KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நவரசம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நவரசம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களுக்குள்ளும் ஊறும்

அந்த ஞானியை நாடே மதித்தது. காரணம், அந்நாட்டின் ராணி அந்த ஜென் ஞானியின் பக்தை. சிறந்த சிஷ்யை.

துணிகளை உடுத்தாத நாகா பாபாவாக வாழ்ந்த ஜென் ஞானியிடம் இருந்த ஒரேயொரு சொத்து அவரிடம் இருந்த பிச்சைப்பாத்திரம் மட்டுமே.

தன் குருவின் மீது ஆழ்ந்த பக்தியும், அன்பும் கொண்ட ராணி அவரின் நினைவாக அவரிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைப் பெற விரும்பினார்.

பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாதவரிடம் எதைக் கேட்பது என்று யோசித்த ராணி, வைர வைடூரியங்கள் பதித்த தங்கத்தால் ஆன பிச்சைப் பாத்திரத்தை செய்து தன் குருவைப் பார்க்கச் சென்றார்.

ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்திருந்த குருவின் அருகே இருந்த பிச்சைப் பாத்திரத்தைத் தன் நினைவுப் பரிசாக எடுத்துக் கொண்டு, ஜொலி ஜொலிக்கும் தங்கப் பாத்திரத்தை அந்த இடத்தில் வைத்தார் ராணி.

"அடுத்து, கண்களை விழித்ததும் குரு என்ன செய்யப் போகிறார்?"

"இவ்வளவு அழகான பிச்சைப் பாத்திரத்தைப் பார்த்ததும் எவ்வளவு ஆச்சர்யப்படப் போகிறார்?" என்றெல்லாம்

யோசித்தவாறே குருவின் முன்னால் அமர்ந்திருந்த ராணி வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.

காரணம், கண்களைத் திறந்ததும் எப்போதும் சாதாரணமாகத் தன் பிச்சைப் பாத்திரத்தை எப்படி எடுப்பாரோ அப்படி எடுத்தார்? அதில் கஞ்சியை ஊற்றிக் குடித்து விட்டு, அதே இடத்தில் வைத்து விட்டு, "என்னம்மா? நல்லாயிருக்கீங்களா?" என்று விசாரித்தார்.

இவ்வளவு அழகான பாத்திரத்தைப் பார்த்து கொஞ்சமும் வியப்படையாத குருவைப் பார்த்து, ராணி மிகவும் வியப்படைந்தார்.

ஞானிகளுக்குத் தங்கமும் ஒன்றுதான். தகரமும் ஒன்றுதான்.

அவர்களுக்குப் புகழ்ச்சியும் ஒன்றுதான் இகழ்ச்சியும் ஒன்றுதான்.

எதுவும் அவர்களைப் பாதிப்பதேயில்லை... வியப்பும், சிரிப்பும், கண்டிப்பும், கோபமும் அவர்களின் விளையாட்டுகளில் ஒன்றுதானேயன்றி, அவர்களுக்கென்று எந்தவிதத் தனி உணர்ச்சிகளும், பிடிப்புகளும் இல்லை.

"ஞானிகள் ஆனந்தமயமாய், எல்லா சூழல்களிலும் வாழக்கூடியவர்கள். காரணமேயில்லாமல், ஆனந்தமாய் இருக்கும் அவர்களை எந்தவொரு வெளிக்காரணமும் சிறிதும் சலனப்படுத்தாது" என்று எப்போதோ ராணி கேட்ட ஞானக்கருத்திற்கு இன்று நிருபணத்தைப் பார்த்த ராணி மிகவும் ஆனந்தப்பட்டார்.

தான் சிறுவயதில் கேட்ட கதைகள், சத்தியங்கள் சாத்யமானவைதான் என்பது புரியப்பட்டதும், ராணிக்கு ஞானியாகும் ஆசை பிறந்தது. தானும் உயர்ந்த உணர்வு நிலையைத் தொட வேண்டும் என்று தெளிவு பிறந்தது.

இந்த நல்ல ஆசை பிற்காலத்தில் அந்த ராணியை ஞானியாக்கியது.

இந்த நல்ல ஆசை உங்களுக்குள்ளும் பிறக்க அனுமதித்தால், உங்களாலும் மிக உயர்ந்த ஆனந்த வாழ்வை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

ஆத்ம தியானம்

ராணி, காணிக்கையாக்கிய தங்கப் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜென் ஞானி தன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஜொலிக்கும் தங்கப்பாத்திரத்தைப் பார்த்து விட்ட திருடன் ஒருவனுக்குப் பெரும் சந்தோஷம்.

எப்படியும் இன்று இதை இவரிடமிருந்து திருடி விடலாம் என்று அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.

ஞானி வீட்டுக்குள் சென்றதும், வீட்டுக்கு வெளியே இருந்த புதருக்குள் திருடன் ஒளிந்து கொண்டதை அறிந்திருந்த ஞானி மெல்ல புன்னகைத்தார்.

புன்னகைத்த ஞானி, தன் கையில் இருந்த தங்கப்பாத்திரத்தைத் திருடன் இருக்கும் புதர் நோக்கி விட்டெறிந்து விட்டு நிம்மதியாய் உறங்கச் சென்றார்.

தன் மடியிலேயே வந்து விழுந்த தங்கப் பிச்சைப் பாத்திரத்தைப் பார்த்து வியந்த திருடன், “எப்படி இதைத் தூக்கி எறிய முடியும்?” என்று வியந்தவாரே ஞானியைப் பார்க்க வீட்டிற்குள் வந்தபோது, இன்னும் பெரிய வியப்பு காத்திருந்தது.

காரணம், ஞானி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

“இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைத் தூக்கி எறிந்து விட்டு, எப்படி இவரால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது?”

“என் கைக்கே இந்தப் பாத்திரம் வந்த பிறகு கூட எனக்கு நிம்மதி வரவில்லை. எப்படி இவரால் இவ்வளவு நிம்மதியாய் இருக்க முடிகின்றது?” என்று யோசித்தவாரே, ஞானியைப் பார்த்து நின்று கொண்டிருந்த திருடன் வியப்படைந்தான்.

மெல்ல கண்களைத் திறந்த ஞானி, “அப்பா! நீயும் நிம்மதியாகப் படுத்துத் தூங்கப்பா, அப்புறமா எழுந்து போகலாம்” என்றார்.

ஞானியின் ஒவ்வொரு செயலையும் பார்த்து வியந்து கொண்டே சென்ற திருடன் கேட்டான், “இவ்வளவு விலையுயர்ந்த தங்கப் பாத்திரத்தை ஏன் என்னை நோக்கித் தூக்கி எறிந்தீர்கள்?”

“வெளியே தூக்கி எறிந்ததால்தான் நீ உள்ளே வந்திருக்கிறாய், உன்னோடு என்னால் பேச முடிந்தது.

ஒருவேளை இங்கேயே வைத்திருந்தால், நான் தூங்கிய பிறகு இதை நீ எடுத்துச் சென்றிருப்பாய்... நாம் பழகுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது” என்றார்.

தொடர்ந்து, ஞானியிடம் பேசிக் கொண்டேயிருந்த திருடனின் மனம் மலர ஆரம்பித்தது.

கடைசியாய் திருடன் கேட்டான், “நான் ஒரு திருடன். என் தொழில் அப்படி. நான் என்ன செய்ய? என் தொழிலை விட்டுவிடவா?”

ஞானி சொன்னார், “தொடர்ந்து திருடு,” என்றார்.

“தொடர்ந்து திருடுவதா? அச்சோ அது தவறில்லையா?” என்று திருடன் கேட்டதற்கு ஞானி சொன்னார்.

“திருடுவதை விழிப்புணர்வோடு செய். திருடுவதற்காக நீ கிளம்புவதிலிருந்து, திருடுவதற்காகச் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் முழு விழிப்புணர்வோடு, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம்தராமல் செய்”

ஞானி சொன்னபடியே தொடர்ந்து திருட ஆரம்பித்த திருடன், மூன்றே நாட்களில் ஞானியைத்தேடி ஓடிவந்தான்.

ஞானியிடம்... “என்ன செய்தீர்கள்! என்னால் திருட முடியவே இல்லை. விழிப்புணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்யச் செய்ய திருடும் எண்ணமே கரைந்து காணாமல் போய் விடுகிறது.”

“உள்ளுக்குள் ஆழ்ந்த அமைதியும், ஆனந்தமும் பொங்க ஆரம்பிக்க, என்னையும் அறியாமல் தியான உணர்வில் ஆழ்ந்து விடுகின்றேன்,”என்று சொல்லி, அவரின் பாதம் பணிந்து வணங்கி, அன்றே அவரின் சீடரானார் அந்தத் திருடன்.

திருட்டுத்தனத்தை ஒழித்த இந்தத் தியானம் எந்தவொரு மனப்பழக்கத்தையும் ஒழிக்க வல்லது. அடிமைத்தனங்களைக் கூட மாற்றும் வல்லமை படைத்தது இந்தத் தியானம்.

1) மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற மன அடிமைத்தனங்களிலிருந்தும்...

2) அதிக உணவு, அதிக உறக்கம், சோம்பல் போன்ற மனப்பழக்கங்களிலிருந்தும்...

ஒருவரை முழுமையாய் விடுவித்து அவரை நல்ல மனிதராய் நவரச மனிதராய் மாற்றும் தன்மை பெற்ற இந்தத் தியானம் திருடனுக்கு ஞானி தந்த தியானம்.

திருடனே மலர்வது சாத்தியமென்றால், ஏற்கனவே பல நல்ல தன்மைகளோடு வாழும் உங்களை நவரச மனிதராக்குவது நிச்சயம் சுலபம்தான். தியானம் செய்து பாருங்கள். நவரசம் உங்களுக்குள் ஊறும்.