உங்கள் உலகையே மாற்றலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“என் கணவருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். அதே நேரத்தில் அவர் பல நேரங்களில் என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது உயிரே துடிதுடித்துப் போகுமளவிற்கு சூடான வார்த்தைகள் போட்டுப் பேசிவிடுகிறார்.
என்னதான் என் நல்லதுக்காக அவர் பேசினாலும், அந்தக் கணங்களில் என் இதயமே நொறுங்கிவிடுகிறது.
ஒருபக்கம் அவரின் நேசம். இன்னொரு பக்கம் அவர் செய்யும் நாசம். இந்த இரண்டிற்கும் நடுவில் மாட்டிக் கொண்டுத் தவிக்கிறேன். அவரை மாற்றிக்கொள்ள வழி ஏதும் இருக்கிறதா?” என்று பெண்மணி ஒருவர் நித்யானந்த ஸ்புரண தியானமுகாமில் என்னிடம் கேட்டபோது,
“தமஸீகமாக இல்லாமல் ரஜஸீகமாகத்தானே உங்கள் கணவர் இருக்கின்றார். முதலில் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
உங்கள் கணவரை ரஜஸீகத்திலிருந்து சாத்வீகத்திற்குக் கொண்டுவருவது மிக எளிது.” என்று சொன்னதற்கு,
“அதென்ன தமஸீகம், ரஜஸீகம்?” என வியப்பாகக் கேட்டார்.
“ஓ! அதுவா... தனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிட்டால், 'உலகமே அப்படித்தான் கஷ்டப்படவேண்டும்,' என்று அட்டூழியமாக நடந்துகொள்பவர்கள் தமஸீகமாய் இருப்பவர்கள். கொடூரர்கள்.
தனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிட்டால், 'தன்னைச் சுற்றியிருப்பவர்களும் அதே மாதிரி கஷ்டப்பட்டு வளரவேண்டும்' என்று அராஜகமாய் நடந்துகொள்பவர்கள் ரஜஸீகமாய் இருப்பவர்கள். முரடர்கள்.

மற்றவர்களிடம்
அரவணைப்பாய்
நடந்து கொள்பவர்கள்
சாத்வீகமாய்
இருப்பார்கள்.
தனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிட்டால், 'இன்னொருவருக்கு இதே கஷ்டம் வந்துவிடக்கூடாதே! அப்படி கஷ்டம் வந்துவிடாமலிருக்க வேறு என்னென்ன செய்ய வேண்டும், என்று அரவணைப்பாய் நடந்துகொள்பவர்கள் சாத்வீகமாய் இருப்பார்கள். இனிமையானவர்கள்.” என்று சொன்னேன்.
“என் கணவரை சாத்வீகமாக்க நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். அது எவ்வளவு கஷ்டமானதானாலும் அவரைக் கட்டாயப்படுத்தியாவது மாற்றிவிடுகிறேன்.”
“அட! நீங்களும் அதே தவறைச் செய்ய முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் கஷ்டப்பட்ட மாதிரியே அவரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
முதலில் மனிதாபிமானத்தோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட்டு இந்த சம்பவத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன்.
பட்டுப்பூச்சி ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்திருந்த புது மாணவர்களுக்கு பேராசிரியர் முதல் வகுப்பை எடுத்து முடித்துவிட்டுச் சொன்னார்.
இவ்வளவுநேரம் பட்டுப்பூச்சி வளர்ப்பை அதிகரிப்பதனால் கிடைக்கும் லாபத்தைப் பற்றியும், வளர்ப்புமுறை பற்றியும் தெரிந்துகொண்டீர்கள்.
அடுத்து முக்கியமான பகுதி,
இங்கே பாருங்கள், பட்டுப்புழு அதன் கூட்டிலிருந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறது. எந்தத் தொந்தரவும் அதற்குத் தராமல் அதை உற்றுக் கவனியுங்கள். முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
பேராசிரியர் சென்ற சிலநிமிடங்களில், கூட்டைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்த பட்டுப்புழு மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. புழு படும்வேதனையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சில மாணவர்கள், ‘அதைக் காப்பாற்றலாம்’ என்று முடிவெடுத்தார்கள்.
புழு வெளியேவர அவர்கள் செய்த உதவியில் புழு இறந்துவிட்டது.
அப்போது அங்கே வந்த பேராசிரியர், “ஏன் இது இறந்தது?” என்று கேட்டார்.
பதில் சொல்லத் தயங்கியவர்கள், “நாங்கள் அது வெளியே வருவதற்கு உதவி செய்தோம்,” என்றார்கள்.
கோபம் கொண்ட பேராசிரியர், “என்னப்பா இப்படிச் செய்துவிட்டீர்கள்? தன்கூட்டை விட்டுத் தானே வெளியே வருவதற்கு இந்தப் பட்டுப்புழு எடுக்கும் முயற்சிதான் அதனை வலுவானதாக மாற்றும்.
இது புரியாமல் இப்படியா செய்வீர்கள்?” என்று நொந்துகொண்டார்.
யாராலும் யாரையும் திருத்த முடியாது.
அவரே திருந்த முடிவெடுக்காதவரை நம் திருத்தங்கள் அவரின் வருத்தங்களாகும்.
எவரொருவர் திருந்த முடிவெடுத்துவிட்டாரோ அப்போதே அவர் திருந்த ஆரம்பித்துவிட்டார்.
இதைப் புரிந்துகொண்டாலே சாத்வீகமானவராய் மாற ஆரம்பித்துவிடுவீர்கள்.
உங்களின் சாத்வீகமே உங்களின் மொத்தக் குடும்பத்தையும் சாத்வீகமாக்கப் போதுமானது.
எவரொருவர் திருந்த முடிவெடுத்துவிட்டாரோ அப்போதே அவர் திருந்த ஆரம்பித்துவிட்டார்.
என்ன செய்கின்றோம் என்று புரியாமல், உதவுகின்றோம் என்ற பெயரிலும், திருத்துகின்றோம் என்ற பெயரிலும், வளர்க்கின்றோம் என்ற பெயரிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யும் கொடுமைகள் அதிகமாகிவிட்டன.
மனிதாபிமானம் மிக்க மனிதர்களை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் எனும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
குறைந்த பட்சம் நம் ஒவ்வொருவரின் குடும்பம் மட்டுமாவது மனிதாபிமானத் தோடும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்து வாழும் உயர்ந்த குணத்தோடும் வாழ்வதற்கு நாம் உழைக்கவேண்டும்.
இது நடக்காவிட்டால் வீடு சிறையாகி விடும். நகரம் நரகமாகிவிடும். நாடு சுடுகாடு ஆகிவிடும்.
இது நடந்துவிட்டால் வீடு கோவிலாகும். நகரம் சொர்க்கமாகிவிடும். நாடு நந்தவனமாகிவிடும்.
ஆத்ம தியானம்
ஒருவரின் சாத்வீகம் ஓராயிரம் பேரை சாத்வீகமாக்கிவிடும்.
இன்றிலிருந்து உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு கஷ்டங்களையும் மாற்றிச் சந்தியுங்கள், மாற்றிச் சிந்தியுங்கள். மனிதாபிமானம் தானாய் மலர ஆரம்பிக்கும்.
உங்களுக்கும் ஒரு கஷ்டம் இன்னொருவருக்கு வராமலிருக்க, முடிந்த அளவிற்கு இனிமைத்துவத்தைச் சேர்த்து அவர்களுக்கு உதவ ஆரம்பியுங்கள்....
கஷ்டங்கள் கருணையைப் பொங்கவைக்கும் தருணங்கள்.
உங்களின் சாந்தம் அவர்களையும் சாந்தமாக்கும்.
உங்களின் மாற்றம் அவர்களையே மாற்றும்.
சாத்வீகத்தை உங்களுக்குள் மலர்த்துங்கள்... உங்களின் உலகையே மாற்றிவிடலாம்.