KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/உங்களின் வாழ்க்கைப்போக்கை,Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

உங்களின் வாழ்க்கைப்போக்கை,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அது நிர்ணயிக்கக் கூடாது

தீர்ப்பை ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டு விவாதிக்க ஆரம்பித்தால்...

அந்த வழக்கின் போக்கு எப்படியிருக்கும்?

எதிராளியால் ஜெயிக்க முடியுமா?

அவரின் நியாயம்தான் எடுபடுமா... சிந்தியுங்கள்.

ஒரு மனிதரைப் பற்றிய கருத்துக்கணிப்புக்கு நம்மால் வெகு எளிதாக வந்து விட முடிகிறது.

கணவர் பொறுமையற்றவர் என்று முடிவு செய்துவிட்ட மனைவிக்கு, கணவரின் அன்புப் பேச்சுக்கூட நிரந்தரமற்றதாகவும் நடிப்பாகவுமே தெரியும்.

> தீர்ப்பிடல் நிற்க...
>
> வாழ கற்க
> ஆரம்பிப்பீர்கள்!
>
> "நீங்கள் யார் அடுத்த
> ஆளை தீர்ப்பிட!"
>
> என கடவுள் உங்களிடம்
> கேட்டால்...

மனைவி பேராசைக்காரி என்று முடிவு செய்துவிட்ட கணவருக்கு, மனைவியின் அன்புப் பேச்சுக்கூட அடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கான ஒத்திகையாகவே தெரியும்.

எல்லா மனிதர்களைப் பற்றியும் இப்படி ஏதோ ஒரு வகையில் முத்திரை குத்தி, அவர்களை நம் மனதில், ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறோம்.

தீர்ப்பிட தீர்ப்பிட மனிதர்களின் உண்மையான அன்புகூட ஏளனப்படுத்தப்படுகிறது.

நீங்கள் பலமுறை உண்மையாய் நடந்துகொண்டிருந்தும், அது உதாசீனப்படுத்தப்பட்டதைக் கண்டு மனமொடிந்து போயிருப்பீர்களே... அந்த நிமிடங்கள் உருவாகக் காரணம் இப்படிப்பட்ட தீர்ப்பிடல்கள்தான்.

நம்முடைய உரையாடல்களை கவனித்துப் பார்த்தால்...

பல நேரங்களில் நாம் முதலில் சொன்னதைச் சரியென நிரூபிப்பதற்காகவே பல ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போவோம்.

ஒருவேளை வேறொரு கருத்தைச் சொல்லியிருந்தால் அதைச் சுற்றியே நம் பேச்சின் போக்கு செல்லும்.

நீங்கள் பேசும்போது மட்டுமல்லாமல், யோசிக்கும்போதும் தீர்ப்புகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறீர்கள். அவற்றைத் தொடர்ந்தே உங்களின் வாழ்க்கைப் போக்கு திருப்பப்படுகிறது. வாழ்க்கை தடுமாற ஆரம்பிக்கிறது.

உங்களின் வாழ்க்கைப் போக்கை நீங்கள் தீர்மானிப்பதல்ல. அதைத் தீர்மானிப்பது தீர்ப்புகளே!

தீர்ப்புகள் முள்வேலிகள்.

அது மற்றவரையும் குத்தும்.

உங்களையும் சிறைப்படுத்தும்.

முள்வேலிகள் விலகும்வரை உங்களின் சுதந்திரம் பற்றியோ, மற்றவர்களின் நெருக்கம் பற்றியோ யோசிக்கக் கூட முடியாது.

விடிவு கிடைக்க வேண்டுமானால்... தீர்ப்பிடும் குணம் வேரோடு பிடுங்கியெறியப்பட வேண்டும். தீர்ப்பிடும் குணமானது அது உருவாகும்போதே எரிக்கப்பட வேண்டியது.

தீர்ப்பிடும் குணத்தைவிட்டு வாழ ஆரம்பித்துப் பாருங்கள்... சொர்க்கத்துக்கு நடுவில்தான் நீங்கள் குடியிருக்கிறீர்கள் எனும் உண்மை அனுபவமாகும்.!