கோடீஸ்வர நிலையையும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தாண்டிய நிலை

கண்கள், "வேண்டாம்" என்று சொக்க சொக்க இரவு நெடுநேரம் வரை 'டிவி' பார்ப்பவர்களுக்கும்,
நாக்கு, "வேண்டாம்" என்று எரிச்சலில் துடிக்கத் துடிக்க காரத்தையும், உறைப்பையும் உடலுக்குள் அளிப்பவர்களுக்கும்,
உடல் "வேண்டாம் போதும்" என்பதை பலமுறை பலவாறு சொன்னாலும் அதை மீறி அதை சுகத்திற்காக அழிப்பவர்களுக்கும் சொல்ல விரும்புவது...
உடல் உன்னதமானது, புலன்கள் புனிதமானவை.
இதைப் புரிந்து கொள்ள உதவும் இனிய சம்பவம் ஒன்றைப் பகிர விரும்புகின்றேன்.
'உடலை விட நீங்கள் உயர்ந்தவர்கள்', என்று வேதாந்தம் சொல்கின்றது. ஆனால் திருமூலர், 'உடல் ஒரு ஆலயம்' எனச் சொல்கிறார்.
இதையெல்லாம் தாண்டி ஜென் தத்துவம், 'நீங்கள் உடலல்ல' எனச் சொல்கின்றது.
இவற்றில் எது சரி?
எப்படி இந்த எல்லா சத்தியங்களையும் பொருத்திப் புரிந்து கொள்வது?
"உண்மையிலேயே 'நான் யார்?' விளக்கமளியுங்கள்", என்று ஆஸ்ரமத்திலிருக்கும் கிரகஸ்தர் ஒருவர் என்னிடம் கேட்டார். அப்போது அவரிடம் சொன்ன பதில்...
"உடலை விட நீங்கள் உயர்ந்தவர்கள் அல்ல. உடலை விட தாழ்ந்தவர் நீங்கள்".
இந்தப் பதிலைக் கேட்டதும், சற்று அதிர்ந்தவராய் நிதானித்துக் கேட்டார், "என்ன சொன்னீர்கள்!"

உடலும்
நானல்ல,
மனமும்
நானல்ல
"அதிர்ச்சியடையாமல் கேட்டால் நீங்கள் உடல் என்னும் மிகப்பெரிய மாயையில் இருந்து விடுபடுவீர்கள்"
"என்னது! உடல் ஒரு பெரிய மாயையா?"
"நீங்கள்தான் மாயை, உடல் மாயை அல்ல"
"நான் மாயை என்றால்?" "ஆம். நீங்கள் மூன்று விதமானவர்கள்
1) "நீங்கள்" என உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்ள உதவும் உடல்.
2) "நீங்கள் இப்படித்தான்" என உங்களுக்கு உங்களையே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் அகங்காரம்.
3) "நீங்கள்" என்ற நிஜம். இன்னும் உங்களாலேயே அடையாளம் காணப்படாமல் இருக்கும் ஆன்மா."
"உடலும் நானல்ல, மனமும் நானல்ல.
நிஜமான 'நான்' இன்னமும் கண்டுபிடிக்கப்படவேயில்லை என்றால்... அப்புறம் நான் நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும் எப்படி? அது யாரால்?"
"அதுதான் பெரிய விளையாட்டு, வேடிக்கை! இதைப் புரிந்து கொள்ள இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
பலர் இப்படி எல்லாம் சொல்வதுண்டு... "இந்த உடல் என் சொல் பேச்சு கேட்பதில்லை. இந்த உடல் என்னைப் படாத பாடுபடுத்துகின்றது. நான் நினைக்கின்ற வேகத்துக்கு மட்டும் இந்த உடம்பு ஓடினா நிறையவே சாதித்து விடலாம். நான் எவ்வளவுதான் நல்லாயிருக்க முயற்சி செய்தாலும், உடம்பு ஏதாவது ஒரு ஆசையைத் தூண்டி விடுகின்றதே!
இவையெல்லாமே உடல் எனும் உயர்ந்த வஸ்துவின் மீது அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து கட்டி விடும் கதைகள்தான்.
இவையெல்லாமே அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து உடலுக்கு இழைக்கும் துரோகங்களே. உடல் உங்களுக்குத் தரும் தொந்தரவுகள் அல்ல.
உடல் சொல்பேச்சு கேட்பதில்லை எனச் சொல்வது முழுப்பொய்.
மனிதனின் அகங்காரம் இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல்.
ஏற்கனவே நீங்கள் நினைக்கின்ற வேகத்துக்கும், ஆசைப்படும் அளவுக்கும் தன்னைத் தாரைவார்த்து உங்களின் திருப்திக்காகவே உடலானது ஒத்துழைத்தாலும், அதன் மீதே மீண்டும் மீண்டும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ளும் சூழ்ச்சிக்காரன்தான் உங்களின் அகங்காரம்.
தூண்டிவிடுவது அகங்காரம் அதற்கு இரையாவது உடல்.
இன்றைய மனிதர்கள் உடலைத் தாங்கள் என்று நம்பினால்கூட பரவாயில்லை, நல்லதுதான். ஆனால் மனிதர்கள் அகங்காரத்திலிருந்து வெளிப்படும் தூண்டுதல்கள், உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணங்களைத்தான் 'தாங்கள்' என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்காக உடலை அழிக்கின்றார்கள்.
> மனதின் அகங்காரம் இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னால் > முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல். கலியுகத்தில் மனிதர்கள் வாழ்வதில்லை.
அகங்காரங்கள்தான் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது,
நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும் கூட மனிதன் தன் அகங்காரத்திற்குச் செய்யும் சேவைகள்தான். மனிதன் இன்றும் வாழ ஆரம்பிக்கவில்லை. இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டால்தான் இதிலிருந்து விடுபடவே முடியும்", என்று சொல்லி முடித்தேன்.
நிஜமான நீங்கள் (ஆன்மா) உடலைவிட உயர்ந்தவர்தான். அதேநேரத்தில் இன்றைய நீங்கள் (அகங்காரம்) என்பது உடலைவிடத் தாழ்ந்தது.
எவ்வளவு நாள் இப்படியே இருப்பது? உடலைவிட நீங்கள் உயர்ந்தவராவது எப்போது? இதைக் கேளுங்கள் உங்களிடமே! உயர்ந்தவராவீர்கள்.

உடலைத் தீண்டிக் கொண்டேயிருக்கும் சர்ப்பம் அகங்காரம். இதற்கான மருந்து அமிர்தமாய் உங்களுக்கு உள்ளேயே கர்ப்பம் கொண்டிருக்கின்றது. அந்த அமிர்தத்தை உங்களுக்குள் பொங்க வைக்க இந்தத் தியானம் உதவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் தியானத்தை செய்யுங்கள்.
ஆத்மாமிர்தம்
முதல்படி:
தசையால் ஆன சுவராக உங்களின் உடலை பாவனை செய்யுங்கள். தசைச் சுவரால் ஆன மிகப்பெரிய பலூனுக்கு நீங்கள் உணர்வுப் பெருக்காய், ஆனந்த வெற்றிடமாய் இருப்பதை உணருங்கள்.
இரண்டாவது படி:
உணர்வுப் பெருக்காய் இருப்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மீண்டும் மீண்டும் உங்களை உடலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுவித்துக் கொள்வதுதான்.
உணர்வதைத் தொடருங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இந்த உணர்வுப் பெருக்கு அனுபவமாகும். அனுபவங்களைப் படிக்காமல் உணர்வுப் பெருக்கின் மூலத்தை நோக்கி முன்னேறுங்கள், முன்னேறிக் கொண்டேயிருங்கள்.
செல்லும் வழியெல்லாம் கற்பனைக்கும் எட்டாத ஆனந்த அனுபவங்களைக் கடந்து செல்வீர்கள். உள்ளுலக கோடீஸ்வரராவீர்கள்.
உடலிலிருந்து உணர்வு நோக்கி நீங்கள் செய்யும் இப்பயணம் உடலிலிருந்து உங்களைக் கழட்டாது. ஆனால் அகங்காரத்திலிருந்து உங்களைக் கழட்டி விடும். இது நடந்தால் கோடீஸ்வர நிலையைத் தாண்டிய ஈஸ்வர நிலையையே அடைவீர்கள். கோடீஸ்வரர் கூட உடலை அழிக்கத்தான் பணத்தைப் பயன்படுத்துவார். பணம் உயிரை வளர்க்காது.
நிஜத்தில் அகங்காரம்தான் உடலைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. எனவே உடலிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டாலே, அது உங்களை அகங்காரத்திடமிருந்தே விடுவித்து விடும்.
உடலிலிருந்து விடுபடுத்திக் கொள்வதின்மூலம் அகங்காரத்திலிருந்து உங்களை எளிதில் விடுபடுத்திக் கொள்ள முடியும்.
இது நடந்த பின்புதான் நிஜமாகவே நீங்கள் உடலில் தங்க ஆரம்பிப்பீர்கள்.
அதன் பிறகுதான் ஒருவருக்கு உடல் எவ்வளவு மகோன்னதமானது, அது எவ்வளவு உயர்ந்தது, அது எவ்வளவு புனிதமானது? என்ற எல்லா உண்மைகளும் புரிய ஆரம்பிக்கும்.
மொத்தக் கட்டுரையையும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால் நீங்கள் வாழ, உங்களை உடலிலிருந்து விடுபடுத்திக் கொள்ளுங்கள்.
இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
கோடீஸ்வர நிலையையும் தாண்டிய ஈஸ்வர நிலையை அடைவீர்கள்.
