருவகையில் இவ்வளவு சொத்துக்களை வைத்திருப்பது, எனக்கு சங்கடமான ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.

எனக்குத் தேவை ஆனந்தம், நிம்மதி. அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமில்லை" என்று அங்கிருந்த சீடரிடம் தன் பெருமை பேசிக் கொண்டே ஞானியை சந்திக்கச் சென்றார், அந்தச் செல்வந்தர்.

தன்னுடைய வாழ்வை துக்கமயமாக்குவது தான் தான்... என்ற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் ஞானியை தரிசிக்கச் சென்ற செல்வந்தருக்கு தக்க பாடம் காத்திருந்தது.

நமஸ்கரிப்பதற்காக தன் பணமூட்டையை கீழே வைக்கும்வரை அமைதியாக இருந்த ஞானி, சடாலென அந்த பணமூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.

கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்ததை ஜீரணிக்க முடியாத செல்வந்தர், "அய்யோ!, என் பண மூட்டை... அச்சச்சோ என் சொத்தெல்லாம் போச்சே..." எனப் பரிதவித்துப் புலம்பிய படியே, ஞானியை துரத்திக் கொண்டே செல்வந்தர் ஓடினார்.

portrait

தன்னுடைய வாழ்வை
துக்கமயமாக்குவது
'தான்' தான்...
என்ற அடிப்படை
உண்மைகூடத்
தெரியாமல் ஞானியை
தரிசிக்க சென்ற
செல்வந்தருக்கு தக்க
பாடம் காத்திருந்தது.

அந்த ஊரைப் பற்றி நன்றாய் தெரிந்து வைத்திருந்த ஞானி சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஓடினார்.

செல்வந்தரால் ஞானியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

"போச்சு! எல்லாம் போச்சு!" என்று கதறிக் கொண்டே, மூச்சு வாங்க ஞானியைத் தொடர்ந்து ஓடினார்.

ஊர் முழுக்க ஒருமுறை சுற்றிவிட்ட ஞானி, கடைசியாக அவர் தங்கியிருந்த ஆற்றங்கரையோர மரத்திற்கே வந்து சேர்ந்துவிட்டார். மரத்திற்கு முன்னே பணமூட்டையை வைத்துவிட்டு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்ட ஞானி செல்வந்தர் வந்து சேர்வதற்காகக் காத்திருந்தார்.

"இப்படி ஒரு விநாடி அசந்ததில் பிச்சைக்காரனாகி விட்டேனே!

என்னுடைய எல்லா சொத்தும் அந்த மூட்டையில் தானே இருக்கிறது.

ஒரு பைசா கூட இல்லாமல் இனி எப்படி வாழ்வேன்?" என்று புலம்பிய படி, ஞானி ஓடிய திசையை விசாரித்துக் கொண்டே ஏற்கனவே ஞானி இருந்த இடத்திற்கே வந்துவிட்டார் செல்வந்தர்.

“என்ன இது? துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம்” என்று யோசித்தபடி மரத்தடியைப் பார்த்த செல்வந்தர் கண்கள் மலரச் சிரித்தார். தன் முன்னே இருந்த பண மூட்டையை ஓடிச் சென்று எடுத்துக் கொண்டார். அவருடைய அந்த நிமிட சந்தோஷத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.

சந்தோஷத்தில் ஆட ஆரம்பித்த செல்வந்தரை நோக்கி வந்த ஞானி, “இப்போது நிஜமான ஆனந்தத்தில் இருக்கிறாயா?” என்று கேட்டார்.

“ஆம்! ஆம்! ஆம்!” என்று தலையாட்டிய செல்வந்தர் அந்தப் பணமூட்டையை அவரின் பாதங்களில் வைத்துவிட்டு, நிம்மதியாய் ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தார்.

செல்வந்தரின் கையிலேயே இருந்தவரை, அந்தப் பண மூட்டையின் மகத்துவம் அவருக்குப் புரியவேயில்லை.

பண மூட்டையை இழந்த சில நிமிடங்களில்தான் அது எவ்வளவு முக்கியமானது. அதன் மகத்துவம் என்ன என்பதெல்லாம் புரிய ஆரம்பித்தது.

நம்மோடு இருக்கும் பொருட்களின் மீதோ,

நம்மோடு வாழும் மனிதர்களின் மீதோ,

நாம் வாழும் சமூகம் மீதோ எளிதில் மனத்தால் சலிப்பை உண்டு பண்ணி விட முடியும்.

கூடவே இருக்கும்வரை அவற்றின் அருமை பெருமைகளை புரியவிடாமல் செய்வது மனத்தின் மந்த குணங்களில் ஒன்று. இதைத்தான் ஆங்கிலத்தில் 'Take it for granted attitude' என்று சொல்வார்கள்.

இந்த மந்த குணத்திலிருந்து ஒருவர் வெளிவந்தாலே, வாழ்வே ஆனந்தக் கூத்துதான் என்பது புரிந்துவிடும்.

> கூடவே இருக்கும்வரை அவற்றின் அருமை பெருமைகளை > புரியவிடாமல் செய்வது மனத்தின் மந்த குணங்களில் ஒன்று. > இதைத்தான் ஆங்கிலத்தில் 'Take it for granted attitude' என்று > சொல்வார்கள்.

இருப்பவற்றிற்காக ஆனந்தப்படுங்கள்...

கிடைத்ததற்கெல்லாம் நன்றி சொல்லுங்கள்...

உங்களோடு இருக்கும் ஒவ்வொன்றின் அருமையும், ஒவ்வொருவரின் அருமையும் புரிய ஆரம்பிக்கும். வாழ்வே ஆனந்தக் கூத்தாக, நிஜமான ஆனந்தம் மலரும்.

ஆத்ம தியானம்

ஆலோசனைக்காக வரும் பலர் என்னிடம் இப்படிச் சொல்வதுண்டு “உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை? நீங்களே பார்த்து எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.”

அப்போது அவர்களிடம், “எனக்குத் தெரிவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் உங்களுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்று தெரிய வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள்” என்று பதில் சொல்வதுண்டு.

இப்போதே ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, எவை எவையெல்லாம் உங்களின் நிஜமான தேவைகள் என்று எழுதுங்கள். எழுதுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எழுதுங்கள்.

நிஜமான தேவைகளைக் கண்டுபிடியுங்கள்.

அவற்றை அடைவதற்கு உழையுங்கள்.

ஒருவேளை இந்தக் கதையில் வரும் செல்வந்தரைப் போல நீங்கள் சிக்குண்டு விடுவோமோ என்று கவலைப்பட வேண்டியதேயில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், செல்வந்தர் சந்தித்த ஞானியைப் போல உங்களுக்குத் தேவையான திருப்பத்தை தருவது, உங்களை இந்த பூமிக்கு அனுப்பி வைத்த இறைசக்தியின் பணி.

இறைசக்தி இயற்கை சக்தி.

உங்களின் தேடுதலை மட்டும் ஆழமாக்குங்கள். உங்களின் நிஜமான தேவைகளையும், உங்களுக்கு நிஜமான ஆனந்தத்தைத் தருவதும் இயற்கை நிகழ்வுகள். அவை தன்னால் நிகழும்.