உள்ளுலகிலும் வெளியுலகிலும் பொக்கிஷங்களை குவிப்பீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“ஒரு மனிதனுக்கு நிஜமாகவே எவ்வளவு சுதந்திரத்தை இறைவன் தந்திருக்கிறார்! உண்மையாகவே மனிதனுக்கு முழு “சுதந்திரம் இருக்கிறதா’’?
விதி... பாவம்... புண்ணியம்... சொர்க்கம்... நரகம்... என்ற எல்லாவற்றையுமே ஒருவரால் மாற்றியமைக்க முடியுமா?
உள்ளுலக பொக்கிஷமான ஞானத்தை அடைவதும், வெளியுலக செல்வமான பொக்கிஷங்களை அடைவதும் ஒருவரின் சுயமுயற்சிக்கு உட்பட்டதுதானா? இல்லை அப்பாற்பட்டதா? மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்” எனக் கேட்ட பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார்,
‘எழுந்து நில்லுங்கள்’
பெரிய சித்தாந்த விளக்கத்தை எதிர்பார்த்த பேராசிரியருக்கு ஜென் ஞானியின் பதில் முற்றிலும் புதிராயிருந்தது.
புதிரோடு எழுந்து நின்ற பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார், “உங்களின் இரண்டு கால்களில் ஒரு காலை மட்டும் தூக்குங்கள்’
இந்த முறை சொன்ன பதில் பேராசிரியரை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது. "குரு சொல்வதைச் செய்வதே ஞானத்தைத் தந்துவிடும். சிறிய மனத்தை வைத்துக் கொண்டு குருவின் வார்த்தைகளை நம் மனதுக்குள்ளேயே குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கக் கூடாது.
அப்படி செய்தால், அது நேரடியாக வம்பளப்பதைவிட மோசமானது.
குருவாக்கு மனப்போக்கையே மாற்றும். வாழ்க்கைப் போக்கையே திருப்பும்" என்பன போன்ற உயர்ந்த ஞானக்கருத்துக்களை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால் பேராசிரியர் ஆழ்ந்த குழப்பத்திற்கு ஆளாகவில்லை.

குருவாக்கு
மனப்போக்கையே
மாற்றும்.
வியப்போடு குருவைப் பார்த்த பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார்...
"இன்னொரு காலையும் தூக்குங்கள்"
"அதெப்படி முடியும்?' என்றார் வியப்போடு. மீண்டும் ஜென் ஞானி சொன்னார்
"ஏற்கனவே தூக்கச் சொன்னபோது உங்களால் முடிந்த அதே செயல் இப்போது ஏன் முடியவில்லை?'
"நான்தான் ஏற்கனவே ஒரு காலை தூக்கிவிட்டேனே! எப்படி இன்னொரு காலையும் தூக்க முடியும்?'
"பாருங்கள், கொஞ்ச நேரத்திற்கு முன்பு உங்களிடம் இருந்த சுதந்திரம் இப்போது உங்களிடம் இல்லை.
எந்தக் காலை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அசைக்கலாம் என்றிருந்த சுதந்திரம், நீங்கள் ஒரு காலை இயக்கியதுமே போய்விட்டது.
அதேபோலத்தான், உங்களுக்கு முழு சுதந்திரம் எப்போதும் இருக்கிறது. தொடர்ந்து மனம்போன போக்கிலேயே செயல்களை, கர்மங்களை (சம்ஸ்காரங்கள்) செய்ய ஆரம்பிக்கும்போதுதான் சுதந்திரம் குறைகிறது. உங்கள் மனத்தின் வரம்பிற்குரியதாக உங்களின் வாழ்க்கையே சுருங்க ஆரம்பிக்கிறது.
ஒரு காலை தூக்காதவரை ஓடக்கூட இருந்த சுதந்திரம், ஒரு காலை தூக்கியதும் இன்னொரு காலை அசைக்கக் கூட முடியாது என்று மாறிவிட்டது. மீறி அசைத்தால் விழுந்துவிடுவோம் எனும் அளவுக்கு மாறிவிடுவதைத்தான் விதி, பாவம், நரகமாக மனிதர்கள் அனுபவிக்கின்றார்கள். சுதந்திரம் பறிபோனதாக உணர்கின்றார்கள்.
மனம்போனபோக்கில் செய்யும் செயல்களுக்கு முற்றுப்புள்ளிவையுங்கள். உள்ளுலகப் பொக்கிஷங்களையும், வெளியுலகப் பொக்கிஷங்களையும் வேண்டுமான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளும் தன்மையை அடைவீர்கள்,' எனச் சொல்லி முடித்தார்.
மனப்போக்கிலேயே இயங்குவதும், செயல்படுவதும் தமஸ், மந்தம்.
மனத்தை மீறி செயல்படுவது ரஜஸ். விவேகமற்ற வேகம், பரபரப்பு.
மனத்தை கடந்து செயல்படுவது சாத்வீகம், தெய்வ குணம்.
மனப்போக்கிலேயே செயல்படுவதுதான் சம்ஸ்காரங்களாக மாறும். கர்மங்களாகக் குவியும். இவற்றைத்தான் பாவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
மனத்தை மீறி, உங்களின் விருப்பு, வெறுப்புகளுக்குக் கூட இடம் தராமல் ஏதோ ஒன்றிற்காக வெறிகொண்டு செயல்படுவது பெரும்பாலான நேரங்களில் விவேகமற்ற வேகமாகிவிடுகிறது. வாழ்வை நரகமாக்குவது இதுதான்.
மனத்தை கடந்து செயல்படுவதுதான் ஒருவரை சொர்க்கத்தில் வாழ வைக்கிறது. அதையும் தாண்டிய நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மனத்தைக் கடந்து வாழ ஆரம்பியுங்கள். பொக்கிஷங்களைக் குவிக்க ஆரம்பிப்பீர்கள்
> மனப்போக்கிலேயே செயல்படுவதுதான் சம்ஸ்காரங்களாக > மாறும். கர்மங்களாகக் குவியும். இவற்றைத்தான் பாவங்கள் என்று > குறிப்பிடுகிறார்கள்.
ஆத்ம தியானம்
வானில் பறக்கும் பறவைகள் சுவடுகளை ஏற்படுத்துவதேயில்லை. ஆனால் பூமியில் நடக்கும் மிருகங்கள் ஒருமுறை நடந்தாலும் ஆழமான சுவடுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்த நிமிடத்திலிருந்து பறவையாகிவிடுங்கள்.
பறக்க நான்கு படிகள்.
படி 1 : மனம் எனும் நிலத்தில், எண்ணங்கள் எனும் நகங்களை ஊன்றி நடப்பதைக் கடந்து, வாழ ஆரம்பியுங்கள்.
படி 2 : உடலை மந்தமாக்கும் எந்த எண்ணங்களையும் செயல்களாக்காதீர்கள்.
படி 3 : அதேபோல் தேவையற்ற பரபரப்புக்கு உங்களை ஆளாக்கும் எந்த எண்ணங்களையும் செயல்களாக்காதீர்கள்.
படி 4 : குறைந்தது அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்திற்காகவாவது உங்களை உயர்ந்த உணர்வு நிலையில் பறக்க வைக்கும் உணர்வுகளை மட்டும் செயல்களாக்குங்கள். பறக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதற்கப்புறம் செயல்கள் சம்ஸ்காரங்களாகாது. கர்மங்கள் சேராது. மாறாகக் கரைய ஆரம்பித்துவிடும்.
விதி, சதி, பாவம், நரகம் எனும் எந்த ஒரு சுவடும் அதற்கப்புறம் தங்களின் வாழ்வில் ஏற்படாது. அதற்கப்புறம் நீங்கள் என்ன செய்தாலும் அது புண்ணியமாகும்.