KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/பகிர்தல்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

பகிர்தல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

ஒரு ரகசியம்...

நீங்கள் எதை மீண்டும் மீண்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

நீங்களும் அதை நோக்கியேதான் ஈர்க்கப்படுவீர்கள். என்னிடம் பேச ஆரம்பிப்பவர்களில் பலர், "என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களே இருக்க முடியாது" என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், "எனக்கு நடந்த கொடுமை என் எதிரிக்குக் கூட நிகழக்கூடாது" என்று சொல்வார்கள்.

இன்னும் சிலர் அவர்களோடு எத்தனை மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதோ ஒரு துக்ககரமான விஷயத்தையே பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட அன்பர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் சின்னக் கதை...

பேராசிரியர் ஒருவர், ஜென் ஞானி ஒருவரிடம் இப்படிக் கேட்டாராம், "பல மணி நேரங்கள் உங்களிடம் பேசிவிட்டுச் சென்றாலும், சில நிமிடங்களே உங்களோடு பேசிவிட்டுச் சென்றாலும் என் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது.

ஆனால் வீட்டிற்குப் போனதும் மீண்டும் பழையபடியே துக்கம் என்னைத் தொத்திக்கொள்கிறதே, ஏன்? ஆனால் நீங்கள் மட்டும் ஆனந்தமாகவே இருக்கின்றீர்களே! எப்படி?"

அதற்கு சிரித்தபடியே ஜென் ஞானி சொன்னாராம், "நான் உங்களோடு என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் எப்போதும் என்னோடு உங்களின் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றீர்கள். அதுதான் காரணம்."

portrait

தன்னிடமிருக்கும்
ஆனந்தத்தை
மற்றவரிடம்
பகிர்ந்து கொள்ளாத
ஒருவருக்கும், ஒரு
மன நோயாளிக்கும்
எந்த வித்தியாசமும்
இல்லை

அருமையான பழமொழி ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். "பெட்டிக்குள் பூட்டி வைத்த கட்டித்தங்கம்". இப்படி வைத்திருப்பதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.

கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தன்னிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

காரணம் இருவரின் முகமும் துக்கமாயிருக்கும். இருவரின் உணர்வும் துவண்டுபோயிருக்கும். கேலிக் கூத்துக்காகக் கும்மாளமடிப்பதைத் தாண்டி நிஜமாகவே தன்னுடைய ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர ஆரம்பிக்கும் பொழுது அவருக்குள்ளிருக்கும் ஆனந்தத்தின் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது.

அப்படிப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில், அவரின் உள்ளுணர்வானது துவண்டு போக ஆரம்பிக்கும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி, மன நோயாக ஒருநாள் அது வெளிப்படும்.

எல்லா மனநோயாளிகளும் ஆனந்த மயமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களே.

உலகத்தோடு ஆனந்தத்தைப் பகிர்வதை நிறுத்தும் பொழுது உலகத்தில் இருக்கும் துக்கம் உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடும். முடிவு எதிர்பாராத அடியாக இருக்கும். ஒருமுறை பேராசிரியர் ஒருவர் “சேவை என்றால் என்ன?” என்று கேட்டார்.

“பகிர்தல்” என பதிலளித்தேன்.

“பகிர்தல் என்றால்?”

ஆம், உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அல்லது ஆன்மீக சேவை (Spritual service).

உங்களிடமிருக்கும் பெயர், பதவி, ஆள்பலம் போன்றவை மூலமாக உங்களால் என்ன நல்ல காரியத்தை சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ, அதற்காக உங்களின் சமூக பலத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் சமூக சேவை (Social service)

உங்களிடம் உள்ள பொருட்களையும், சொத்துக்களையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வகையில் பகிர்ந்து கொள்வதே செல்வ சேவை (Economical service).

உங்களுடைய அறிவாற்றலை சமூக எழுச்சிக்காகவும், விழிப்புணர்விற்காகவும் பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரை பகிர்ந்து கொள்வதே அறிவுச் சேவை (Intellectual service).

உங்களின் தனிமனித சக்தியை, உலக அமைதிக்கு உதவும் வகையில் தனிநபர் தியானமாகவோ, கூட்டுத்தியானமாகவோ, உழவாரப்பணியாகவோ, சுப வேலைக்கு உதவும் கரங்களாகவோ பகிர்ந்து கொள்வதே தனிமனித சேவை (Individual service)” எனச் சொல்லி முடித்தேன்.

உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த ஐந்து சேவைகளையும் செய்பவர்கள்.

கட்டித்தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால் உங்களைப் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பணக்காரர்களாக வாழ முடியாது.

> உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து > கொண்டால் அது ஆனந்த சேவை அல்லது ஆன்மீக சேவை > (Spritual service).

நிஜமாய் வாழ, வளமாய் வளர, முழுமையாய் செழிக்க உங்களிடம் இருப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆனந்தம் கொழிக்க ஆரம்பிக்கும்.

ஆரோக்கியம் தங்க ஆரம்பிக்கும்.

நிம்மதி முளைக்க ஆரம்பிக்கும்.

ஆத்ம தியானம்

இப்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வெறும் வழிப்போக்கர் கூற்று அல்ல.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய அனுபவக்கீற்று.

பலர் கேட்பதுண்டு, “5000 தியான சிகிச்சையாளர்களை மூன்று வருடத்திற்குள் எப்படி உருவாக்கினீர்கள்?”

அப்போது சொல்வேன், “நான் உருவாக்கினேன் என்று சொல்வதற்கு எனக்கு நேரடியாக எந்தத் தகுதியும் இல்லை.

இறைசக்தி எனக்குள் தந்த ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அன்றிலிருந்து வற்றாத அமுதசுரபியாக என்னுள்ளிருந்து சக்தியானது பொங்கிக்கொண்டே இருக்கிறது. அந்தச் சக்திதான் 5000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியவர் இவர் எனும் தகுதியை எனக்குத் தந்திருக்கிறது,”என்று.

நீங்களும் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.

நீங்களும் மகான் என்று போற்றப்படும் தகுதியைப் பெறுவீர்கள்.

பகிர ஆரம்பியுங்கள்.

தகுதி பெறுவீர்கள்.