சிரிப்பு ஓர் மருந்து
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* சிரிப்பு
உங்களுக்கு மருந்து -
மற்றவர்களுக்கு விருந்து.
* சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும்
- வித்தியாசங்கள் மிகக் குறைவு
* சிரிப்பு உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறி.
உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். யாருக்கு அதிகமாகக் கூட்டம் கூடுகிறது?
சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கும். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு தத்துவமாகப் பொழிந்து தள்ளுகிறவர்களிடமிருந்து பலரும் ஒதுங்கிவிடுவார்கள். எல்லோரும் கவலையை மறந்து சிரிப்பதையே விரும்புகிறார்கள்.
எவ்வளவு முற்போக்கான கருத்தாக இருந்தாலும் சிரிக்கச் சிரிக்கச்சொல்லுகிற போதுதான் அது சாதாரண மக்களையும் சென்றடைகிறது.
ஒரு சாக்கில் அரிசியை அளந்து அளந்து உள்ளே போடுகிறோம். பிறகு அதன் வாய் நிறைந்துவிட்டால், மேற்கொண்டும் ஒரு படியைப் போடுவதற்கு அந்தச் சாக்கு மூட்டையை ஒரு குலுக்குக் குலுக்குவோம்.
அந்த மாதிரி, பேசுகிறவரின் கருத்துக்களால் கேட்கிறவர்கள் நிறைந்து இருந்தால், மேற்கொண்டு அவர்கள் கேட்பதற்குப் பெரும் பேச்சாளர்கள் நகைச்சுவைகளை அள்ளித் தெளிப்பார்கள்.
சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்து விடக்கூடிய சாதாரண விஷயம் அல்ல. சிரிக்கத் தெரியாத சிலர், “அது ஒன்றும் சீரியஸான விஷயம் இல்லை” என்பார்கள். இது தவறு. சிரிப்பைவிட சீரியஸாக எடுத்து அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
நமது கிராமங்களில் நாடகங்கள் நடைபெறும். பாஞ்சாலி சபதம் அதில் பிரபலமானது. ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாஞ்சாலி துகில் உரிதல் காட்சி வந்தது. பாஞ்சாலியாகப் பெண் வேடமிட்டு நடித்தவர், ஓர் இளைஞர்.
கிராமத்து மக்கள் உற்சாகமாக அந்தக் காட்சியில் மூழ்கி இருந்தார்கள். அன்று பார்த்து, பாஞ்சாலிக்குச் சேலைகளை வழங்க வேண்டிய கிருஷ்ண பரமாத்மா வேடம் ஏற்று நடிப்பவர் வரவில்லை.
சேலையை உருவும் துச்சாதனன் நடிகருக்கு இந்த விஷயம் தெரியாது. வழக்கம் போலப் பாஞ்சாலியின் சேலையை வெறித்தனமாகத் துச்சாதனன் பிடித்து இழுக்க, கிருஷ்ண பகவானிடமிருந்து சேலைகள் வராது போக, பெண் வேடத்தில் நடித்த இளைஞரின் கால்சட்டை தெரிந்து.
உடனே அவர் நிலையைச் சமாளித்துக்கொண்டு, "கிருஷ்ணா, ஆபத்பாந்தவா, அனாதரட்சகா, பெண்ணாக இருந்த என்னை ஆணாக மாற்றி அற்புதம் செய்து விட்டாயே!" என்று வசனம் பேசினார். கிராமத்து மக்கள் இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.

வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகும் -
இது பழமொழி அல்ல.
அற்புதமான தியான
சூத்திரம்.
தொடர்ந்து இருபது
நிமிடங்கள்
சிரிப்பதே ஒரு
தியானமுறை.
சொர்க்கத்தைப் பார்க்க
வேண்டுமா! சிரி.
முழுமையாகச் சிரி!!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். இது வெறும் பழமொழி அல்ல. மருத்துவக் குணம் கொண்ட தியானமுறைச் சூத்திரம். தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை. ஜென் புத்திஸத்தில் தொடர்ந்து சிரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நாளில் அரசர்கள், சிரிப்பின் அவசியத்தை உணர்ந்திருக்காவிட்டால், தெனாலி ராமனும் பீர்பாலும் நமக்குக் கிடைக்காமல் போயிருப்பார்கள்.
சிரிப்பு நமது அகங்காரத்தை
உடைக்கிறது. சிலர் கூட்டத்தில் சிரிக்க
மாட்டார்கள். அவ்வாறு சிரிப்பது, தங்களைச்
சாதாரணமாக மாற்றிவிடுகிறது என்று
அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், வாய் விட்டுச் சிரிக்கும் தலைவர் தனக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்று அந்தக் கூட்டத்திலேயே கரைந்து ஒன்றாகி விடுகிறார். அகங்காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்கமாக இருப்பார்கள்.
சிரிக்கின்றபோது வெறுமையாகி விடுகின்ற சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி.
பல நேரங்களில் கவலைகளால் மனம் சோர்ந்து ஒரு வகையான மனஅழுத்தம் வந்துவிடுவது உண்டு. அந்த நேரங்களில் சிரிப்பு மருந்தாகும்.
பெரிய விஷயத்தைக்கூட வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லிவிடுவார்கள் சிலர். காரணம், அவர்களிடம் உள்ள சிரிப்புணர்ச்சி. ஒரு வீட்டில் மனைவி சமையல் அறையில் வேலையாக இருந்தார். அப்போது சத்தம் கேட்டது. "என்ன சத்தம்?" என்று மனைவி கேட்டார். "ஜன்னலுக்கு வெளியே சட்டை விழுந்துவிட்டது" என்றார் கணவன்.
"சட்டை விழுந்ததற்கா இவ்வளவு சத்தம்?" என்று மீண்டும் கேட்டார் மனைவி. "அந்தச் சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கணவர் பதில் சொன்னவுடன், மனைவி குறுகிப் போனார்.
மனமுதிர்ச்சி பெற்ற நிலையில் இருந்த அந்தக் கணவர், தன்னை தன் மனைவி மதிப்பதில்லை என்பதை உணர்த்த நகைச்சுவையோடு சொன்னார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், சச்சரவு இல்லாமல் முடித்துவிட்டார்.
கண் டாக்டர் ஒருவர் மூன்று கண்ணாடிகளை அவரது மேஜையின் மேல் வைத்திருந்தார். அவரிடம் தன் கண்களைச் சரிப்படுத்த வந்திருந்த ஒருவர், முதல் கண்ணாடியைச் சுட்டிக்காட்டி, "இது எதற்கு?" என்று கேட்டார், "இது கிட்டப் பார்வைக்கு" என்றார் டாக்டர்.
இரண்டாவது கண்ணாடியைக் காட்டி, "இது எதற்கு?" என்று கேட்டார், "இது எட்டப் பார்வைக்கு" என்றார் டாக்டர்.
மூன்றாவது கண்ணாடியைக் காட்டி, "இது எதற்கு?" என்று கேட்டார். உடனே டாக்டர், "இது மற்ற கண்ணாடிகள் எங்கே இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு" என்றார்.நோய் என்பது பொதுவானது. அது உங்களுக்கும் வரும். எனக்கும் வரும். எல்லோருக்கும் வரும் என்பதை உணர்த்தத்தான் டாக்டர் அப்படிச் சொன்னார்.
| மு | சிரிக்கிற போது வெறுமையாகி விடுகிற சந்தர்ப்பம் |
|---|---|
| த | கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை |
| ல் | அடைவதற்கு முதல்படி! |
| ப | |
| டி. |
நகைச் சுவை உணர்வு பெற்ற ஒருவரால்தான், இக்கட்டான சூழ்நிலையைக்கூட இனிமையாக அணுக முடியும்.
இக்கட்டான நேரத்திலும் சிரிக்க வைக்கச் சிலரால் மட்டுமே முடியும். ஹிட்லருடைய ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். பல அடுக்குகள் கொண்ட ஒரு மாடியில், ஹிட்லர் - பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். தமது வல்லமையைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்ட நினைத்த ஹிட்லர், ஒரு சிப்பாயை மேலே இருந்து கீழே குதிக்கச் சொன்னார். உடனே அவர், குதித்து நொறுங்கிப் போனார். 'சிப்பாய்தானே குதித்திருக்கிறார்' என்று பத்திரிகையாளர்கள் நினைத்துவிடுவார்களோ என்று கருதிய ஹிட்லர், ஒரு மேஜர் ஜெனரலை அழைத்து, கீழே குதிக்குமாறு உத்தரவிட்டார்.
அவர் கீழே குதிக்க முனைகிற போது, ஒரு பத்திரிகையாளர் பாய்ந்து வந்து, அவரைத் தடுத்தார். அப்போது அந்த அதிகாரி, அந்தப் பத்திரிகையாளரின் காதுகளில், "இந்தக் கொடியவனிடமிருந்து நான் தப்பித்துக்கொள்கிற ஒரே ஒரு சந்தர்ப்பத்தையும் கெடுத்துவிட்டாயே, பாவி" என்றார். வரலாறு முழுக்க இப்படிச் சிரிப்புகள் காணப்படுகின்றன. சிரியுங்கள். எதை நினைத்து என்று கேட்கிறீர்களா?
உங்களை நினைத்து நீங்களே சிரியுங்கள்! நம்மையே நாம் நினைத்துப் பார்த்தால், நாமே நமக்கு ஒரு கேலிப்பொருளாவோம். அடுத்தவர்களைக் கேலி செய்வதை விட்டுவிட்டு, நம் நிலை பற்றி நமக்கு முழுமையாகத் தெரிந்தால்தான், நம்மைப் பார்த்து நாம் சிரிக்க முடியும். நம்மைப் பற்றித்தெரிந்து கொள்வோம்...