கஷ்டங்களும் குறையும்! நஷ்டங்களும் குறையும்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு முறை ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த அன்பரொருவர்,
"எப்படியாவது என்னை இந்தப் பழக்கத்திலிருந்து விடுவித்து விடுங்கள். நான் விரும்பிச் செய்யும் செயலல்ல இது. எப்படி இந்தப் புகைப் பழக்கத்திற்கு இவ்வளவு அடிமையானேன் என்றே புரியவில்லை" என உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னதிலிருந்தே அவருடைய இந்தப் பழக்கத்திற்கு ஏதோ ஒரு ஆழ்மனக் காயம்தான் காரணமாயிருக்கிறது என்பது தெளிவாய்த் தெரிந்ததால், அவருக்கு இந்தப் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றிக் கேட்டோம்.
"என் அருகில் நின்றிருந்த என் நண்பர் புகை பிடித்ததைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட அப்பா, நான்தான் புகைப்பிடிப்பதாக நினைத்து என்னையும், என் தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார். செய்யாததற்கு ஏன் திட்டு வாங்க வேண்டும்? அதைச் செய்தால் என்ன? என்று முடிவு செய்து அன்று மட்டும் ஆறு சிகரெட்டு ஊதித் தள்ளினேன்.
அப்பாவைப் பழிவாங்குவதாய் நினைத்து அன்று இரவு ஆரம்பித்தது, இன்று வரை என்னைப் பழியெடுத்துக் கொண்டிருக்கிறது." என்று சொல்லி முடித்தார்.
எப்படி இவரின் ஒரு மனக்காயம் இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருக்கிறதோ அப்படித்தான் பலருக்குள்ளும் பல குற்ற உணர்ச்சிகள் இருக்கிறது.
மனத்தின் இந்த மூன்று முக்கிய சுபாவங்களைத் தெரிந்துகொண்டால் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தவிர்த்துவிடலாம்.
மன சுபாவம் 1 : இதைச் செய்யாதே என்ற உடனேயே 'இதைச் செய்தாலென்ன?' என்றுதான் நினைக்கும்.
மன சுபாவம் 2 : வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விதிகளை மீறுவது மனதின் சுபாவம்.

மன சுபாவம் 3 : இதைத் தாண்டி, ஒருவேளை
“இதைச் சாப்பிடு, உடம்புக்கு நல்லது இதைச்
செய் புண்ணியம் வரும்” என்று யாராவது
கட்டாயப்படுத்திவிட்டால் அவ்வளவுதான், அது
எவ்வளவு பெரிய தேனா திரவியமாக இருந்தாலும்
அதை எதிர்க்கவே செய்வோம்.
சூதாட்டத்திலிருந்து சுருட்டு பிடிப்பது வரை எதையெதையெல்லாம் செய்யக்கூடாது என சமுதாயத்தில் சொல்கிறார்களோ அதைச் செய்து பார்ப்பதில் ஒரு சுவை சேர்ந்துவிடுகிறது.
போலீஸ் இல்லை என்றால் சிக்னலைத் தாண்ட முயற்சிப்பது, ஆசிரியர் இல்லை என்றால் வகுப்பறையில் கலாட்டா செய்து சந்தோஷப்படுவது போன்றவற்றிலிருந்து கேட்க ஆளில்லை என்றால் வரம்பு மீறி முயற்சிப்பது வரை எல்லாமே விதியை மீறும் மன சுபாவம்தான்.
இந்த மூன்று மன சுபாவத்திற்கும் ஒரே ஒரு ஆணிவேர்தான் இருக்கிறது. அதன் பெயர் குற்ற உணர்ச்சி.
குற்ற உணர்ச்சிகளைக் களைந்தெறிந்தால் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.
குற்ற உணர்ச்சி இருந்தால்தான்... செய்யக்கூடாததைச் செய்வதில் சுகம் கிடைக்கும். கட்டாயப்படுத்துவதை எதிர்க்கத் தோன்றும். விதிகளை மீறத் தோன்றும். ஒருவருக்குள் உருவாகும் இதுபோன்ற கஷ்டங்கள்தான் பல நஷ்டங்களை அவர்களை நோக்கி ஈர்க்கும்.
குற்ற உணர்ச்சிகளைக் குணப்படுத்திவிட்டால்... தேவையில்லாததைச் செய்ய வேண்டாம் என்ற தெளிவு பிறக்கும். கட்டாயப் படுத்தப்பட்டால் கூட அதில் இருக்கும் ‘விதி’ என்றால் அதை மதித்துவிட வேண்டியதுதானே! ஏன் வீண் வம்பு என்ற ஞானம் பிறந்துவிடும்.
இது நடந்தாலே கஷ்டங்களும் குறையும், நஷ்டங்களும் குறையும்.