KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கற்றுக்கொள்ள...Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கற்றுக்கொள்ள...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கற்றுக்கொள்ளுங்கள்!

  • வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டிய பாடங்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
  • வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் - வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் - தியானம்
  • கற்றுக்கொள்ள வேண்டியதை, கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில், கற்றுக்கொள்ளத் தவறியதே, நம் கஷ்டங்களுக்கான காரணகர்த்தா.

முதலில் ஒரு கதை சொல்கிறேன். அபிசித்தானந்தா என்று புகழ்பெற்ற சமயப் பிரச்சாரகர் ஒருவர் இருந்தார். ஆன்மீகச் சொற்பொழிவு என்றாலே அபிசித்தானந்தாதான் என்கிற அளவிற்கு அவர் புகழ் பரவியிருந்தது. இராமாயணத்தையும் பகவத் கீதையையும் பற்றி அவர் பேச ஆரம்பித்தால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆடாமல்,அசையாமல் கேட்பார்கள். அறுபது வயதிற்கு மேல் ஆகிவிட்ட அந்தப் பிரச்சாரகருக்குத் திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

'தாம் பூமியில் எதற்காக வந்து பிறந்தோமோ, அதைச் சரியாக நிறைவேற்றிவிட்டோமா?' என்பதுதான் அவரது சந்தேகம்.

அதையே நினைத்தபடி நிம்மதி இல்லாமல் அலைந்தார் துறவி. மனக் கலக்கத்திற்கு மருந்து தேடி மருத்துவர்கள் முதல் மகாஞானிகள் வரை அனைவரையும் கலந்தாலோசித்தார். ம்ஹும்... அவருக்குப் புரியாததால் பயன் ஒன்றும் இல்லை.

அதே ஊரில் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரும் இருந்தார். அவரைச் சந்தித்துத் தங்கள் குறைகளைப் பலரும் சொல்லிப் பதில் பெற்றுச் செல்வதுண்டு. 'அந்தப் பாதிரியாரைப் போய்ப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்' என்று பிரச்சாரகரிடம் சிலர் கூறினார்கள்.

'பாதிரியார் என்ன சொல்லப் போகிறார்? பைபிள் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்குமாறு கூறுவார். இருந்தாலும் போய்ப் பார்த்துவிடலாம்' என்று கிளம்பினார் பிரச்சாரகர்.

அபிசித்தானந்தா சொன்ன பிரச்சனையை மௌனமாகக் கேட்ட பாதிரியார், கடைசியில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

"நண்பரே. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் இதில் விடை இருக்கிறது. இதைப் படியுங்கள். உங்களை நீங்கள் உணர்வீர்கள்" என்று, அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அவர் கொடுத்த புத்தகம் பைபிள் அல்ல. 'பகவத்கீதை!'

அபிசித்தானந்தாவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. "கடந்த முப்பது ஆண்டு காலமாக பகவத்கீதை பற்றிச் சொற்பொழிவாற்றுவதுதான் என் வேலை. பகவத் கீதையைப் படி என்று என்னிடமே சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.

"முப்பது வருஷமாக நீங்கள் பகவத் கீதை படித்தது உண்மைதான். ஆனால் மற்றவர்களுக்காகத்தான் நீங்கள் கீதையைப் படித்தீர்கள். இப்போது உங்களுக்காகப் படியுங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று அந்த பாதிரியார் பதில் சொன்னபோது, ஆடிப்போனார் அபிசித்தானந்தா. அபிசித்தானந்தா செய்த அதே தவறைத் தான் நீங்களும் பல நேரங்களில் செய்துவிட்டு அல்லல்படுகிறீர்கள்.

வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும் சரி, அற்புதமான நூல்களைப் படிக்கிற போதும் சரி, அது உங்களுக்கு என்ன சொல்கிறது என்று நீங்கள் பார்ப்பதில்லை. உயர்ந்த நூல்களிலிருந்து, அனுபவங்களிலிருந்து கொஞ்ச நஞ்சமேனும் நீங்கள் கிரகித்துக்கொள்கிற விஷயங்களையும் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்வதற்காகவே பயன்படுத்துகிறீர்களே ஒழிய, உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை.

தானம் சிறந்தது என்று சொன்னால் நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள் என்று பார்ப்பதை விட்டு, "பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே, மகா கஞ்சன் ! முருகன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என்று நன்கொடை கேட்டால் பத்து ரூபாய் கொடுத்து கணக்கு முடித்துவிட்டான்" என்று புலம்புபவர்கள்தான் அதிகம்.

இந்த உலகத்தில் நிகழும் எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் அது உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இப்படிக் கற்றுக்கொள்வதன் மூலம்தான் உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப் பெரிய இரகசியங்கள் பொதிந்தது. இந்த உண்மை, நாம் மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும்போது மாத்திரமே தெரியும்.

மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வதுதான் - கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுதல்.

முழுமையாக மதிக்கக் கற்றுக்கொண்ட பிறகு குரு, வேதம், தியானம் அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள். வாழ்வின் இரகசியங்களைக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உலகையும் உறவுகளையும் மதிக்க ஆரம்பியுங்கள். உண்மை புலப்பட ஆரம்பிக்கும்.

| க ற் று க் கொ ள் | கற்றுக்கொள்ள கற்றுக்கொண்ட பிறகு, கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம், வாழ்க்கையைப் பற்றிய இரகசியங்களே! |