தெரியாததெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புரியாததெல்லாம் புரிய ஆரம்பிக்கும்
மலையின் உச்சியில் ஒரு ஜென் ஞானி வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கிருந்து கீழே பார்த்தால் பொங்கியோடும் நதி. மேலே நம் மூக்கை உரசிச் செல்லும் மேகங்கள். சுற்றிலும் ஆனந்தமயமான அமைதி.
மனித வாசனையே இல்லாத அந்த இடத்தில் ஏதோ ஒன்று அங்கு செல்பவர்களை மீண்டும் மீண்டும் ஈர்த்தது.
அடிக்கடி அங்கு வந்து போய்க்கொண்டிருந்த வைர வியாபாரியான செல்வந்தர் ஒருவர் அன்றும் அங்கு வந்திருந்தார். அவர் ஞானியிடம் சொன்னார், "உங்களிடம் ஏதோ ஒரு பெரிய தெய்வசக்தி இருக்கின்றது. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் இழுக்கின்றது.
உங்களின் முன்னால் அமர்ந்திருப்பதே அமைதியையும், ஆனந்தத்தையும் தருகின்றது. வேறு எங்கும் அனுபவித்திராத ஆனந்தம் இது!
நீங்கள் மனித உருவில் வாழும் தெய்வமா?" என்று ஆச்சரியம் பொங்க பக்தியோடு கேட்டார். அவரைப் பார்த்துச் சிறியதாய் புன்னகைப் பூத்து "உங்களாலும் இப்படி மாறவும், மலரவும் முடியும்" என்றார்.
"என்னாலுமா?" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்ட செல்வந்தர், "எப்படி முடியும்?" என்று உள்ளுக்குள் ஆழ்ந்து பிரார்த்தித்தபடி அமைதியோடு அமர்ந்திருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கண்விழித்தார் ஜென் ஞானி. அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக தான் எடுத்து வந்திருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள மூன்று பெரிய வைரங்களை ஞானியின் பாதத்தில் வைத்து வணங்கினார்.
வணங்கி எழுந்த செல்வந்தர், “என்னுடைய சொத்து முழுவதையும் விற்றுதான், இந்த மூன்று வைரங்களை வாங்கினேன். இந்த மூன்று வைரங்களை விற்றால் பல கோடிகள் எனக்குக் கிடைக்கும். ஏற்கனவே இருந்ததைவிட பத்து மடங்கு பணக்காரனாகி விடுவேன்.

> இப்போது
> உங்களின்
> காலடியிலேயே
> இருந்துவிடலாம்
> எனத்
> தோன்றுகிறது.
> இந்த வைரங்கள்
> இனி எதற்கு
> எனக்கு?
இதற்கு உங்களின் ஆசீர்வாதம் பெறவே இங்கு வந்தேன்.
இப்போது உங்களின் காலடியிலேயே இருந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்த வைரங்கள் இனி எதற்கு எனக்கு?” என்று பக்தியோடு சொன்னார்.
“அப்படியா!” என்று கேட்ட ஞானி, மூன்று வைரங்களில் ஒன்றை மட்டும் கையில் எடுத்து தூக்கிப்போட்டு விளையாட ஆரம்பித்தார்.
மலை உச்சியில் இருந்து, கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் அந்த வைரம் தவறி விழுந்துவிட்டது.
இதைச் சற்றும் எதிர்பாராத செல்வந்தர், “அச்சோ! அது பல கோடி ரூபாய்கள் பெருமானமுள்ளது” என்று சொல்லி அந்த வைரத்தைக் கண்டுபிடிக்க அவரும் நதிக்குள் குதித்தார்.
அரைமணி நேரத்திற்கு மேல் மூழ்கி மூழ்கித் தேடிய செல்வந்தர், வெறுங்கையோடு ஞானியிடம் வந்தார்.
வந்தவர், “அந்த வைரம் எங்கே விழுந்தது என்று உங்களால் சரியாய் காட்ட முடியுமா?” என்று ஞானியிடம் கேட்டார்.
ஜென் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் ஒரு ஓரத்தில் எறிந்து, “அதோ! அங்கேதான் விழுந்தது. நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டார்.
"அச்சோ... இரண்டாவது வைரமும் போச்சே... என்ன செய்வேன்" என்று பதறியவாரே இரண்டாவது வைரத்தை குரு எறிந்த இடத்தில் குதித்துத் தேடினார்.
எவ்வளவு தேடியும் பலக் கற்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. வைரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
களைப்போடு மேலே வந்தவர், குரு கண்களைத் திறக்கும்வரை பொறுமையோடு அமர்ந்திருந்தார். குரு கண்களைத் திறந்ததும், "என்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார். அதற்கு குரு சொன்னார், நிஜமாகவே அந்த இடத்தில் தான் விழுந்தது. இன்னும் மிகச்சரியாக கூட என்னால் அந்த இடத்தைக் காட்ட முடியும்.
"அப்படியா! சொல்லுங்கள்" என்றார் ஆர்வமிக்க குரலில்.
"அங்கே ஒரு வேப்பமரம் தெரிகிறதா?"
"ம்... தெரிகிறது"
"அங்கிருந்து சரியாய் பத்தடி தூரத்தில் ஒரு பாறை தெரிகிறது பாருங்கள்"
"அந்தப் பாறைக்கு முன்னாலா, இல்லை பின்னாவா?"
"முன்னுமல்ல, பின்னுமல்ல, பக்கத்தில்..." என்று சொல்லி மூன்றாவது வைரத்தையும் அந்த இடம் நோக்கி எறிந்தார்!
இம்முறை செல்வந்தர் அதிர்ச்சி அடையவில்லை.
மாறாக சிரிக்க ஆரம்பித்தார். மூன்றாவது வைரத்தையும் ஞானி தூக்கி எறிந்தபோது, அவருக்குள் இந்த வார்த்தைகளால் விளக்க முடியாத பரவசம் நிகழ்ந்தது.
இதுவரை அவருக்குள்ளேயே இருந்துகொண்டு அவரின் வாழ்க்கையையே குடித்துக் கொண்டிருந்த அஞ்ஞான இருள் ஷணத்தில் மறைந்தது. அகக்கண் திறந்தது.
மூன்றாவது வைரத்தையும் ஞானி தூக்கி எறிந்தபோது, வியாபாரிக்குள் இந்த வார்த்தைகளால் விளக்க முடியாத பரவசம் நிகழ்ந்தது.
அவருக்குள் இருந்தத் தெய்வீகம் விழித்துக் கொண்டது. ஜீவன் முக்தி அடைந்தார்.
"என்னாலுமா முடியும்?" என்று சில மணி நேரங்களுக்கு முன் ஆச்சரியமாய் கேட்டவர், இதுவரை ஞானியிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த அதே ஆனந்தம் தன்னுடைய ஒவ்வொரு செல்லிலும் பொங்குவதை உணர்ந்தார். தன்னுள் பொங்கும் தெய்வத் தன்மையில் லயித்து அமர்ந்திருந்தார். இதுவரை புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. இதுவரை தெரியாததெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
கண்களைத் திறந்து தனக்குள் மிகப்பெரிய ஞான அனுபவத்தைத் தந்த குருநாதரை வணங்கி எழுந்தார்.
எழுந்தவரை ஆசீர்வதித்த குரு, "நல்லதப்பா! உன்னுடைய பணி என்னைப் போல் மலையில் தனியாய் அமர்ந்திருப்பது அல்ல.
நாட்டுக்கு திரும்பச் செல். வீட்டிலேயே சகஜமாக வாழ்ந்து அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து, உனக்குக் கிடைத்த இந்த அனுபவத்தைப் பலருக்கும் கிடைக்கச் செய். உன் தொழிலும் செழிக்கும். செல்வம் கொட்ட ஆரம்பிக்கும்.
உன்னால் நாடு நலம் பெறட்டும். உன் பணி முடிந்த பிறகு நானே அழைத்துக் கொள்வேன். போய்வா!" என்று தன் ஞானமடைந்த சிஷ்யனை ஆசீர்வதித்தார்.
மனிதனாய் வந்தவர் மகானாய்த் திரும்பியது எப்படி?
இந்த ஆத்ம தியானம் அதற்கான அருமையான பதில்.
ஆத்ம தியானம்
நீங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கும் வரை உலகம் எங்கிருக்கிறதென்றே தெரியாது. அப்படித்தான் அகக்கண் மூடியிருக்கும்வரை ஞானமும், ஆனந்தமும் எங்கிருக்கிறதென்றே தெரியாது.
அகக்கண் திறந்துவிட்டால் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும். எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.
இப்போது நீங்கள் பார்க்கும், அனுபவிக்கும் உலகம் நிஜ உலகமல்ல. அது உங்களின் மனம். உங்களின் மனம்தான் உலகை நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றிக் காட்டுகிறது. கிட்டத்தட்ட தன்னுடைய மொத்தச் சொத்தையும் விற்று அந்த மூன்று வைரங்களை செல்வந்தர் வாங்கியிருந்தார். அப்போது அவருடைய உலகமே அந்த மூன்று வைரங்கள்தான். அவரின் வாழ்வே அந்த மூன்று வைரங்கள்.
அந்த மூன்று வைரங்களையும் இழந்தபோது, அவரின் உலகமே அவரிடமிருந்து காணாமல் போய்விட்டது. அவருடைய மனமே உருக்குலைந்து விட்டது, மறைந்து விட்டது.
அகக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும் இமையான மனம் ஒரு கணம் மறைய, அவருக்குள் இருந்த தெய்வீகம் விழித்துக் கொண்டது. மனம் மறைவது, தெய்வீகம் விழிப்பதும், குருவின் சாந்நித்தியத்தால் எளிதில் நடந்துவிட்டது. உங்களுக்குள்ளும் தெய்வீகம் மலரும்...
தெய்வீகத்தை விழிக்க வைக்கும் தியானம் அகக்கண்களை திறக்கும் தியானம்
ஒருவருக்குள் தெய்வீகம் விழிப்படைய இந்த மூன்றும் ஒன்றாய் சேர வேண்டும். சக்தி, புத்தி, யுக்தி மூன்றும் ஒன்றாய்ச் சேர, முக்தி தன்னால் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வுதான்.
சக்தி : இதைத் தியானத்தால் எளிதில் அதிகரிக்கலாம்.
புத்தி : தினமும் ஒரு ஞானக்கருத்தை வாழ்வில் செயல்படுத்துவதாலேயே புத்தியை அதிகரித்துவிடலாம்.
யுக்தி : உங்களின் அகக்கண்களைத் திறப்பதற்கான நுட்பம்தான் யுக்தி. சக்தியையும், புத்தியையும் அதிகரியுங்கள் யுக்தியைத் தரவேண்டிய குரு உங்களின் வாழ்வில் வரவேண்டிய நேரத்தில் வருவார். நீங்கள் சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திப்பீர்கள். முக்தி தன்னால் நிகழும்.
இன்றிலிருந்து இதைச் செய்யுங்கள். ஒரே வாரத்திற்குள் கூட அது உங்களுக்கு நிகழ்ந்துவிட முடியும்.