வாழ்வு சுபிட்சமாகும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியான சத்சங்கத்தைத் துவங்கிய ஜென் ஞானி முத்தாய்ப்பாய்ச் சொன்ன முதல் மூன்று கருத்துக்கள்...
"உறவுக்காரர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், உணர்வுக்காரர்கள் ஒரு சிலரேனும் இல்லாவிடில் வாழ்வு இருண்டுபோகும்.
இதயத்திலிருந்து பொங்கும் இரத்தம் வேறு.
இதயத்திலிருந்து பொங்கும் உணர்வு வேறு.
இரத்தரீதியான உறவுகளை அதிகரிப்பது சமூக வாழ்வுக்கு நல்லது. உணர்வு ரீதியான உறவுகளை அதிகரிப்பதுதான் சுமுக வாழ்வுக்கு நல்லது..." என்று சொல்லி முடித்ததும்,
"பெற்ற தாய், பெற்ற பிள்ளை, உடன் பிறப்பு, உற்ற உறவுகளைத் தாண்டி, வாழ்வில் புதிதாய் முளைக்கும் உணர்வுரீதியான உறவுகள் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்?" என்று வாழ்க்கையைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்த பண்டிதர் ஒருவர் ஜென் ஞானியின் தியான சொற்பொழிவைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்.
கேட்ட பண்டிதரை ஞானி கேட்டார்.
"உங்களின் மனைவி உறவுக்காரரா? உணர்வுக்காரரா?!!!"
பதில் சொல்லாமல் வியந்தவரிடம்,
"உணர்வின் ஆழத்தைத் தொடும்போதுதான் பெற்ற தாயே உற்ற உறவாக முடியும். உணர்வின் ஆழத்தைத் தொடாத எந்த உறவும் மற்ற உறவாக இருக்க முடியுமேயன்றி, உற்ற உறவாகிவிட முடியாது." எனச் சொன்னார்.
பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட தியான சத்சங்கம் ஒன்றில் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவர்கள் அளித்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது. உங்களையும் ஆச்சரியப்பட வைக்கும்...

உணர்வின்
ஆழத்தைத் தொடாத
எந்த உறவும் மற்ற
உறவாக இருக்க
முடியுமேயன்றி,
உற்ற உறவாகிவிட
முடியாது.
"என்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட உறவினர்களைப் பெற்றிருக்கின்றேன் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்தலாம்." என சொல்லிவிட்டு பார்த்தால் ஒருவர்கூட அந்த பத்தாயிரம் பேரில் கைகளை உயர்த்தவில்லை.
"சரி, என்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட ஒரே ஒருவரையாவது பெற்றிருக்கிறேன்... என்பவர்கள் கைகளை உயர்த்தலாம்." என்று சொன்னபோது நூறு பேருக்குக் குறையாமல் கைகளை உயர்த்தினார்கள்.
பத்தாயிரம் பேருக்கு நூறுபேர் என்றால் 1% மக்கள்தான் தன்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட ஒருவரையாவது பெற்றிருக்கின்றேன் என்ற சிறுதுளி நிம்மதியையாவது பெற்றிருக்கின்றார்கள் என்றால் சமுதாயம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது!?
உள்ளத்தில் நிம்மதி இல்லாமல், இல்லத்தில் நிம்மதி எப்படி வரும்? இல்லத்திலேயே அமைதியும், நிம்மதியும் இல்லாத பட்சத்தில் உலகத்தில் எப்படி அமைதியையும், நிம்மதியையும் கொண்டுவர முடியும்?
சத்சங்கத்தில் நூறுபேர் தங்களின் கைகளை உயர்த்தியவுடன், "என்னை முழுமையாய் புரிந்துகொண்ட ஒருவரையாவது பெற்றிருக்கிறேன் என்பவர்களில்... என்னைப் புரிந்துகொண்ட அந்த நபர் என் நண்பரல்ல, அவர் என்னுடைய இரத்த சம்பந்தமான உறவினர் என்று சொல்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தங்களின் கைகளைக் கீழே போடலாம்." என்ற போது அங்கு ஒன்பது பேர் மட்டுமே கைகளை உயர்த்தியிருந்தார்கள்.
பத்தாயிரத்தில் ஒன்பது பேர் என்றால் 0.1% மக்கள்தான் தன்னைப் புரிந்து கொண்ட ஒரு உறவினரையாவது பெற்றிருக்கின்றார்கள்.
நிலவரம் இப்படியிருந்தால், எந்த நிலையில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கின்றது? ஆழ்ந்து இதைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
தன்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட மனிதர்களின் மத்தியில் வாழ்பவர் சொர்க்கத்தில் வாழ்வார். தன்னை முழுமையாய்ப் புரிந்துகொள்ளாத மனிதர்களோடு சிரித்து, கும்மாளமடித்து, விளையாடும் வாய்ப்பு பெற்ற ஒருவர் சொர்க்கபுரியில் வாழ்ந்தால்கூட அவர் மட்டும் நரக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்.
உறவுக்காரர்கள்கூட உணர்வுக்காரர்களாக மாறினால்தான் வாழ்வு சுபிட்சமாகும்.
வாழ்வு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்... உங்களைச் சுற்றி உணர்வுக்காரர்களை அதிகரியுங்கள் அல்லது உணர்வுக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு உங்களின் வாழ்வை மாற்றி அமையுங்கள். இது நிகழ முதலில் நீங்கள் உணர்வுக்காரராக வேண்டும்.
சத்யம் : 1 ஒருவர் இன்னொருவரை முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பதெல்லாம் நிஜ நிலவரப்படி சாத்தியமே இல்லாத ஒன்று.
சத்யம் : 2 ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அவரால் அவரை முழுமையாய்ப் புரிந்துகொள்ளவே முடியாது. காரணம், மனம் என்பது ஒரு புதிர்.
உறவுக்காரர்கள்கூட உணர்வுக்காரர்களாக மாறினால்தான் வாழ்வு சுபிட்சமாகும்.
சத்யம் : 3
முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பது மனரீதியாகத்தான் சாத்தியமற்ற ஒன்று. ஆனால் புரிந்துகொள்ளுதல் உணர்வுரீதியாக மிக எளிதான ஒன்றே. எனவே ஒருவரை ஒருவர் முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பது நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான்.