KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தொழில் தர்மத்தை விட விலையுயர்ந்தது வாழ்வியல் தர்மம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தொழில் தர்மத்தை விட விலையுயர்ந்தது வாழ்வியல் தர்மம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

“போலித்தனமாக சிரிப்பவர்களைப் பார்த்தாலே எரிகிறது....

அன்பை ஆயுதமாக்குபவர்களைச் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை....

எப்படியோ பேசிப் பேசி நம் மூலமாக தங்களின் காரியத்தை நடத்திக்கொள்பவர்களை பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. என்ன செய்வது?” என்று தேடும் ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது.

“நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்த ஒரு இடத்திலேயே மிகவும் நேர்மையாக வேலை செய்து கொண்டிருக்கிறேனே, என்ன பெரிதாய் கண்டேன்” என்ற சலிப்போடு அந்த இன்ஜினியர் தன் முதலாளியான பெரிய தொழிலதிபரை அன்று பார்க்கச் சென்றுகொண்டிருந்தார்.

இன்ஜினியர் உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்தோடு வரவேற்ற தொழிலதிபர், அவரின் உடல் நலம், குடும்ப நலம் பற்றியெல்லாம் விசாரித்தார். முதலாளி நன்றாய்தான் பேசினார்.

ஆனாலும், இன்ஜினியருக்கு எல்லாமே போலியாகத் தெரிந்தது. எதிலும் அவருக்கு ஒரு நாட்டமே இல்லாது இருந்தது. எல்லோரிடமும் இருக்கும் குறைகள், அவர்கள் நடிக்கும் நடிப்புகள், காரியத்திற்காக அவர்கள் சிரிக்கும் சிரிப்புகள் என்ற எல்லாமே தெளிவாய் அவருக்குத் தெரிந்ததில், வெறுப்புதான் மிஞ்சியது. தன்னுடைய வெறுப்பின் உச்சத்தை அவரால் வெளியே காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் அவரும் மற்றவர்களைப்போல வெளியே சிரித்து, உள்ளேயிருக்கும் வெறுப்பை மூடி மறைக்க ஆரம்பித்தார். அவரும் நடிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நாள்கூட இந்த வாழ்வு நீடிக்கவில்லை. அவரை மேலும் ஒரு ஆழ்ந்த குழப்பம் கவ்விக் கொண்டது.

உள்ளேயிருக்கும் வெறுப்பை மூடி மறைக்க ஆரம்பிக்கும் மனிதர்கள் வாழ்வை போலித்தனமாய் வாழத் துவங்குகிறார்கள்.

"மற்றவர்களின் நடிப்பெல்லாம் எனக்கு அப்பட்டமாய் தெரிகிறதே!

இப்படித்தானே என் நடிப்பும் அப்பட்டமாய் அவர்களுக்கும் தெரியும்!

ஆஹா! என்ன பைத்தியக்கார சந்தையிது. எல்லோரும் எல்லோருடனும் போட்டிப் போட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே.

இதற்கு விடிவே இல்லையா?" என்று பலவாறு யோசித்தபடியேதான் அன்றும் தன் முதலாலியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தார் அந்த இன்ஜினியர்.

அதனால்தான் அவருடைய முதலாளி வெகு கரிசனத்தோடு அவரை விசாரித்ததுகூட அவருக்குப் போலியாகவே தெரிந்தது.

நலம் விசாரித்து முடித்ததும், இன்ஜினியர் தன்னுடைய வேலை ஓய்வு விண்ணப்பக் கடிதத்தைக் கொடுத்து, தனக்கு ஓய்வு தருமாறு கோரினார்.

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத முதலாளி, முதலில் சற்று அதிர்ச்சி அடைந்தார்.

ஓய்வு கடிதத்தைப் பார்த்து சிரித்த முதலாளி, "இல்லை, இல்லை. உங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஓய்வு தரமுடியாது. உங்களின் வேலையைவிட உங்களின் நட்புதான் எனக்கு மிகவும் முக்கியமானது..." என்று இழுத்துப்பேசி நிறுத்தினார்.

இன்ஜினியருக்கு உள்ளுக்குள் இருந்த வெறுப்பு, இன்னும் கொஞ்சம் அதிகமாகி விட்டது. "என்ன இது? இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படுவதைப்போல் பேசி திரும்ப நம்மை அடிமையாக்கப் பார்க்கின்றாரே! என்ன மனிதர் இவர்?" என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அவரின் ஆழ்ந்த யோசனையைத் தடுத்தது முதலாளியின் குரல். "சரி! நீங்கள் ஓய்வு பெறுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். நான் உங்களின் உணர்வைப் புரிந்து கொள்கிறேன்.

கடைசியாக நீங்கள் இந்த ஒரே ஒரு வேலையை மட்டும் முடித்துக் கொடுத்தால் போதும்" என்றார் முதலாளி.

"என்ன வேலை?" என்று கேட்ட இன்ஜினியரிடம், "என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் அழகாய் ஒரு சிறிய பங்களா ஒன்றைக் கட்டத் திட்டமிட்டிருக்கின்றேன். உங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி இந்த பங்களாவை மூன்று மாதங்களுக்குள் கட்டி முடித்துவிட முடியுமா?" என்று கேட்டு நிறுத்தினார்.

"ம், முடியும்" என்று அமைதியாய்ச் சொல்லி வேலையை ஆரம்பித்தார். விருப்பம் இல்லாமல் கட்ட ஆரம்பித்ததால், அவரால் தன்னுடைய முழு திறமையையும் உபயோகிக்க முடியவில்லை. அவ்வப்போது கட்டுமானப் பணிகளை வந்து பார்த்த முதலாளி "என்னென்ன பொருட்கள் வேண்டுமோ எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். வீடு அமர்க்களமாய் இருக்க வேண்டும்" என்றார்.

ஏதோ முதலாளி தந்த உற்சாகத்தில் கட்டினாலும், அவரிடமிருந்தே உற்சாகம் பொங்காததால் அவரால் முதலாளி எதிர்பார்த்ததைப் போல் கட்டித்தர முடியவில்லை. இதுவரை அவரிடமிருந்து குறையாத அவரது தொழில் தர்மம் இப்போது குறைந்து விட்டது.

> ஒருவரிடமிருந்து உற்சாகம் தானாகப் பொங்கும் போது, திறமைகளும் > நிறைவாய் பொங்கும்

எப்படியோ ஒரு வழியாய் கட்டுமானப் பணிகள் முடிந்து, வீடு கிரகப் பிரவேசத்திற்கு தயாராகிவிட்டது.

அன்று கிரகப்பிரவேசம்....

தொழிலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரும் அன்று ஒன்றாய் சேர்ந்திருந்தார்கள். "இந்த அழகான வீட்டைக் கட்டியவரின் நேர்மையையும், அவரது நட்புள்ளத்தையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்..." என்று ஆரம்பித்து, இன்ஜினியரின் பெருமைகளைப் பேசினார் முதலாளி.

portrait

புரிந்து
கொண்டபின்...
அதே எரிச்சலூட்டிய
வார்த்தைகள்,
ஆனந்தத்
தென்றலாய் வீசும்.

இப்போதும், இன்ஜினியர் வெளியே சிரித்து, "எல்லாம் போலிப் பேச்சு.

இதுவரை நான் செய்த வேலைக்கு தேவையான கூலியைத்தான் தந்தார்.

நான் நேர்மையாக இருந்ததால் தொடர்ந்து வேலைக்கு வைத்துக்கொண்டார். அவ்வளவுதானே!" என்று உள்ளுக்குள் யோசித்துக்கொண்டேயிருந்ததில் அடுத்தடுத்து முதலாளி பேசிய வரிகளைக் கேட்கத் தவறிவிட்டார்.

கடைசியாக மேடைக்கு வரும்படி இன்ஜினியரை அழை த்த முதலாளி சொன்னார், "இவர் கட்டிய இந்த பங்களா, எனக்காகக் கட்டப்பட்ட பங்களா அல்ல. இவரின் நேர்மைக்காகவும், நட்புக்காகவும் நான் தர விரும்பிய அன்புப் பரிசு இது" என்று சொல்லி உணர்வு பொங்க பங்களாவின் சாவிக் கொத்தை இன்ஜினியரிடம் தந்தார் அன்பு முதலாளி.

அந்த நிஜமான அன்பு தந்த அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார். அவரின் உணர்வுக்குள் இனம்புரியாத புது ஆனந்தம் பரவியது. முதல் முறையாக நிஜமாய் சிரித்தார். அதுவரை அவருக்குள் தெரித்த எரிச்சல் மிக்க வார்த்தையே, ஆனந்தத் தென்றலாக அவரை வருட ஆரம்பித்தது.

காரணம், ஒரே வினாடியில் அவர் புரிந்துகொண்ட வார்த்தையின் மகத்துவம்தான்!

அருமையான கதை.

இந்தக் கதையில் வரும் முதலாளி, அருமையான பக்தர். தினமும் தியானம் செய்யும் தியானி.

இன்ஜினியர் ஒரு அறிவாளி. இவ்வளவு பெரிய பங்களாவை இன்ஜினியர் பெற்றது, அவரின் தொழில் நேர்மையால் அல்ல.

முதலாளியின் வாழ்வியல் நேர்மையால் பிறந்த தர்மச் சின்னம் இது.

பக்தியில் பூத்திருந்த முதலாளியிடம் இருந்த உண்மையான உணர்வையும், நட்பையும்கூட இன்ஜினியரின் பகுத்தறிவு ‘நடிப்பு’ என்று குறைத்துப் பார்த்ததுதான் பகுத்தறிவின் குறைபாடு.

வாழ்வியல் தர்மம் தெரியாததால் வாழ்வே தலைகீழாகிவிட்டது. இன்ஜினியருக்கு தொழில் தர்மம் தெரிந்திருந்தது.

ஆனால் தன் முதலாளிக்குத் தெரிந்திருந்த வாழ்வியல் தர்மம் அவருக்குத் தெரியவில்லை.

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம்.

வாழ்வியல் தர்மம் தெரியாவிட்டால், வாழ்வே வனாந்திரமாகிவிடும். எல்லாமே போலியாகவும், நடிப்பாகவும் தெரியும். வாழ்வியல் தர்மம் தெரிந்தால் வாழ்வே வசந்தமாகிவிடும். யாரும் எரிச்சலூட்ட மாட்டார்கள். நம்மை வருடிச் செல்லும் இனிய ஜீவன்களாகி விடுவார்கள்.

ஆத்ம தியானம்

வாழ்க்கை தர்மத்தை வாழ்வது தியான வாழ்வு.

இந்தியா காலங்காலமாக எல்லா வளங்களிலும் செழித்த நாடாக இருந்ததற்கான காரணம், வாழ்க்கைத் தர்மத்தை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருந்ததுதான். நடுவில் தேசமே ஆட்டங்கண்டது, நம்மீது மற்றவர்கள் படையெடுத்ததாலோ அல்லது நம்மைச் சுரண்டியதாலோ அல்ல. வாழ்க்கைத் தர்மத்தை ஒவ்வொரு குடிமகனும் அறியும் வாய்ப்பை இழந்ததால்தான்.

"இதுதான் வாழ்வியல் தர்மம்" என்று ஒரு கட்டுரைக்குள் சொல்லிவிட முடியாது.

சுருக்கமாகச் சொல்ல முயற்சித்தால்...

வாழ்வியல் தர்மம் என்பது இதுதான்...

"தொழில்ரீதியான நேர்மையோ அல்லது சமுதாயரீதியான நேர்மையோ மட்டும் ஒருவருக்குப் போதாது. வாழ்வியல் ரீதியான நேர்மையும் வேண்டும்."

"பணம் சேர்ப்பதற்காக இன்று எவ்வளவு உழைத்தோம்?" என்று யோசிப்பதைவிட, "இந்த உலகச் சிக்கல்களில் இருந்து, பூரண விடுதலையைத் தரும் ஜீவன் முக்தியை அடைவதற்காக இன்று எவ்வளவு உழைத்தோம்" என்று யோசிக்க வேண்டும்.

"யாருக்கும் துன்பம் தராமல் இருக்கும் வகையில் இன்று வாழ்ந்தோமா?" என்று ஆராய்வதோடு, "நம் ஜீவனுக்கு துக்கம் சேராமல் இருக்கும் வகையில் இன்று வாழ்ந்தோமா?" என்று ஆராய வேண்டும்.

"அவர் என்னை சரியாகப் புரிந்துகொண்டவரா?, "இவர் என்னை சரியாகப் புரிந்துகொண்டவரா?" என்று உருகுவதைவிட, என்னை மீறிய எல்லாம் வல்ல சக்தியை புரிந்துகொண்டேனா?" என்று உருக வேண்டும்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்.....

உங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிற்காகவும் செலவு செய்யும் உணர்வுக்கும், நேரத்திற்கும் இணையான உணர்வையும், நேரத்தையும், உங்களின் ஜீவனுக்காக, உங்களின் ஜீவன் முக்திக்காக, உங்களின் வாழ்வுக்காக செலவு செய்ய வேண்டும்.