KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புதிய இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்ட தினேஷ் தன் மனைவியைப் பார்த்து முகம் மலர்ந்தவராய், "இது என்ன வகையான இனிப்பு? இவ்வளவு இனிமையாக இருக்கின்றதே... இன்னும் கொஞ்சம் கொடு" என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

தன் கணவருக்கு இந்த இனிப்பு மிகவும் பிடித்துப்போகவே அடுத்த நாள் மாலை அவர் வீட்டுக்கு வரும்போது சுடச்சுட அதே இனிப்பைத் தயார் செய்து வைத்திருந்தார்.

சாப்பிட ஏதும் இருக்கிறதா? என தினேஷ் கேட்டதும் அந்த இனிப்பை சிரித்த முகத்தோடு கொண்டு வந்து தந்தார். தனக்குப் பிடித்திருந்த இனிப்பு என்பதினால் தினேஷுக்கும் சந்தோஷம் தாளவில்லை. 'ஆஹா! ஆஹா!' என சொல்லிக்கொண்டே அந்த இனிப்பு முழுவதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தார்.

அதேப்போல் அடுத்த நாள் சாயங்காலமும் அவருக்கு அதே இனிப்பைச்சுடச்சுட பரிமாறினார். இப்போதுகூட தன்கணவர்அந்த இனிப்பை இரசித்து உண்ணும் அழகைக் கண்டு தனக்குள்ளேயே மிகவும் ஆனந்தமடைந்தார்.

என் கணவருக்குத்தான் இந்த இனிப்பின் மீது எவ்வளவு விருப்பம் என்று எண்ணிய மனைவி அடுத்த நாளும் மிக நல்ல பக்குவத்தில் அதே இனிப்பை வைத்திருந்தாள்.

“என்ன சாப்பிட இருக்கு?” என்று கேட்ட கணவரிடம் அழகிய பீங்கான் தட்டில் அந்த இனிப்பை வைத்து “இதோ உங்களுக்குப் பிடித்த இனிப்பு” என்று சொல்லிக் கையில் தந்தார்.

இனிப்பைத் தந்ததுதான் தாமதம். அடுத்து நிகழ்ந்ததை மனைவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தினேஷ், கையில் வாங்கி, இனிப்பைப் பார்த்ததுதான் தாமதம். எதிரே இருந்த சுவரில் படார் எனத் தெறித்து உடையும் அளவிற்கு பீங்கான் தட்டையும் இனிப்பையும் தூக்கி எறிந்தார்.

portrait

ஏன் அவர் அப்படி
நடந்துகொண்டார்?
பிடித்த ஒன்றின்
மீதே வெறுப்பு
வந்தது ஏன்?

அத்தோடு நிறுத்தவில்லை. “என்னைக் கொலை செய்வதென்று முடிவு செய்துவிட்டாயா? இப்படி ஒரே இனிப்பை செய்து வைத்து ஏன் என் உயிரை வாங்குகின்றாய்?” என்று சப்தமிட்டு அறைக்கதவை டமால் என்று உதைத்து திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

மனைவியும் குழந்தைகளும் விக்கித்துப்போய் திகில் பிடித்த கண்களோடு நின்றுகொண்டிருந்தார்கள். “ஏன் அவர் அப்படி நடந்துகொண்டார்? பிடித்த ஒன்றின் மீதே வெறுப்பு வந்தது ஏன்?” என்ற பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் இதேபோன்று ஒரு ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

அந்த ஜென் ஞானிக்கு மருத்துவர் ஆலோசனைப்படி ஒரே விதமான பத்திய உணவை மட்டும்தான் சமைத்து தர வேண்டும். சமையல்காரரும் கடந்த எட்டு வருடங்களாக தான் சமைத்து தரும் உணவின் சுவையும், பத்தியமும் கொஞ்சமும் மாறாமல் ஒரே மாதிரியான உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் சமையல்காரருக்கு பெருத்த சந்தேகம் ஏற்படவே, ஜென் ஞானியிடம் கேட்டார், “இப்படி ஒரே விதமான உணவை எட்டு வருடங்களாக சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றேனே. உங்களுக்கு சலிப்புத் தட்டவேயில்லையா? ஏனென்றால் ஒரே உணவை சமைத்துச் சமைத்து எனக்கு சலிப்பு தட்டியது. அதனால்தான் கேட்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று கேட்டார்.

ஜென் ஞானி சிரித்துக்கொண்டு, "என்னப்பா சொல்கின்றாய்? ஒரே உணவை நான் எடுத்துக்கொண்டிருக்கின்றேனா? அதுவும் எட்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றேனா? நிச்சயம் நான் நேற்று சாப்பிட்ட உணவு வேறு. இன்று சாப்பிட்ட உணவு வேறு. நாளை நான் சாப்பிடப்போகும் உணவு வேறு. ஒவ்வொரு முறையும் புதிதாய் தயாரிக்கப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிடுகின்றேன்.

எனக்கு ஒருமுறைகூட அதே உணவையோ அல்லது பழைய உணவையோ நீ தந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் நான் புது உணவைத்தான் சாப்பிடுகின்றேன். இதில் சலிப்பு தட்ட என்ன இருக்கின்றது? அதுவும் ஒவ்வொரு முறையும் நீ அன்போடு பரிமாறும்பொழுது, ருசி பல மடங்கு அதிகமாகின்றது." என்று சொன்னார்.

முதல் கதையில் மனைவி கண்ணீர் வடித்தார். இரண்டாவது கதையில் சமையல்காரர் கண்ணீர் வடித்தார்.

மனைவி அழுதது எதிர்பாராத அதிர்ச்சியால். சமையல்காரர் அழுதது இன்ப அதிர்ச்சியால்.

மனித மனம், எதனையுமே தொடர்ந்து அனுபவிப்பதற்கு ஒத்துழைக்காது. இந்த ஒத்துழையாமையின் வெளிப்பாடுதான் சலிப்பு.

சலிப்பு வலிப்பை விட மோசமானது.

தொடர்ந்து மூன்று நாட்களாக உற்சாகத்தோடு தொடர்ந்து சாப்பிட்ட அதே கணவர்தான் நான்காவது நாள் எரிந்து விழுந்தார். ஆனால் எட்டு வருடங்களாக ஒரே உணவைச் சாப்பிட்டாலும் ஒவ்வொரு முறையும் ஆனந்தமாகவே அந்த உணவைச் சாப்பிட்டார்.

காரணம் இது அதே உணவுதான் என சுட்டிக்காட்டி சலிப்படைய வைக்கும் மனம் அவரிடம் இல்லை.

> மனித மனம் எதனையுமே தொடர்ந்து அனுபவிப்பதற்கு > ஒத்துழைக்காது. இந்த ஒத்துழையாமையின் வெளிப்பாடுதான் > சலிப்பு.

சலிப்பு இல்லாத நிலையைத் தொடுபவர்தான் தொடர்ந்த களிப்பு நிலையிலேயே இருக்க முடியும்.

அவருக்கு எதுவுமே பழையதாகத் தெரியாது. அவர் வாழும் வீடு அவரோடு வாழும் அதே நபர்கள் ஒவ்வொரு முறையும் உற்சாகத்தையும் களிப்பையும் தருபவர்களாகவே தெரிவார்கள். சலிப்பு இல்லாத நிலையைத் தொடுவதற்கு இந்தச் சிறு தியானத்தைச் செய்தால் போதும். சலிப்பைக் கடந்துவிடுவீர்கள்.

ஆத்ம தியானம்

சலிப்பைக் களிப்பாக்கும் தியானம்

இந்தத் தியானத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்றிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பதாக இருந்தால்கூட, அதை அந்தத் தண்ணீர் பற்றிய பழைய சுவைகளின் நினைவுகளோடு கோர்த்துப்பார்க்காமல், உங்களின் வாழ்க்கையிலேயே முதன்முறையாக தண்ணீரை அருந்தினால் எப்படி அந்தத் தண்ணீரை அருந்துவீர்களோ அப்படி அருந்துங்கள்.

புதிதாய் அணுகுங்கள். புதிதாய் பாருங்கள். புதுமைத் தன்மையை உணருங்கள்.

எதைச் சாப்பிட்டாலும், யாரைச் சந்தித்தாலும், எதைச் செய்தாலும் அதை இப்பொழுதுதான் முதன்முறையாக அணுகும் குதூகல உணர்வோடு அணுக ஆரம்பியுங்கள்.

இதைச் செய்ய ஆரம்பித்த உடனேயே சலிப்பு மறைவதோடு அல்லாமல் களிப்பும் மலர ஆரம்பிக்கும். முதல் சில நாட்களுக்குதான் இந்தத் தியானத்தை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

எதையும் புதுமை உணர்வோடு அணுகும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், வாழ்வின் ஒவ்வொரு துளிக்குள்ளிருக்கும் ஆனந்தத்தையும் பார்த்த மாத்திரத்திலேயே உணர ஆரம்பிப்பீர்கள். அந்த அளவிற்கு உங்களிலிருந்து உற்சாக உணர்வை இந்தத் தியானம் ஊற்றெடுக்க வைக்கும்.

இப்படி ஊற்றெடுக்க ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின் நீங்கள் என்ன செய்தாலும், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், தொடர்ந்து உங்களுக்குள் உற்சாகம் பொங்குவதென்பது தானாய் நிகழ ஆரம்பித்திருக்கும்.

ஒரு பாகமாக உங்களுக்குள் மாறியிருக்கும்.

செய்து பாருங்கள்!

ஆச்சரியங்கள் உங்களுக்காய் காத்திருக்கிறது!