வாழ்வே வரப்பிரசாதமாகும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வித்தியாசமான வரம் கேட்டு ஒருவர் என்னிடம் வந்திருந்தார்.
நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர், "நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்றார்.
"எதற்காக?" என்று கேட்டதற்கு,
"என் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள்" என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும், திரும்பக் கேட்டேன், "அய்யா என்ன சொல்கின்றீர்கள், திருமணத்திற்குத்தான் ஆசீர்வதிப்போம். விவாகரத்துக்கு எப்படி ஆசீர்வதிக்க முடியும்?
இப்படி விவாகரத்துக்காக ஆசீர்வதிக்கும்படி கேட்குமளவுக்கு உங்களைத் தூண்டியது எது?"
"இல்லை, இல்லை, உங்களுக்குத் தெரியாது. நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
நீங்கள் எப்படியாவது இந்த விவாகரத்துக்கு ஆசீர்வாதம் பண்ணிடுங்க," என்று கட்டாயப்படுத்தியதைத் தடுத்துக் கேட்டோம்.
"என்னங்கய்யா இப்படிச் சொல்கின்றீர்கள்.
கஷ்டம் என்பது எப்போதும் கொடுக்கல் வாங்கலில் நடைபெறுவதுதான்.
நீங்கள் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல், உங்களின் மனைவியிடமிருந்து மட்டுமே கஷ்டத்தை அனுபவித்திருக்க முடியாது.
உண்மையாய் நடந்தது என்ன? தெளிவாய் சொல்லுங்கள்" என்று கேட்டபோது,
"இதுவரையில் அவள் எனக்குக் கொடுத்த தொந்தரவுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

நீங்கள் எந்தக்
கஷ்டமும்
கொடுக்காமல்,
உங்களின்
மனைவியிடமிருந்து
மட்டுமே கஷ்டத்தை
அனுபவித்திருக்க
முடியாது.
திருமணமான அன்றிலிருந்து எனக்குக் கஷ்டம்தான். திருமணத்தன்று பானைக்குள்ளே மோதிரம் எடுக்கிற விளையாட்டில் மோதிரம் எடுப்பதற்குப் பதில் என் விரலை கிழிச்சிட்டா" என்று மிகுந்த கடுப்போடு பேசியவர்,
மேலும் தொடர்ந்தார், "இதையெல்லாம் விடுங்க இன்று காலை டேபிளில் வைக்கிறேன்னு, கொதிக்க கொதிக்க என் மேல் காஃபியை சிந்திட்டா..." என்று நொந்துபோன குரலில் சொன்னார்.
அவரிடம் கேட்டோம், "ஏங்கய்யா, யாராவது காஃபி சிந்தியதற்காக விவாகரத்து செய்வார்களா?"
இப்படிக் கேட்டதும் சத்தத்தை உயர்த்திச் சொன்னார், "இப்ப என்மேல் காஃபி ஊத்துவா, நாளைக்கு என் மேல ஆஸிடை ஊத்துவா, இதெல்லாம் சுத்தமா ஒத்துவராது".
அவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். "இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?" என்று!
தவறுதலாகக் காஃபி ஊற்றியதற்கும், ஆஸிட் ஊற்றுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருந்தாலும், அந்தச் சிறு தவறுதலுக்கு அவ்வளவு எரிச்சலும் கோபமும் வந்தது ஏன்?
காரணம், மனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய பதிவேடுகள் (Old memory files).
ஒவ்வொருமுறை நடக்கும் சின்னச் சின்ன வருத்தங்களையும், தவறுதல்களையும் உள்ளுக்குள் அடுக்கி வைத்துக்கொண்டே போகும் போதுதான் அது ஒருவரின் மீது அளவுகடந்த எரிச்சலையும், வெறுப்பையும் உருவாக்கிவிடுகிறது.
இந்த எரிச்சல் மற்றவர்களை எரிப்பதற்கு முன், உங்களைத்தான் எரிக்கும். இதைப் புரிந்து உங்களின் எரிச்சலைத் தணித்தாலே, வாழ்வு சுமுகமாகி விடும்.
ஆஸ்ரமவாசிகளோடு பேசிக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருவர் கேட்டார்,
"எரிச்சல் இல்லாத, இனிமையான வாழ்வு வாழ்வது எப்படி? அதை மட்டும் நம் பிள்ளைகளுக்குத் கற்றுக் கொடுத்து விட்டீர்களென்றால், அவர்களின் வாழ்வில் பெரும்பகுதி நேரத்தையும், சக்தியையும் சேமித்து விடுவார்கள். அவர்களின் வாழ்வே வரப்பிரசாதமாகிவிடும்..."
மூதாட்டிக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கான இந்த தியானம்.
ஆத்ம தியானம்
அருமையான சொற்றொடர் ஒன்று... “மனச்சிக்கல் இல்லாமல் நாள் முடிய வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் நாள் ஆரம்பிக்க வேண்டும்” இது நடந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது.
இரவு உறங்கச் செல்லும் முன்... “இன்று யார் யார் மீது என்னென்ன வருத்தங்கள் உருவானது?” என்று பட்டியலிடுங்கள்.
அதனால் உருவான மனச்சிக்கல்களை அப்பொழுதே அவிழ்த்துவிட்டால் மனம் சீழ்பிடிக்காது. எரிச்சல் எனும் மனக்கசப்பு உருவாகாது.
வருத்தம் உருவாகும் முன் அவரோடு வாழ்ந்த மிக இனிமையான, மிக உயர்ந்த நெருக்கமான நிமிடங்களை மேலெடுத்து வந்து அவரை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்களின் உள்ளத் தில் அவருக்கு இனிமையான இடத்தைத் தந்துவிட்டு நிம்மதியாக உறங்குங்கள்.
உங்களின் நிம்மதியை அடுத்தநாள் அவரோடு மீண்டும் இனிமையாகப் பழகுவதன் மூலமாக நிரந்தரமாக்குங்கள்.
ஒருவேளை, வருத்தத்தை ஏற்படுத்தியவர் புதுநபராக இருந்தால் அவரையும் மன்னித்து விடுங்கள். அவரோடு அடுத்தடுத்து நடக்க இருக்கும் நட்புறவிற்காக அவரை முழுமையாய் மன்னித்து விடுங்கள்.
இதைச் செய்துவிட்டு உறங்கினால் மனச்சிக்கல் உருவாகாது.
அதனால் எதிர்காலத்தில் உருவாகும் வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து முற்றிலும் தப்புவிக்கப்படுவீர்கள்.
ஏற்கனவே, நிறைய மனச்சிக்கல்களும், வாழ்வுச் சிக்கல்களும் பெற்றிருப்பவர்கள்கூட இந்தத் தியானத்தை ஆழமாகச் செய்து, ஒரே முறையில் விடுதலை பெற வைக்கும் வல்லமை படைத்த இத் தியானம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்.