KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உடலை உற்சாகமாகவே வைத்திருக்கலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உடலை உற்சாகமாகவே வைத்திருக்கலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சூஃபி சீடன் : "அடிக்கடி உடல் சோம்பேறித்தனமாகி படுத்துவிடுகிறதே! நம் சொல்படி உடல் கேட்பதேயில்லை. இந்த உடலை எப்படி சமாளிப்பது?

சூஃபி ஞானி : "நம் சொல்படி உடல் கேட்பதில்லை என்பது தவறு, நாம்தான் உடலின் சொல்படி கேட்பதில்லை"

சூஃபி சீடன் : "அப்படியா!" என ஆச்சரியமாய்க் கேட்டார்

சூஃபி ஞானி : "உடல் ஒரு அப்பாவிக் குழந்தை மனம்தான் வில்லன், கள்ளன்...

மனமானது தன் விருப்பப்படி உடலை துஷ்பிரயோகம் செய்வதைத்தான் சந்தோஷம், சுகம் என நம்புகிறோம்.

விளக்கைப் பற்ற வைக்க வீட்டை எரிப்பது போலத்தான், மனமானது தன் ஆசைகளைப் பற்றவைக்க, உடலை (ஐம்புலன்களை) எரிக்கிறது.

மனிதன் எவ்வளவுதான் அதிகமாக ஐம்புலன்களை அழித்தாலும், உடலானது தன்னால் முடிந்த அளவிற்கு மனிதனுக்கு சுகத்தைத்தந்து கொண்டேயிருக்கிறது. இருந்தும் மனிதன் அப்பாவி உடலை கண்டனப்படுத்துவதை நிறுத்துவதேயில்லை.

ஐம்புலன்கள்தான் தன்னைத் தூண்டுவதாக சொல்வதும், உடல்தான் சோம்பிப்படுக்கிறது எனச் சொல்வதும், தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லாத மனம் சொல்லும் கதைகள்.

எனவே, முதலில் மனத்தைச் சமாளியுங்கள்.

portrait of Sadhguru

முதலில் மனதை
சமாளியுங்கள்
உடலானது
ஏற்கனவே
சமாளித்துக்
கொண்டுதான்
இருக்கின்றது.

உடலானது ஏற்கனவே தன்னை சமாளித்துக் கொண்டுதான் இருக்கின்றது" எனச் சொன்னார்.

ஆனந்த யோக மாணவர் ஒருவர், "நாக்குதான் சுவையைத் தேடுகிறது. தோல்தான் சுகத்தைத் தேடுகிறது. கண்கள்தான் இச்சிக்கிறது.

அப்படியென்றால் உடல்தான் நம்மைத் தூண்டுகிறது. நம் மனத்தை ஆட்டுவிக்கிறது. அதை சபலப்பட வைக்கிறது. இப்படிப் பார்த்தால், மனம்தான் அப்பாவியாக தெரிகிறது. உடல்தான் நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகத் தோன்றுகிறது.

நானும் இந்தத் தொந்தரவுகளிலிருந்து வெளிவர விரும்புபவன் தான். தயவு செய்து விளக்கமளியுங்கள்" என கேட்டுக்கொண்டார்.

"நல்ல கேள்வி.

முதலில் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஐம்புலன்கள் என நாம் சொல்வதைத் தான் இந்திரியங்கள் எனக் குறிப்பிடுவார்கள்.

ஆனால், இந்திரியங்கள் ஐந்து அல்ல பத்து"

"பத்து இந்திரியங்களா? இன்னும் ஐந்து இந்திரியங்கள் எவை?"

ஐம்புலன்கள் பஞ்சேந்திரியங்கள் எனப்படும்.

நம்முடைய உடலில் செயல்களைச் செய்யும் உடலின் பகுதிகளுக்குப் பெயர் கர்மேந்திரியங்கள்.

இவை ஐந்து.

அதேபோல் நம் செயல்களைச் செய்வதற்கு காரணமான சக்திகளுக்கு பெயர் ஞானேந்திரியங்கள். இவை ஐந்து.

உதாரணத்திற்கு,

“பேசும்போது நாக்கு கர்மேந்திரியம், சுவைக்கும்போது அதே நாக்கு, ஞானேந்திரியம்”

“இன்னும் விளக்கமாகச் சொல்லுங்களேன்”

“ஒருவர் உங்களை அடித்து உதைத்த பிறகு அவரிடம், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ எனக் கேட்டால், ‘நான் என்ன செய்வேன்? அடித்தது கையல்லவா? உதைத்தது காலல்லவா?’ எனச் சொன்னால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?”

“அதெப்படி ஏற்றுக்கொள்ள முடியும்”

“அதையேதான் நானும் கேட்க விரும்புகின்றேன். நாக்கு சுவைக்க விரும்புகிறது. நாக்குதான் தூண்டுகிறது. எனவே மனம் அப்பாவித்தனமானது என நீங்கள் சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்போது சொல்லுங்கள். தவறு, சாப்பிடுதல் எனும் செயலைச் செய்யும் கர்மேந்திரியமான நாக்கிடம் இருக்கிறதா? இல்லை அந்த நாக்கை மீண்டும் மீண்டும், ‘அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு’ எனத் தூண்டும் மனத்திடம் இருக்கிறதா?”

‘மனத்திடம்தான் இருக்கிறது’.

உடலையோ, ஐம்புலன்களையோ கண்டனப்படுத்தாதீர்கள்.

"எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், உடலையோ, ஐம்புலன்களையோ கண்டனப்படுத்தாதீர்கள்.

அவை ஏற்கனவே உங்களின் ஆசைகளுக்காக தங்களைத் தியாகம் செய்யும் தியாகிகள்."

"தியாகிகளா!"

"ஆம்! நீங்கள் யோகிகளாகாதவரை மனம் எனும் போகி, செய்யும் போக்கிரித்தனங்கள் வெளியே தெரியாது.

மனமெனும் போகியின் கையில் உடலை விட்டுவைத்தால், உடலை அது ரோகியாக மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

யோகியாகுங்கள், உடலை உங்களின் அரவணைப்பிற்குள் எடுத்து வாருங்கள். யோகி தன் அரசாட்சியை ஐம்புலன்களிலிருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்புறம்தான் உடல் எவ்வளவு பெரிய தியாகி என்பது தெரிய ஆரம்பிக்கும்" எனச் சொல்லி முடித்தோம்.

ஆத்ம தியானம்

உடல் ஆரோக்கிய தியானம்

உடலுக்குள் தானியங்கி புத்திசாலித்தனம் (Automatic intelligence) இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுக்கொண்டாலே போதும். அது உங்களுக்குத் தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.

நீங்கள் யோகியாவதற்கான ஒரு இனிய தியானம்.....

சோம்பேறித்தனமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படும் போது இந்தத் தியானம் மாபெரும் மருந்தாக இருக்கும்.

உடலை உங்களுடைய கட்டிலின் மீது உட்கார வையுங்கள். பூஜைக்காக தெய்வ விக்ரகத்தை எப்படி உங்களின் முன் உட்கார வைப்பீர்களோ, அப்படி உட்கார வையுங்கள், உங்கள் உடலை நீங்களே பார்ப்பதாக பாவனை (Visualize) செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளை உடல் முழுமையாகக் கேட்கும்.

"உடலே! எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறாய். அதற்கெல்லாம் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.

உடலே உன்னை நீயே குணப்படுத்திக்கொள். உன் மூலமாக நான் இன்று செய்ய இருக்கும் காரியங்களையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க உதவி செய்” என்று தினமும் காலையில் உடலை ஐந்து நிமிடமாவது ஆராதித்து விட்டு உடலோடு பேசிவிட்டு அந்த நாளுக்குள் நுழையுங்கள். உடல் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்யும்.

தினசரி வாழ்வில் படுத்துக் கொள்ளுமளவுக்கு உடலில் சோர்வோ அல்லது வேறு தொந்தரவுகளோ, வலிகளோ ஏற்படும்போது இந்தத் தியானத்தை செய்யலாம்.

சிறு உற்சாகக் குறைவு ஏற்படும் போதுகூட இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

இந்தத் தியானத்தைச் செய்த உடனேயே, உங்களின் கோரிக்கையைக் கேட்டு உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.

சில நேரங்களில் உடனடி வியர்வையாகவோ, தும்மலாகவோ, கொட்டாவியாகவோ தனக்குள் உருவாக்கியிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைத் தரும் சக்திகளை வெளியேற்றி உங்களைத் தயார்படுத்தும்.

உங்களை உற்சாகமாக்கிவிடும். அப்போது புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பிக்கும்.