சகஜத்தன்மை வாழ்வையே புதுப்பிக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு பேருந்தில் திடீரென்று பயங்கரமாகச் சப்தம்கேட்டது.
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. என்னவென்று பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்தபோது, ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மா “கதவை மூடு” என்று சத்தமிட்டார்.
அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு பெண் “கதவைத் திற” என்று சத்தமிட்டார். இதே சண்டை நீடித்துக்கொண்டேயிருந்தது.
பேருந்தில் “திறந்துவை” “ம்ஹீம் மூடிவை!” என்ற சப்தம் வேக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. சப்தம் மற்ற பயணிகளையும் பாதிக்கவே ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டார். முதல் பெண்ணிடம் ஓட்டுனர் கேட்டார். “ஏன் நீங்கள் திறங்கள்?” என்று சொல்கின்றீர்கள் என்று .
அதற்கு அந்த அம்மா “எனக்கு மூச்சு முட்டும் பிரச்சினை உள்ளது. இப்படியே மூடி இருந்தால் நான் இறந்துவிடுவேன். அதனால்தான் திறந்து வைக்கச் சொல்கிறேன்” என்று சொன்னார்.
“நீங்கள் ஏன் மூடச்சொல்கிறீர்கள்?” என்று இன்னொரு பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு இன்னொரு அம்மா “எனக்கு ஆஸ்த்துமா பிரச்சனை உள்ளது. இப்படிக் காற்று அடித்தால் எனக்கு மூச்சுவாங்கும், வீஸிங் வந்துவிடும்” என்று சொன்னார்.
இதற்கிடையில் இதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் பின்னால் இருக்கும் சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் மிகச் சாதாரணமாகப் படுத்துக்கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தார்.
ஓட்டுனரால் பிரச்சனையை முடிவுக்கு எடுத்துவர முடியாமல் தடுமாறுவதைப் பார்த்து, அங்கே பாவமாக நின்று கொண்டிருந்த நடத்துனரை அழைத்த நடுத்தர வயதுக்காரர் “ஐயா! இதற்கு நான் ஒரு முடிவு சொல்லட்டுமா?" என்று கேட்டார்.

நடத்துனரும் பிரச்சினை தீர்ந்தால் போதுமென்று “சரி!" என்று சொன்னார்.
அதுவரை அமைதியாக இருந்த அவர் மிகவும் எரிச்சலடைந்தவராய், “சார், முதலில் கதவை மூடுங்கள். இந்த அம்மா சாகட்டும்!
பிறகு கதவைத் திறங்கள், அந்த அம்மா சாகட்டும்!" என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்
நடத்துனர், “என்னப்பா இது! பிரச்சனைக்குத் தீர்வு கேட்டால், புது பிரச்சனையை உருவாக்குகிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அவர், “வெறும் 15 நிமிடம் போராடியதற்கே இப்படி நொந்து போய்விட்டீர்கள். நான் 15 வருடமாக இவர்கள் இருவருடனும் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
அவர் நொந்து கொண்டது தனது இரு மனைவிகளைப் பற்றி! முதல் திருமண வாழ்க்கை அவருக்கு முதலில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு ஏனோ இன்னொரு திருமணமும் செய்து கொண்டார். இப்போது இரண்டும் கசக்கிறது. எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்த வாழ்க்கை, எவ்வளவு துக்கத்தில் போய் முடிந்திருக்கிறது பாருங்கள்.
சந்தோஷத்தைத் தேடிப்போனவர் துக்கத்தில் போய் நிற்கின்றார். இதற்குக் காரணம் இயற்கையிலேயே எளிதில் கசந்து விடும் மனநிலையில் மனிதர்கள் இருப்பது தான்.
சிலருடைய பிரவேசம் உடனடியாக அடுத்தவரை எரிச்சலூட்டுவதாய் இருக்கும். அவர் போனால் போதும், ஏதோ ஒரு வகையில் பிரச்சனை ஒன்றை உருவாக்கியே தீருவார், இல்லையென்றால் மற்றவர்கள் உருவாக்குவார்கள். ஆனால் அவரால் கண்டிப்பாக பிரச்சனை அங்கு உருவாகும் என்று உறுதியாய் சொல்ல முடியும்.
வீட்டு விசேஷங்களை, சண்டைக்களமாக மாற்றுமளவுக்கு பிரச்சினைகள் எதிர்பாராதவிதமாய் உருவாவதற்கான காரணம், மனிதர்கள் மனத்தில் ஏந்தித் திரியும் மனக்கசப்புகள் தான்.
“மனிதர்களோடு பழகுவது எப்படி?” என்று எந்தப் பள்ளியிலும், எந்தக் கல்லூரியிலும் சொல்லித்தருவதில்லை. விளைவு, நம்மோடு பழகியவர்களில் சிலரைப் பற்றிய நினைவு வந்த மாத்திரத்தில் மனம் எரிச்சலடைகின்றது.
ஜென் ஞானியிடம் குடும்பஸ்தர் ஒருவர் கேட்டார், “என்னுடைய பழைய வாழ்வு முறையால் எனக்குள்ளும் பல மனக்காயங்கள் உருவாகியிருக்கின்றது, மற்றவர்களுக்குள்ளும் நான் உருவாக்கி வைத்த மனக்கசப்புகள் பல இருக்கின்றது.
இதனால் எல்லோரோடும் ஒட்டி உறவாட முடியவில்லை. மனக்கசப்புகள் மறைய என்ன செய்ய?”
அதற்கு ஜென் ஞானி சிரித்தவாரே “இனிப்பு சாப்பிடுங்கள்” என்றார்.
“இனிப்பு சாப்பிடுவதா! என்னால் பலரும் மனக்கசப்புக்குள்ளாகி இருக்கின்றார்கள் என புலம்பிக்கொண்டிருக்கின்றேன்... அதற்கு வழி கேட்டால், இனிப்பு சாப்பிடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?” என குடும்பஸ்தர் கேட்டதற்கு,
“ஓ! அப்படியா? அப்படியென்றால் அவர்களுக்கும் இனிப்பைக் கொடுங்கள்” என்று சொன்னார்.
இன்னும் குழம்பியவராய், மௌனமாய் பார்த்த குடும்பஸ்தருக்கு ஜென் ஞானி தந்த விளக்கம் தான் உங்களுக்கான தியானம்.
> வீட்டு விசேஷங்களை, சண்டைக்களமாக மாற்றுமளவுக்கு > பிரச்சினைகள் எதிர்பாராதவிதமாய் உருவாவதற்கான காரணம், > மனிதர்கள் மனத்தில் ஏந்தித் திரியும் மனக்கசப்புகள் தான்.
அடிப்படை மனஇயல்பு விதி...
நீங்கள் இனிப்பை எடுத்துக்கொண்டாலே மற்றவர்கள் கசப்பைப் போட்டுவிடுவார்கள்.
மனக்கசப்பு என்பதே இருவரின் மனப்பிடிப்புதான்.
இருவரில் ஒருவர் விட்டால் கூட மனக்கசப்பு கரைந்து காணாமல் போய்விடும்.
மனப்பிடிப்பை விட்டுவிடுங்கள், மனக்கசப்பு குணம் இனிப்பாகும்.
ஆத்ம தியானம்
எவ்வளவு கசப்பாயிருந்தாலும் ஒரு துளி இனிப்பை நாவில் வைத்த மாத்திரத்தில் கசப்பு மறைந்துவிடும்.
நாவைப் போலத்தான் நினைவும்.
முதலில் நீங்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்... தனி அறையில் அமர்ந்து இதைச் செய்யுங்கள். கண்களை மூடி உங்களுக்குள் மனக்கசப்பை உருவாக்கிய நபரை நினைவுக்கு எடுத்துவாருங்கள். உங்களுக்கு மிகவும் இனியவராய் இருக்கும் நபராக அவரை பாவனை செய்யுங்கள்.
இனிய நபராய் பாவனை செய்து அவரை உங்களின் மனத்திரையில் உங்களோடு பழகவிடுங்கள்... அடுத்து நிகழும் மாற்றங்கள் உங்களையே ஆச்சரியத்திற்குள்ளாக்கும். இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் உங்களுக்குள்ளிருக்கும் கசப்பு ஓடிவிடும்.
அடுத்து மனக்கசப்போடு இருப்பவர்களுக்கு இனிப்பைக்கொடுங்கள்... உங்களால் மனக்கசப்புக்குள்ளாகியிருப்பவரின் மிக இனிமைக்குரிய நபராய் உங்களை பாவனை செய்து, பழைய சுவடுகள் கொஞ்சமும் இல்லாமல் இனிமைத்துவமும், நட்பும் பொங்க அவரை அணுகுவதையும், அவரோடு சகஜமாய் பேசுவதையும் பாவனைசெய்யுங்கள்.
பிறகு நேரடியாய் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் தொடர்ந்து சகஜமாய் பழக ஆரம்பியுங்கள். அது இடத்தையே மாற்றிவிடும்.
சகஜத்தன்மை எனும் இனிப்பை அவர்களுக்குத் தாருங்கள். எப்பேர்ப்பட்ட கசப்பையும் இருக்குமிடம் தெரியாமல் அது கரைத்து விடும்.
மீண்டும் மீண்டும் சகஜத்தன்மையை உள்ளேயும், வெளியேயும் எடுத்து வாருங்கள். அது எவ்வளவு மோசமான கசப்பையும் இனிப்பாக்கிவிடும்.
வாழ்வையே அது புதுப்பித்துவிடும். சிரத்தையோடு செய்து பாருங்கள், இந்தத் தியானம் உங்களின் வாழ்வில் இன்னும் அதிசயத்தை மலர்த்தும்.
