முன்னேற்றம் ஒரு இயல்பான நிகழ்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தொழிற்சாலைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த செய்தி ஒவ்வொருவரையும் நிறுத்தி ஒரு துளி யோசிக்க வைத்தது.
அறிவிப்புப் பலகையில்...
“உங்களின் முன்னேற்றத்தை இதுவரை தடுத்துக்கொண்டிருந்தவர் இறந்துவிட்டார். அவருடைய உடல் நம்முடைய கான்பரன்ஸ் ஹாலில் (Conference hall) வைக்கப்பட்டிருக்கிறது. இறுதி அஞ்சலியை அங்கேயே செலுத்தலாம்”
இந்த வாசகத்தைப் படித்து முடித்த ஒவ்வொருவரும், “அது யாராயிருக்கும்? அது யாராயிருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
கான்பரன்ஸ் ஹாலுக்கு வெளியே பெரிய கும்பல் சேர்ந்திருந்தது. எல்லோரும் மௌனமாக வரிசையில் காத்துக் கொண்டிருந்தாலும், ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவித ஆர்வம் பொங்கிக் கொண்டிருந்தது.
“நம்முடைய வளர்ச்சியை இதுவரை தடுத்துக் கொண்டிருந்த அந்த நபர் யாராயிருக்கும்? யாராயிருக்கும்?” என்று ஆர்வத்தோடு எட்டிப்பார்க்க முயற்சித்தார்கள்.
தூரத்தில் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தொழிலாளர்கள் ஒவ்வொருவராக பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகி கடந்து சென்றார்கள்.
பார்த்த ஒவ்வொருவருமே அந்த சவப்பெட்டிக்குள் இருந்தவரை சரியாக இனம் கண்டுகொண்டார்கள் என்பதும், அது அவர்கள் ஒவ்வொருவரையும் பாதிப்பதை விட, உலுக்குகின்றது என்பதையும் தூரத்தில் இருந்து பார்த்த மாத்திரத்திலேயே எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
சவப்பெட்டி, பார்த்த ஒவ்வொருவரையும் உலுக்கியதற்குக் காரணம், அந்த சவப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது ஒரு மனிதரல்ல, அது ஒரு கண்ணாடி!.

உன்னுடைய வளர்ச்சியை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!!
கண்ணாடியில் தங்களைப் பார்த்து நிமிரும் ஒவ்வொருவரையும் இந்த வாசகம் உலுக்கியது.
இவ்வாசகம்...
உன்னுடைய வளர்ச்சியை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!!
பலருக்குத் 'தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தானும் ஒரு மூலக்காரணம்தான்' என்பது புரியாததால்தான் மற்றவர்களைச் சுட்டிக் காட்டி, இவர்களும் வளராமல், அவர்களையும் வளரவிடாமல் நொந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் வளர இன்னொருவர் அவருக்கு உதவ வேண்டிய அவசியமே இல்லை. அவர் அவருக்கே செய்யும் இடைஞ்சல்களை மட்டும் நிறுத்திக் கொண்டாலே வளர்ச்சியானது அசுர வேகத்தில் நடக்க ஆரம்பித்துவிடும்.
அரசர் ஒருவர் ஒரு ஜென் ஞானியைச் சந்தித்து இப்படிக் கேட்டாராம், “என் நாடு வளர நான் என்ன செய்ய வேண்டும்?”
ஜென் ஞானி ஒரு கைப்பிடிக் கற்களை எடுத்துக் கொடுத்து, “சாப்பிடு”, என்றார்.
அரசர் விறுவிறுத்துப் போய், “என்னது இப்படியெல்லாம் சொல்கிறாரே”, என்று அங்கிருந்து ஓடிவந்து விட்டார்.
பின்னாளில் இன்னொரு ஜென் ஞானியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சென்று தன்னுடைய முன் அனுபவத்தைச் சொல்லி அதே கேள்வியைக் கேட்டார். இம்முறை இந்த ஜென் ஞானி இரண்டு கைப்பிடிக் கற்களை எடுத்துக்கொடுத்து "இதைச் சாப்பிடு எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.
அரசர் குழம்பிப் போனவராய் அரண்மனைக்கு வந்து அமைதியாக அமர்ந்து விட்டார். "நாட்டை வளர்ப்பதற்கு வழி கேட்டால் கல்லைச் சாப்பிடு என்கிறார்களே! என்ன வேலை இதெல்லாம்" என யோசித்தவாரே மூன்று கைப்பிடிக் கற்களையும் ஒரே பையில் போட்டுக் கட்டி வைத்தார்.
இன்னும் சில நாள் கழித்து இன்னொரு ஜென் ஞானியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை மிகுந்த பயத்தோடு தன்னுடைய பழைய அனுபவங்களையும் சொல்லி நாட்டை வளர்ப்பதற்கு வழி கேட்டார்.
மூன்றாவதாக சந்தித்த ஜென் ஞானி அவரைப்பார்த்து சிரித்தவாறே இன்னொரு கைப்பிடிக் கற்களை எடுத்ததைப் பார்த்த அரசருக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.
ஜென் ஞானி சிரித்தவரே அரசரைப்பார்த்து சொன்னார் "இரண்டு முறை உங்களுக்கு ஞான சூத்திரம் தரப்பட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா? நீங்களாவது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா? இந்தக் கைப்பிடிக்கற்களை சாப்பிட்டால் எப்படி நாடு வளரும்?"
அதே போலத்தான் "நாடு வளர வேண்டும், நாடு வளர வேண்டும்" என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருப்பது.
எப்படி கற்களை சாப்பிடுவதால் எந்த மாற்றமும் சாத்தியமில்லையோ, அதே போல் தான் நீங்கள் வெறுமனே யோசிப்பதனால் எந்த மாற்றமும் சாத்தியமில்லை.
நேரடியாக வளர்ச்சிக்கான செயல்களில் இறங்காமல் நாட்டை வளர்ப்பது பற்றி பேசிக் கொண்டேயிருப்பது, இந்த கற்களை சாப்பிடுவதற்குச் சமம். யோசிப்பதிலேயே சக்தியை வீணடித்துவிடாதீர்கள். செயல்களில் குதியுங்கள்" என்று முடித்தார்.
நம்முடைய முன்னேற்றத்தைப் பற்றி நூறு மடங்கு பேசுகின்றோம். இருநூறு மடங்கு விவாதிக்கின்றோம். முன்னூறு மடங்கு யோசிக்கின்றோம். ஆனால் ஒரு மடங்கு கூட அதைச் செயல்படுத்துவதில்லை.
முன்னேற்றத்தைச் செயல்படுத்துவதில் முன்னேறுங்கள். முன்னேறி விடுவீர்கள்.
ஆத்ம தியானம்
LBT மாணவரொருவர் "எவ்வளவு முயன்றும் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஏன்? எப்படித் தோல்வியடைகின்றேன். எதனால் தோல்வியடைகின்றேன் என்று தெரியவில்லை. எதனால் தொடர்ந்து முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது? எது மூலக்காரணமாக இருக்கும்?" என்று என்னிடம் கேட்டார்.
அதற்கு அப்போதளித்த பதில் தான் முன்னேற்றத்திற்கான இந்த வார தியானம்.
வளர்ச்சி தியானம்
தன்னுடைய நிறைகளையும், மற்றொருவருடைய குறைகளையும் தேடிக் கண்டுபிடிப்பதே மனதின் வேலை. இதற்கு சக்தி பாய்ந்தால் முன்னேற்றம் கேள்விக்குறியாகும்.
இதை மாற்றி, சக்தியை சரியான முறையில் பாய்ச்சுங்கள். உங்களுடைய குறைகளையும், மற்றொருவருடைய நிறைகளையும் தேடிக் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க நீங்களும் வளர்வீர்கள். மற்றவர்களும் உங்களுக்கு வளர உதவுவார்கள். உங்களுடைய நிறைகளையும், மற்றொருவருடைய குறைகளையும் தேடிக் கண்டுபிடித்து வாழும் பட்சத்தில் அதனுடைய தாக்கத்தோடு நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள், உடை, நடை, பாவனைகள் உங்களையும் வளர விடாது, உங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு மற்றவரையும் முன்வரவிடாது.
முன்னேற்றத்திற்கான ரகசியம், சக்தியை சரியான விதத்தில் பாய்ச்சுவதில்தான் நிர்ணயமாகின்றது.
"சக்தியை சரியான முறையில் பாய்ச்சுங்கள். முன்னேற்றம் இயல்பாய் நிகழும். நிகழ்வு என்பது அனுபவமாகும்."
