KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/முன்னுரைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புது மனிதராய் மாறுவீர்கள்.

"எப்படி?" என்று இந்த வாக்கியத்தை படித்தவுடனே நீங்கள் கேட்டால் அதற்கான பதில்களின் தொகுப்புதான் இப்புத்தகம்.

ஒரு அனாதைக் குழந்தை, அது வளர்ந்தபின் தன் தாய் நேரில் வந்தால்கூட அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அக்குழந்தை தனித்தீவாக மாறியிருக்கலாம்.

ஒரு குழந்தை அனாதையாக இன்று இருக்கிறது என்றாலே, அந்தக் குழந்தையை பெற்றவள் இருந்தே தீருவாள்!

"இந்த பூமியில் இப்படி தவியாய் தவிக்கிறேனே?!" " என்ன விதமான வாழ்க்கை இது???" என்றெல்லாம் நீங்கள் தனியாகத் தவித்துக்கொண்டிருந்தாலே, தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்...

உங்களை பூமிக்கு அனுப்பிய இறைசக்தி நிச்சயமாக இருக்கின்றது, எல்லோருக்கும் ஆறுதல் அளிக்கவல்ல இந்த இறைசக்தியோடு எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியும்.அதன் மூலமாக உங்களின் வாழ்வையே புதுப்பித்துக்கொள்ள முடியும்.

அதற்கு உங்களை தயார் செய்வதே தியானம்.

இவை எல்லாவற்றையும் உங்களை புரிந்து கொள்ள வைப்பதே ஞானம்.

இதுவே, இந்த புத்தகத்தின் சாரம்.

தொட்டதும் இருளை விழுங்கும் வெளிச்சத்தைப் போல படித்ததும் பட்டென அகங்காரத்தை சுட்டெரிக்கும் சக்தி வாய்ந்தது இப்புத்தகம்.

இந்தப் புத்தகத்தை படித்துவிட்டு, "நடைமுறையில் நன்றாக இருக்கிறதா?" என்று சோதித்து வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். நிச்சயம் பிரயோஜனம் உண்டு.

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு நடைமுறைப்படுத்தி, "நன்றாகத்தான் இருக்கிறது" என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுங்கள். அப்போதுதான் அது ஆன்மீகம்.

திறந்த உள்ளத்தோடு படிக்க ஆரம்பியுங்கள். உலக வாழ்க்கையின் உற்சாகக் கதவுகள் திறக்க ஆரம்பிக்கும்.

பக்கங்களைப் புரட்டுங்கள். அவை உங்களைப் புரட்டும்!

ஆழமாய் படியுங்கள்... அவை ஆழமாய் உங்களை பிடித்துக்கொள்ளும்!

படித்தவற்றை நடைமுறைப்படுத்தினால், இப்புத்தகம் புதுசுகம் தரும். புது அகம் படைக்கும். புதுமனிதனாய் மாற்றும். சோதித்துப் பாருங்கள். புதுப் பிறப்பெடுப்பீர்கள்!

ஆனந்தமாக இருங்கள் பரமஹம்ஸ நித்யானந்தர்