நிம்மதியின் சூட்சுமம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு ஜென் ஞானியிடம் தொழிலதிபர் ஒருவர் கேட்டார், "என்னால் ஏன் இன்னும் ஒரு பெரிய மனிதராக மாறுவதற்கு முடியவே இல்லை?"
ஜென் ஞானி பதிலளித்தார், "காரணம் நீ சிறியவனாக இருப்பதால்"
"48 வயதான நான் எப்படி சிறியவனாக இருக்க முடியும்?"
அதற்கு ஜென் ஞானி அழகாக பதிலளித்தார், "தனக்குள்ளே சிறியவனாக இருக்கும் ஒருவர்தான் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்புவார். தனக்குள் ஏற்கனவே பெரியவனாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார். "
ஆனால் மற்றவர்கள் அவரைப்பற்றி "அவர் பெரியவர், பெருந்தன்மை படைத்தவர்" என்று குறிப்பிடுவார்கள்" என சொன்ன ஜென் ஞானி மேலும் தொடர்ந்து "பெரியாளாக காட்டிக் கொள்ளும் முயற்சியை நிறுத்துங்கள். அப்புறம் நீங்கள் பெரியாளாகவே இருப்பீர்கள்" என்ற இந்த வரிகளைச் சொல்லி முடித்தார்.
வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில், ஞானியிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவருடைய மனத்தின் ஒவ்வொரு தோல்களையும் உரித்துக் கொண்டிருந்தது. உரிக்க, உரிக்க ஒன்றுமில்லாதவாறு வெங்காயம் போல அவரின் உள்காயங்கள் மறைந்து போக ஆரம்பித்தது.
"அடச்சே! என்ன இது? என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு பேச்சும் ஏதோவொரு வகையில் என்னிடமில்லாத பெருமைகளைக் காட்டிக் கொள்வதாகவே இருக்கிறதே" என தன்னை நினைத்து தனக்குள் தானே சிரித்தபடி வீடு சேர்ந்தார். இப்படி அவர் பார்க்கப் பார்க்க அவருக்குள் ஆழமான மாற்றங்கள் தன்னால் நிகழ ஆரம்பித்துவிட்டது.
ஞானியின் வார்த்தைகளை மிக ஆழமாக அவர் உள்ளே வாங்கிக் கொண்டதினால், அந்த வார்த்தைகள் மந்திரமாகி அவரை உருக்க ஆரம்பித்தது. வெளிநோக்கியே சக்தி வீணாகிக் கொண்டிருந்தது. அந்தக் கணம் முதல் உள்நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டது.
குருவிடமிருந்து பெற்ற தியானவரிகளை வெறும் அறிவுரையாக நிறுத்தாமல், அனுபவமாக மாற்ற ஆரம்பித்தபோது அவர் அடியோடு மாற ஆரம்பித்து விட்டார், என்ற விஷயம் அவருக்கே அப்போது தெரியாது.
அடுத்த நாள் காலை எழுந்ததும் மூன்று பேரோடு கூட்டு முதலீடு செய்து சேர்ந்து ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்த தன் தொழிற்சாலைக்குச் சென்றார். அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை.
அவரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் மரியாதையோடு பார்த்தார்கள். சிலர் கைகளைக் கூப்பி வணங்கினார்கள் இதையெல்லாம் தாண்டி கான்பரன்ஸ் ஹாலுக்கு (Cofer-ence Hall) சென்று உரையாடலை ஆரம்பித்தபோது இன்னும் ஆச்சரியமடைந்தார்.
எப்போதும் விவாதமாகவோ அல்லது வாக்குவாதமாகவோ செல்லும், அவர்களின் போர்டு மீட்டிங் (Board Meeting) அன்று சில நிமிடங்களிலேயே முடிந்தது.
அவர் நேரடியாக, தான் என்ன சொல்ல விரும்பினாரோ, அதை அவரால் சொல்ல முடிந்தது.
மற்றவர்களாலும் அதை எதிர்க்காமல் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

வெளி நோக்கியே
வீணாகிக்
கொண்டிருக்கும்
சக்தியை
நிறுத்துங்கள். சக்தி
சேமிக்கப்படும்.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் இப்போது அமைதியாக இருந்ததும், எப்போதும் அவரை மட்டம் தட்டுபவர்கள் இப்போது மரியாதை தந்து பேசியதும் அவரை இன்னும் அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னைச் சுற்றி நிகழ்ந்த எல்லா அதிசய மாற்றங்களுக்கான காரணம் புரிந்தது.
இதனால் அவருடைய வாழ்வே மாறிப்போனது... என்ற இக்கதையை LBT மாணவர்களிடம் சொல்லிமுடித்தபோது, "அப்படி நிஜமாகவே அவருக்குள் நிகழ்ந்ததுதான் என்ன?"
"ஒரே இரவில் ஆளே மாறிப்போனது எப்படி?"
"அதுவரை பெரிய ஆளாக ஆக முடியாதவரால் எப்படி திடீரென்று பெரியாளாக முடிந்தது?"
"அதையெல்லாம் விடுங்கள். அவருடைய பார்ட்னர்கள் அப்படியே அவரோடு ஒத்துப்போனது எப்படி?" எனப் பலவிதமாகக் கேள்வி கேட்டவர்களிடம் சொன்ன பதிலை இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.
"ஒருவர் இன்னொருவரை பயந்து நடுங்க வைக்கின்றார் என்றாலே அவர் தனக்குள் ஏதோ ஒரு மூலையில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்."
ஒவ்வொரு மனித உயிரும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எப்போதும் தயாராக இருக்கும்.
நீங்கள் இன்னொருவரை அடித்தால், உடனே உங்களைத் திருப்பி அடிப்பதற்கு அவர் எப்படி தயாராவாரோ அதே போலத்தான் உங்களின் உணர்வுகளின் தாக்கமும் இன்னொருவரின் உணர்வுகளை உசுப்பிவிடும். எதிராளியின் உணர்வு உங்களைத் திருப்பித்தாக்க தயாராகிவிடும்.
நீங்கள் உங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தால்,
> "ஒருவர் இன்னொருவரை பயந்து நடுங்க வைக்கின்றார் என்றாலே அவர் > தனக்குள் ஏதோ ஒரு மூலையில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார் > என்று அர்த்தம்." மற்றவர்களும் தங்களை வெவ்வேறு கோணங்களில் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவே முயற்சி செய்வார்கள்.
அதன் விளைவாகவே எல்லா விதமான மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.
நீங்கள் உங்களிடமிருந்து அமைதியையும், எளிமையையும் வெளிப்படுத்த ஆரம்பித்தால் மற்றவர்களும் அதையே உங்களை நோக்கி வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள்.

உங்களின் மாற்றம்
மற்றவர்களுக்குள்ளும்
மாற்றத்தை
நிகழ்த்திவிடும்.
தொழிலதிபரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதமும் அது தான்.
குருவின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானிக்க தியானிக்க தொழிலதிபருக்குள் அவரின் தனிப்பட்ட முயற்சி இல்லாமலேயே ஆழமாக தியானம் நிகழ ஆரம்பித்து விட்டது. அவரின் இந்தச் செயல், அவரை மிக உயர்ந்த உணர்வுநிலைக்கு எடுத்துச் சென்றது.
அவரின் அந்த மிக உயர்ந்த உணர்வு நிலை
அவரைச் சுற்றி இருந்தவர்களின் உணர்வு
நிலையையும் மிக உயர்ந்த உணர்வு நிலைக்கு
எடுத்துச் சென்றுவிட்டது.
நிம்மதியின் சூட்சுமம் இதுதான்.
"அவரின் மாற்றம்தான் மற்றவர்களின் மாற்றத்தை நிர்ணயித்தது" எனச் சொல்லி முடித்தேன்.
அதேபோல்தான் உங்களுக்கும் சொல்கின்றேன். உங்களை மாற்றுங்கள். சுற்றம் உங்களுக்கேற்றாற்போல தன்னால் மாற ஆரம்பித்துவிடும்.

நிம்மதி தியானம்
நீங்கள் இப்போது எதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, மற்றவர்கள் உங்களிடம் எதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஆராயுங்கள்.
நம்மிடம் இயலாத தன்மைகளை, நம்மிடம் இருக்கும் தன்மைகளாகக் காட்டிக் கொள்வதை நிறுத்தத்திற்குக் கொண்டு வருவதனாலேயே, நம் சம்மந்தப்பட்ட, பல தீர்வுகாண முடியாத வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுபிடித்துவிட முடியும்.
இப்போது உங்களிடம் இருக்கக்கூடிய குழப்பமான “மற்றவர்கள் ஏன் அப்படி இருக்கின்றார்கள்?” என்ற குழப்பத்தை “நான் ஏன் இப்படி இருக்கிறேன்,” என்ற தியான ஆராய்ச்சியாக மாற்றுங்கள். நிம்மதி எனும் குழந்தை உங்கள் இதயத்தில் பிறந்து சிரித்துக் கொண்டிருக்கும்.