எந்தப் பிரச்சனையுமில்லாமல், எந்தக் கஷ்டமுமில்லாமல் வாழலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எப்படியும் பத்து வருடங்கள் கழித்து, இப்போது இருப்பதைவிட உயர்ந்திருக்கப் போகிறீர்கள். வளர்ந்திருக்கப் போகின்றீர்கள்.
பத்து வருடங்களுக்குப்பின் நீங்கள் அதிகரித்துக் கொள்ள இருக்கும் புத்திசாலித்தனத்தையும் தெளிவையும் இப்போதே அதிகரித்துக் கொண்டால் என்ன?
Time management- பற்றிய சொற்பொழிவின்போது என்னிடம் பக்தரொருவர் இப்படிக் கேட்டார், “எத்தனை செமினார்களில் கலந்து கொண்டாலும், எத்தனைப் புத்தகங்கள் படித்தாலும் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் சரியானபடி பயன்படுத்துவது எப்படி என்பது இன்னும்கூட விலையுயர்ந்த கேள்வியாகவே என்னுள் இருக்கின்றது. தியானத்தின் மூலமாக இதற்கு ஒரு நல்ல தீர்வு தர முடியுமா?
அப்போது சொன்ன பதில், “நிச்சயம் முடியும். Time management is nothing but mind management.
டைம் மேனேஜ்மெண்ட் என்பது உங்களின் கடிகாரத்தை மையமாய் கொண்டு செய்யப்பட வேண்டியதல்ல அது மனத்தை மையமாய் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒன்று”.
பக்தர் ஆச்சரியத்தோடு, “அப்படியா?! நேரத்தைக் கையாள, மனத்தைக் கையாள வேண்டுமா?” எனக் கேட்டதற்கு,
'மனம் எப்போதுமே எதிர்காலத்தில் எப்படி எப்படியெல்லாம் நாம் இருக்கலாம்? இருக்கவேண்டும்?' என்று சுகமாய் கனவு கண்டு கொண்டிருக்கும்.
ஆனால், கனவுகண்டபடி நம் வாழ்வு மலர, நாம் என்னென்னவெல்லாம் செய்திருக்க வேண்டும்? என்று ஒருமுறை கூட அது யோசிக்காது.
சுகமாய் கனவு காணும் மனம்,

'பத்துவருடம்
தாண்டிய பிறகு
நிகழப்போவதை
இப்போதே
நிகழ்த்துங்கள்'
இடுப்பை வளைத்து ஒரு வேலைகூட செய்யாது. செய்யவும் விடாது.
எனவேதான் சொல்கிறோம், பத்து வருடங்கள் கழித்து எந்த அளவிற்கு வளர்ந்திருப்பீர்களோ, அந்த அளவிற்கு இப்போதே வளர்ந்து விடுங்கள்.
'பத்துவருடம் தாண்டிய பிறகு நிகழப்போவதை இப்போதே நிகழ்த்துங்கள்', எனும் தியான சூத்திரத்தை இன்னொரு நல்ல கருத்து என்று பட்டம் கட்டி ஒதுக்கி வைத்துவிடாமல், இப்போதே நிகழ்த்த ஆரம்பியுங்கள்...
'என்ன இது! ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் மட்டும் தானா? இதை அதிகரிக்க முடியாதா?' என்று கேட்குமளவுக்கு நேரத்தைச் சரியாய் உபயோகப்படுத்தக் கற்றுக் கொண்டிருப்பீர்கள், என சொல்லி முடித்தோம்.
எதிர்காலத்திலேயே வாழ்வது, மனத்தை வாழ வைக்கும்.
எதிர்காலத்தை நிகழ்காலமாக்குவதுதான், உங்களை வாழ வைக்கும்.
அதேபோல்,
இறந்த காலத்திலேயே வாழ்வதும் மனத்தைத்தான் வாழ வைக்கும்.
இறந்த காலத்தை நிகழ்காலமாக்குவதுதான் உங்களை வாழ வைக்கும்.
“அதெப்படி இறந்தகாலத்தை நிகழ்காலமாக்குவது?” என்று உங்களின் யோசனைக்கான பதில்தான் உங்களுக்கான இந்த ஆத்ம தியானம்.
ஆத்ம தியானம்
‘பத்து நிமிடத்திற்கு முன் நாம் எப்படி இருந்திருக்கக் கூடாது’ என்பதில் இருந்து, ‘பத்து வருடத்துக்கு முன் நாம் எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது’, என்பது வரை நாம் யோசித்துக்கொண்டேயிருக்கும் இதுபோன்ற ஒவ்வொரு யோசனைகளும்தான் நம் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டேயிருக்கின்றன
“எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக்கூடாது” என்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களின் மனத்தில் பெரும் பெரும் அலைகளாக எழும் ஒவ்வொரு முறையும், அதிலிருந்து ‘இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும்’என்று முத்துக்களைக் கொண்ட சிப்பிகளும் வந்துபோகும்.
இன்றிலிருந்து, “எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது” என்று யோசிப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல், “இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும்” என்ற இறந்த கால அனுபவத்தை, தெளிவுகளை நிகழ்காலத்தில் செயலாக்குங்கள். இறந்தகாலம். நிகழ்காலமாகும். வீணான நேரம் பொன்னான நேரமாகும்.
நன்றாய் மிதந்து கொண்டிருக்கும் கப்பலின் அடியில் ஏற்பட்ட ஓட்டைக்குச் சமம், இறந்தகால யோசனைகள். அந்தக் கப்பலின் மீது வந்து மோதும் கடல் புயலுக்குச் சமம், எதிர்கால யோச னைகள்.
உங்களின் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்க்கை எனும் கடலில் வளர்ந்து வரும் ஒவ்வொரு கப்பலுக்குச்சமம். கப்பலின் கீழே ஓட்டையும், மேலே புயலும் மையங்கொண்டிருப்பதால்தான் எந்த உபயோகமுமில்லாமல் ஒவ்வொரு மணித்துளியும் மூழ்கிப்போகின்றது. நேரம் வீணாகின்றது. விரயமாகின்றது.
“இறந்தகாலத்திலும் வாழாதே
எதிர்காலத்திலும் வாழாதே
நிகழ்காலத்தில் வாழ்”
எனும் தியான சூத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாதபடி மனித மனம் சிக்கலாகி விட்டிருக்கின்றது. எனவே, நாகரீக மனிதர்களுக்கான எளிய தியான சூத்திரம் இதுவே...
எதிர்காலத்தை நிகழ்காலமாக்கிவிடுங்கள், இறந்தகாலத்தை நிகழ்காலமாக்கிவிடுங்கள்
நிகழ்காலத்தில் மட்டுமே சுகித்திருப்பீர்கள்.
கட்டுரையை மீண்டும் ஒருமுறை ஆழமாய் படித்துணருங்கள். புத்துணர்வு பெறுங்கள்.
எதிர்காலங்களையும், கனவுகளையும் நிஜமாக்கும்போது, உங்களை அலைக்கழிக்கும் புயல் போன்ற பிரச்சினைகள் அடங்கிவிடும்.
இறந்தகாலங்களையும், அதிலிருந்து கற்ற பாடங்களையும் நிஜமாக்கும்போது, உங்களை மீறி உங்களின் மனத்தைத் துளைக்கும் துக்கங்கள் நின்று விடும்.
இவ்விரண்டும் நிகழ்ந்தால்,
எந்த முயற்சியும் இல்லாமல், எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஆனந்தமயமாய் கடலில் மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப்போல, வாழ்வில் நீங்கள் மிதந்து கொண்டிருப்பீர்கள். ஆனந்தமாகவே இருந்துகொண்டிருப்பீர்கள்.