முழு ஆனந்தத்தை பெறவழி...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜென் ஞானி ஒருவரிடம், “ஒருவரின் முன்னேற்றம், அசுர வளர்ச்சி என்பதெல்லாம் எதைப் பொருத்தது?” என வாலிபர் ஒருவர் கேட்டபோது,
“அது... நீங்கள் குதிரையா? இல்லை எருமையா? இல்லை கழுதையா? என்பதைப் பொருத்தது” என்றார்.
“இவையெல்லாம் ஒருவரின் முன்னேற்றத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்?”
“கழுதையை ஒரு தட்டு தட்டினால் என்ன செய்யும்?”
“பின்னால் எட்டி உதைக்கும்”
“எருமையை ஒரு தட்டு தட்டினால்”
“கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது”
“குதிரையை ஒரு தட்டு தட்டினால்?”
“பிச்சிக்கிட்டு பறக்கும். அசுர வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்”
“அவ்வளவுதான். நீங்களே உங்களின் முதல் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டீர்கள்”.
“என்னது! நானே சொல்லிவிட்டேனா?”
"ஆம். குதிரையாகுங்கள்" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஜென் குரு எழுந்து சென்றுவிட்டார். பின்னாளில் முதல் கேள்வியைக் கேட்ட வாலிபர் ஜென் குருவின் கடைசி வரியை தியானித்ததினாலேயே ஞானமடைந்துவிட்டார் என அந்த ஜென் கதை முடிவடைகிறது.
ஒரு தட்டு தட்டினால் கழுதை பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து ஓடும்.
அதேபோல் யாராவது ஒரு திட்டு திட்டினால் சிலர் மீண்டும் திட்டுவார்கள். இல்லை கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்துவிடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும், கிடைத்த அவமானத்திற்கும் நேர் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப் போல முன்னோக்கிப் பாய்வார்கள்.

உள்ளுலகில்
முன்னேறவும்,
வெளியுலகில்
முன்னேறவும்
சக்தி முன்னோக்கிப்
பாய வேண்டும்.
பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சமமாய் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் முன்னேற்றத்துக்கு பதில் பின்னேற்றம்தான் மிஞ்சும். சக்தி முன்னோக்கி பாயாததால் இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாத்தியம்.
கண்டுகொள்ளாமல் சும்மாயிருப்பதும் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் ஒன்றே. இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக, வெறுமையானதாக தொடருவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவோ அல்லது தன்னைப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக்கொள்வதும் ஒன்றே. இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.
மேற்சொன்ன கருத்துக்கள் உள்ளுலகில் முன்னேறவும், வெளியுலகில் முன்னேறவும் உதவும்.
பிரபல கோடீஸ்வரர் டெகஸ்டர் ஏகா, தன்னுடைய அசுர வளர்ச்சியின் சூத்திரங்களை விளக்கும்போது, "என் சாதனையின் துவக்க காலத்தில் நான் சந்தித்த பல மக்கள் என்னை முரட்டுத்தனமாகவும், கேவலமாகவும் நடத்தினார்கள்..." எனக் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், "இதுபோன்ற சூழல்களில் மனமுடைந்து சோர்வடைந்துவிடாமல் இருப்பதற்கான எண்ணங்களை மட்டுமே மேலெடுத்து மேலெடுத்து வந்து என் இலட்சியத்தை நான் தொட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிடுகிறார்.
"முரட்டுத்தனமாக என்னை மற்றவர்கள் நடத்தும்போது, என்ன செய்யட்டும்" எனக் கேட்ட சீடருக்கு, குரு சொன்ன அருமையான பதில்.
முதலில் அவர்களுக்கு நன்றி சொல்.
அடுத்து அவர்களின் முரட்டுத்தனத்தை தூண்டுமளவுக்கும், அதை வரவேற்குமளவிற்கும் உன்னிடமிருக்கும் குறைகளைக் கண்டுபிடி.
கடைசியாக, கண்டுபிடித்த குறைகளை தூக்கியெறிந்துவிட்டு உற்சாகமாய் முன்னேறு".
நீங்கள் வேகமாக வளர விரும்பினால், முரட்டுத்தனமாக திட்டப்படும் நேரங்களையும், கேவலமாக நடத்தப்படும் நேரங்களையும் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். குதிரையைப்போல் உங்களின் உணர்வானது முன்னோக்கிப் பாயும் உற்சாகமாக மாறிவிட்டால் உங்களின் வளர்ச்சியும் அசுர வளர்ச்சியாகும்.
நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் ஒருவர் சொன்னார். "தியானங்களைச் செய்வதற்கு முன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். முன்கோபியாக வாழ்ந்த நான், தியானத்திற்குப் பிறகு எதற்குமே கோபப்படுவதில்லை. இதனால் சிலர் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள். கோபப்படாமல் வாழ்வது மழுங்கைத்தனமா? என் நிலை சரியானதுதானா?"
அதற்கு சொன்னேன், "உங்களின் நிலை மழுங்கைத்தனமாகாது. கோபம் உங்களைவிட்டே கரைந்துபோகுமளவிற்கு சக்தியைத் தியானமானது பெருக்கியிருக்கிறது.
> நீங்கள் வேகமாக வளர விரும்பினால், முரட்டுத்தனமாக > திட்டப்படும் நேரங்களையும், கேவலமாக நடத்தப்படும் > நேரங்களையும் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்குள் பெருகவேண்டியது பெருகிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்."
இதைக் கேட்டு ஆர்வத்தோடு, "அடுத்து பெருகவேண்டியது என்ன? சொல்லுங்கள்" என அவர் கேட்டபோது சொன்ன பதில்தான் உங்களுக்கான தியானம்.
ஆத்ம தியானம்
பொதுவாக மனிதர்கள் கோபப்படுவதற்கான காரணம் தன்னிடம் இருக்கும் பெரிய குறைகளைக் கண்டுகொள்ளாமல், அடுத்தவர்களின் சிறிய குறைகளை மட்டும் கண்டுகொள்வதுதான்.
சக்தி பின்னோக்கிப் பாயும்போது நிகழ்வதுதான் இது.
அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுகொள்ளப் பயன்படுத்தும் சக்தியை உங்களின் குறைகளைக் கண்டுகொள்ளப் பிரயோகியுங்கள். இதுதான் புத்தி சக்தியை முன்னோக்கிப் பாயவைக்கும்.
சக்தி பெருகியபின் ஒருவருக்குள் பெருகவேண்டியது புத்திதான்.
புத்தி பெருக ஆரம்பித்துவிட்டால், உங்களைத் திருத்திக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும், இன்னொருவரின் குறைகளைச் சுட்டிக்காண்பிப்பதற்கு நேரமே இருக்காது. இன்னொருவரின் திட்டுகூட உங்களைப் பாதிக்காது. அதுகூட பரிசாகவே இருக்கும்.
இன்றிலிருந்து வாழ்வைப் புதிதாய் அணுகுங்கள். இனிவரும் சண்டை சச்சரவில் மற்றவரின் குறை 99% இருந்து, உங்களிடம் இருக்கும் குறை 1%தான் என்றாலும், அதை நினைத்து கோபப்படவேண்டியதில்லை. மாறாக அந்த 1%-ஐ சரிசெய்ய 100% புத்தியையும் உபயோகப்படுத்துங்கள். அதுபோதும் முழு ஆனந்தத்தையும் பெற்றுவிடலாம்.
