வலியின் வேர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிருபர் : வலி
ஜென் ஞானி : போலி!
"ஆ! அம்மா...! தாங்க முடியலையே!!!" என துடி துடிக்க வைக்கும் வலி என்ற ஒன்று இல்லாமலேயே வாழ முடியும்.
ஒவ்வொருவரின் மனமும் சமுதாயத்தில் உலவும் பொய்களாலும், வதந்திகளாலும் வசியம் செய்யப்பட்டிருக்கிறது.
"அங்கே கலவரம்", "ஏதோ வெட்டுக் குத்துச் சண்டை" என்ற செய்தியைக் கேட்டால் போதும், அங்கே கலவரமில்லாவிட்டால்கூட அங்கேயிருப்பவர்களை பீதி பற்றிக் கொள்ளும்.
திக்! திக்! என மனம் அடித்துக் கொள்ளும். காரணம் "கலவரம்" என்ற வார்த்தையால் மனம் வசியமானதுதான். மனக் கலவரமே உங்களைக் கலக்கும்.
அதேபோலத்தான் நீங்கள் வளர்ந்த சமுதாயம் சிறு வயதிலிருந்து உங்களுக்குள் 'வலி' என்ற கருத்தைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
அடிபடும்போதோ, புண்ணாகும்போதோ உடலுக்கு சிறிதளவு தொந்தரவு ஏற்படும். அது நிஜம் தான். ஆனால் 'வலி' என்று இன்று மனிதன் புரிந்து வைத்திருக்குமளவுக்கு அது பெரிதல்ல.
வலி வேறு, வேதனை வேறு.
வலி என்பது சிறு தொந்தரவு மட்டும்.
ஆனால் அதுவே ஒருவரைத் துடித்துடிக்க வைப்பதற்கான வலியல்ல. வலியைப் பற்றி மனதில் Register ஆகி உலவும் வலி பற்றிய கருத்துக்கள்தான் சிறு தொந்தரவுகளைப் பெரிய கஷ்டங்களாக்குகிறது. சாதாரண வலியோடு வேதனை சேருகிறது. அது வலி என்ற கொடுமையான உணர்வாக மாறிவிடுகிறது. போலி வலி நிஜமாகிறது.

வலி வேறு, வேதனை வேறு.
வலி என்பது
சிறு தொந்தரவு
மட்டுமே.
ஞானமடைவதற்குமுன் பரிவராஜகமாய் இந்தியா முழுவதும் பாதயாத்திரையாக சென்றபோது மத்திய பிரதேசத்தில் வலியில்லாமலே வாழும் ஒரு ஆதிவாசிகளின் கிராமத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அந்தக் கிராமத்தின் நடுவே ஒரு வெட்டவெளி. அங்கே அமானுஷ்யமாக ஒரு குடிசை. யாரும் அந்தக் குடிசையின் அருகே செல்வது கூட இல்லை.
"ஏன் இப்படி ஒரு தனி குடிசை இருக்க வேண்டும்?" என சிந்தித்தவாறே பார்த்துக் கொண்டிருந்த போது... அக்குடிசை நோக்கி ஒரு நிறைமாத கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். குடிசைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை.
அரைமணி நேரம் கழித்து அக்குடிசையிலிருந்து ஒரு குழந்தையோடு ஒரு பெண் வெளியே வந்தார்.
"இதென்ன ஆச்சரியம்!? காலையிலிருந்து இங்குதான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அரை மணி நேரத்திற்கு முன்பு சென்ற கர்ப்பிணியைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவேயில்லை.
கைக்குழந்தையை வெளியே எடுத்துச் செல்லும் இந்தப் பெண் யார்? இவர் எப்படி உள்ளே நுழைந்தார்?" என சிந்தித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு கர்ப்பிணி அதே குடிசை நோக்கி வந்தார்.
"ஏற்கனவே அந்தச் சிறு குடிசைக்குள் சென்ற கர்ப்பிணிப் பெண் வரவில்லை. இப்போது புதிதாய் இன்னொரு கர்ப்பிணி! இவருக்கு இச்சிறு குடிசைக்குள் இடமிருக்காதே!? எதற்காகச் செல்கிறார்?
இதென்ன மாய குடிசை...?
உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. ஆனால் புதிதாய் ஒருவர் வெளியே வந்தாரே...' என ஓடிக்கொண்டிருந்த எண்ணத்தை கலைக்கும் வகையில் மீண்டும் அதே குடிசையிலிருந்து ஒரு குழந்தையோடு இன்னொரு பெண் வெளியே வந்தார்.
இதற்கப்புறம் இந்த மாய குடிசையைப் பற்றி என்னுள் எழுந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அங்கிருந்த பெரியவர்களிடம் பேசிப்பார்த்தேன்.
அவர்களின் பாஷை எனக்குப் புரியவில்லை. என்னுடைய பாஷை அவர்களுக்கு புரிய வில்லை. கடைசியாக ஒரு பெரியவருக்கு கொஞ்சநஞ்சமாய் ஹிந்தி தெரிந்திருந்தது. அவரிடம் அந்த மாய குடிசையைப் பற்றியும், அங்கு நிகழ்ந்தவை பற்றியும் சொன்னதும், அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
“மாய குடிசையா?” எனச் சிரித்தார்.
“அது மாய குடிசையல்ல, அது பிரசவ குடிசையப்பா”!
“பிரசவ குடிசையா?”
“ஆமாம்பா.."
"என்னங்க நீங்க சொல்வது ஏற்புடையதாகவே இல்லையே. யாருமில்லாத இடத்தில் இருக்கும் ஒரு சிறு குடிசையைப் பிரசவ குடிசை என்கிறீர்களே. அதெப்படி சாத்தியம்?" என ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.
அதற்கு அப்பெரியவர், "இதில் ஆச்சரியப்படுவதற்கு என்னப்பா இருக்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் குழந்தை பிரசவமாகப் போகிறது என்ற உணர்வு கர்ப்பிணிக்குள் எழும். உடனே எழுந்து இந்தக் குடிசை நோக்கி வருவார்கள்.
வலி பற்றிய நம்முடைய கருத்துகள்தான், வேதனையை தருகிறது. குழந்தை பிரசவமானதும், அவர்களே குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள்.
தம்பி நீ சொல்வது போல உள்ளே சென்றதும், வெளியே வந்ததும் வெவ்வேறு ஆட்களல்ல" என்று என் சந்தேகத்தை அவர் தீர்த்து வைத்த பின்புதான், குழப்பமே உருவானது.
"நான் இங்கேயேதான் அமர்ந்திருக்கிறேன். குடிசையிலிருந்து ஒரு சிறு சத்தத்தைக் கூட நான் கேட்க வில்லை. வலியில்லாமல், சத்தமில்லாமல் இருப்பது எப்படி சாத்தியம்?" எனக் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"வலியா?! சத்தமா?! பிரசவம் என்ற இயற்கையான ஒரு நிகழ்வுக்கு ஏனப்பா இந்தக் கஷ்டமெல்லாம். அது ஒரு சுபநிகழ்வு தானே" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து சாவகாசமாகச் சென்ற பெரியவரின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள அப்போது முடியவில்லை.
வலியில்லா பிரசவத்தின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவே சில நாட்கள் அங்கு தங்கி, அவர்களிடமிருந்தும் இரகசியங்களை ஆராய்ந்தேன்.
அப்போது கண்டுபிடித்த சில ஆராய்ச்சி முடிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முடிவு 1: வலி என்பது நிச்சயம் ஒரு போலி.
முடிவு 2: மனத்தின் மாயங்களில் ஒன்று வலி.
முடிவு3: நம் மனக்காயங்கள்தான், உடலில் வலிகளை உருவாக்குகின்றன.
தீர்வு: வலியில்லா சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பலன்: அந்தச் சமுதாயம் சொர்க்கமாயிருக்கும், அதில் உங்களின் குழந்தைகள் வாழ்வார்கள்.
ஆத்ம தியானம்
அந்தப் பழங்குடியினர் வாழும் கிராமத்தில் கண்ட இனிமையான விஷயங்களில் ஒன்று... அங்கு பெண்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.
சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு முழுச் சுதந்திரம் தந்து வளர்க்கிறார்கள். உணர்வளவில் அடக்கப்படாமல் வளர்க்கப்படும்போது, மனத்தளவில் காயங்களே இல்லாமல் வளருகிறார்கள்.
வலி இருக்கிறது என்ற ஒன்றே அந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்களின் மனம் வலியால் பின்னப்படவேயில்லை.
“மனக்காயங்கள் இல்லாதவர்களின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்கரங்களான சுவாதிஷ்டானமும், மணிப்பூரகமும் பழுதடையாமல் முழுமையாக மலர்ந்திருக்கும். சக்கரங்கள் என்றால் சக்தி மையங்கள்.
இந்த சக்கரங்கள் நன்றாக இயங்குபவர்களுக்கு இன்றைய பெண்களுக்கு ஏற்படுவது போல வலிகள் ஏற்பட வாய்ப்பேயில்லை” என ஆனந்த யோக மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆனந்த யோகினி ஒருவர் கேட்டார்.
“எங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கிய நிலையை உருவாக்கிக் கொள்ள வழியிருக்கிறதா?”
“இருக்கிறதம்மா. Painless delivery என்பது வேதகால சூத்திரங்களின் படியே சாத்தியமான ஒன்றுதான்.
எடுத்த எடுப்பிலேயே சரிசெய்ய முடியாத அளவிற்கு இன்றைய மனிதர்களின் சுவாதிஸ்டானமும், மணிப்பூரகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்யத்தான் பிரத்யேக தியானங்களைக் கற்றுத் தரும் தியான முகாம்கள் இருக்கின்றன.
ஒன்று நிச்சயம். நீங்களெல்லோரும் ஒன்றுபட்டால், தொடர்ந்து தியானம் செய்தால், நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பிரச்சினை வராமல் சரிசெய்து விடலாம்” என்று சொல்லி முடித்தேன்.
வலியில்லாமல் வாழும் ஒரு சமுதாயத்தில் சில நாள் வாழ்ந்த அனுபவத்திலிருந்து மொத்த சமுதாயத்திற்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.
“தயவுசெய்து யாரும், யாருக்கும் மனக்காயங்களை உருவாக்காதீர்கள். அப்படியே ஏதேனும் மனக்காயம் உருவாகி விட்டால் அதை உடனே குணப்படுத்திக் கொள்ளுங்கள்”
ஏனென்றால் மனக்காயங்கள்தான் வலிகளின் வேர். மனக்காயமற்ற சமுதாயத்தை உருவாக்கி விட்டால், வலிகளே இல்லாத எதிர்காலத்தை உங்கள் வாரிசுகளுக்கு உருவாக்கி விடுவீர்கள்.